கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.



அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது.

கொழும்பு - மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச் சேவையின் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்திய பிறகு, இந்த திட்டம் 2020 இல் தொடங்கி 2024 நடுப்பகுதியில் முடிக்கப்பட ஏற்பாடாகி இருந்தது.

இந்தத் திட்டத்திற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்குகிறது. அதற்காக ஜப்பான் அரசாங்கம் 1,850 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது.

ஆனால் கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காரணமாக இந்த இலகு புகையிரதத் திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானுக்கான கடந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் விளைவாக இரத்துச் செய்யப்பட்ட இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

16 கிலோமீற்றர் நீளம் மற்றும் 16 நிறுத்தும் நிலையங்களுடன் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த புகையிரத சேவையின் ஊடாக மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 30 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

இந்த ரயில் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் 4 நிமிடங்களுக்கும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி