சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும் மத்திய வங்கி

ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMFக்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க  நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இதன்படி, நாட்டுக்கான தனது கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சர்வதேச நாணய நிதியம், இம்மாத இறுதிக்குள் தனது கடமையை நிறைவேற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களின் பேச்சுரிமையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, எந்த வகையான நாசகார செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மற்றொரு ஜூலை 09ஆம் திகதி சம்பவமொன்று இந்நாட்டில் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று கோரியதோடு, நாட்டை சீர்குலைப்பதை தடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் முப்படை மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்  செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீதி வரைபடம்   என்பவற்றுடன் அந்த ஒப்பந்தத்தை   நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு மிகவும் கடினமான பல பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம்  எடுத்துள்ளதாகவும் தற்போது பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும்  ஏற்படும்  கஷ்டங்கள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை  பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல்  என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரி நீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி  இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள்  ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க  தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி