தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணி ஆகியவை தொடங்கியுள்ள தொடர்
வேலைநிறுத்தத்தால், மத்திய தபால் பரிவர்த்தனை மையம் மற்றும் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 15 இலட்சம் கடிதங்கள் தேக்கமடைந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை (16) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (17) பெறப்பட்ட கடிதங்கள் மத்திய தபால் பரிவர்த்தனை மையம் மற்றும் தபால் நிலையங்களில் உள்ளதாகவும், கடந்த 17ஆம் திகதிக்குள் பல பிராந்திய தபால் நிலையங்களில் இருந்த கடிதங்கள் மத்திய தபால் பரிவர்த்தனை மையத்திற்கு வந்துவிட்டதாகவும் கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதன்படி, மத்திய தபால் பரிவர்த்தனை மையத்தில் சுமார் 10 இலட்சம் கடிதங்களும் பொருட்களும், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் சுமார் 5 இலட்சம் கடிதங்களும் உள்ளதாகவும், வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய கடிதங்களோ அல்லது பொருட்களோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தபால் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களின் தொழில்முறை பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக தபால் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தெரிவிக்கவில்லை என்றும், வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் பல தபால் நிலையங்கள் நேற்று (18) மூடப்பட்டதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நுவரெலியா தபால் நிலையத்திற்கு வந்த பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து நேற்று முன்தினம் () நள்ளிரவு முதல் தொடங்கியுள்ள தொடர் வேலைநிறுத்தம் அநியாயமானது என்று தபால் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார கூறினார்.
ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்திற்கு 19 காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் மூன்று காரணங்கள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக மேலதிக நேர கொடுப்பனவு கோரிக்கை ஒன்று இருப்பதாகவும், அதை நிறைவேற்றுவது கடினமான நிலை என்றும் அவர் கூறினார்.
கைரேகை இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு இருப்பதாகவும், கொடுப்பனவு தாமதம் ஒரு உள் விவகாரம் என்றும், அது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான விவகாரம் அல்ல என்றும் அவர் கூறினார்.
தபால் சேவை அதிகாரிகளின் சேவை விதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களை கூறுவதால் அந்த விதிகள் தாமதமாவதாகவும் தபால் தலைவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே 1,000 தற்காலிக பதிலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதற்கும், மேலும் 1,000 புதியவர்களை பதிவு செய்வதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டிட வாடகை செலுத்தாத துணை தபால் நிலையங்களுக்கு அந்த பணத்தை விரைந்து செலுத்துவது போன்ற கோரிக்கைகள், இந்த வேலைநிறுத்தத்தில் துணை தபால் நிலையங்களை இணைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன என்றும், துணை தபால் நிலையங்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
தபால் துறையில் அதிக எண்ணிக்கையில் துணை தபால் நிலைய அதிகாரிகளே இருப்பதாகவும், 3,000-க்கும் மேற்பட்ட துணை தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்காததால் நேற்று (18) துணை தபால் நிலையங்கள் திறந்திருந்ததாகவும் அவர் கூறினார்.