சுமார் மூன்றரை வருட காலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இலங்கையின் மிகப் பெரிய மனிதப் புதைகுழி

தொடர்பான விசாரணையை மேலும் சில காலங்களுக்கு ஒத்திவைக்க பொலிஸாரால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதியன்று இது தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் ஏ.எஸ்.இப்துல்லா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய (30) தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்காக, அதற்கருகில் இருக்கும் வர்த்தக நிலையங்களை உடைத்து அப்புறப்படுத்தவும் நகருக்கு நீர் விநியோகிக்கும் குழாய்நீர்க் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யவும் வேண்டிய நிலைமை காணப்படுவதால், அதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்று பொலிஸார் அறிவித்தனர்.

அதனால், மன்னார் ச.தொ.ச மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு, மேலும் சில காலம் அவசியம் என்றும் பொலிஸார் அறிவித்தனர்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், இதற்கு முன்னர் அந்தப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் எவையும், இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எடுத்துரைத்தார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் சட்டத்தரணி நிரஞ்சன் எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த நீதவான், எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதியன்று, மேற்படி கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் ஏனைய பொருட்களை ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குமாறு  பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

300 நாட்கள்

28 குழந்தைகள் உட்பட ஆண் மற்றும் பெண்களின் மனித எச்சங்கள், மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியை மேலும் தோண்டி விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் 2022 பெப்ரவரி 22ஆம் திகதியன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மன்னார் சதொச வளாகத்திலிருந்து 2018 மே மாதக் காலப்பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட புதைகுழி தோண்டும் பணிகள், சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர் 3 மாதங்களுக்கு மாத்திரமென்றே நிறுத்தப்பட்டன.

அதன் பின்னர், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கும் வரையில், புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எவ்வாறெனினும், மேற்படி புதைகுழியைத் தோண்டும் பணிகளுக்கான செலவு விவரங்கள் தொடர்பில், மே 18ஆம் திகதியன்று அறிக்கை சமர்ப்பிப்பதாக, ஒக்டோபர் 17ஆம் திகதியன்று நடைபெற்ற மேற்படி மனிதப் புதைகுழி விவகார வழக்கின் போது, விசேட தடயவியல் நிபுணர் சுமிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

மேற்படி விசாரணகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதில் பிரச்சினை இருப்பின், அதற்குத் தேவையான நிதியை காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக வழங்க ஏற்பாடு செய்வதாக, அவ்வலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தெரிவித்திருந்ததாக, நீதிமன்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில் ஆறு, புளோரிடாவின் மியாமியில் அமைந்துள்ள பீட்டா அனலிடிக்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போது, அவை கி.பி 1404 முதல் 1635ஆம் ஆண்டுகளுக்குரியது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவ்வறிவித்தலை முற்றாக மறுத்த களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ, மேற்படி மனித எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்ட ஏனைய பொருட்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டுமென்று கோரி, அதற்கான ஆய்வுப் பணிகளை 2019இல் ஆரம்பித்தார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களில், ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதோடு, ஒன்றோடொன்று கட்டி வைக்கப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி