ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை குறைத்து மதிப்பிடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை

என்றும் அவ்வாறு இடம்பெறுமானால் கட்சியின் பலத்தை அவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்ட தயாராக உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் மகிழ்ச்சியடையக்கூடியதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று (15) பிற்பகல் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட மட்டத்தில்  நடத்தவுள்ள மாநாட்டுத் தொடரின் முதலாவது மாநாடு பெரும் எண்ணிக்கையான கட்சி அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் இரத்தினபுரியில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக களமிறங்கியபோதும் வாக்கு பின்புலத்தை கருத்திற்கொள்ளும்போது அந்த எவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவியைப்போன்றே ஐந்து வருடங்களாக மக்கள் நலன்பேணலுக்காக மேற்கொண்ட தூய்மையான நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளுடனேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இருதரப்புகளிலிருந்தும் அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்விதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பொதுஜன முன்னணியுடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பது தாய் நாட்டையும் கட்சியின் தனித்துவத்தையும் முன்னிறுத்தியே ஆகுமென்றும் குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டிருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சமர்ப்பித்துள்ள கடிதத்தின் காரணமாகவேயாகும் என்றும் அது குறித்து அதன் உயர்மட்டத் தலைவர்களுக்கும் கீழ்மட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி உணர்வு இருந்தபோதும் இடைநிலையில் உள்ள சிலர் அதனை மறந்து இருப்பது குறித்து தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அவ்விதமான எந்த நிபந்தனையும் கிடையாதென்றும் நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதிக்கும் ஊழல், மோசடியற்ற சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான ஒரு நாட்டுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க. லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, திலங்க சுமதிபால, வீரகுமார திசாநாயக்க, ரோஹண லக்ஷமன் பியதாச, சாந்த பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க ஆகியோரும் அத்துல குமார ராகுபத்த, பானு மனுப்பிரிய உள்ளிட்ட இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களும் கட்சி உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி