சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒரு சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். அதில், சுகாதார
மற்றும் ஊடக அமைச்சில் வெற்றிடமாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊழியர்கள் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகளின் தன்மைக்கு ஏற்ப அத்தியாவசிய கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில், அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுமுறை பெற்று வௌிநாட்டு வேலைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த சுற்றறிக்கையின்படி, இவ்வாறு விடுமுறை வழங்குவது இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது ஐந்து வருட விடுமுறை பெற்று வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மீண்டும் விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அரசாங்க அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் வினவியபோது, ஐந்து வருட விடுமுறை பெற்று வௌிநாடு சென்ற சுகாதாரத் துறையினரை மீண்டும் அழைக்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், கடந்த காலத்தில் நிலவிய பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அவர்கள் மீண்டும் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது படிப்படியாக அந்த குழுவினர் நாட்டிற்கு வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு பணியிடத்தில் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுகாதார ஊழியர்கள் வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையானது தன்னிச்சையான, நோக்கமற்ற முடிவு என அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
சுகாதார செயலாளரின் இந்த தன்னிச்சையான முடிவு, நாட்டின் முழு வைத்தியசாலை கட்டமைப்பு, தேசிய நோய்த்தடுப்பு, நோயாளி பராமரிப்பு சேவைகள் உட்பட அனைத்து சேவைகளையும் மேலும் சீர்குலைக்க வழிவகுக்கும் என அதன் தலைவர் ரவீந்திர கஹதவஆரச்சி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் (2024) 1118 விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் சேவையை விட்டு விலகி வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும் அவர் கூறினார்.
விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் அறிவிக்காமல் சேவையை விட்டு விலகி வௌிநாடுகளில் பணிபுரிவதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டில் 592 தாதியர்களும், 2024ஆம் ஆண்டில் மேலும் 592 தாதியர்களும் சேவையை விட்டு வௌியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் (2024) சம்பளமில்லாத விடுமுறை பெற்று 487 தாதியர்கள், 388 வைத்தியர்கள், அறிவிக்காமல் சேவையை விட்டு வௌியேறிய 217 வைத்தியர்கள், அறிவிக்காமல் சேவையை விட்டு வௌியேறிய 26 விசேட வைத்திய நிபுணர்கள், விடுமுறை பெற்று வௌிநாடு சென்ற 22 விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.