1200 x 80 DMirror

 
 

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.

அதன் உரை வடிவம் இது.

கே: இந்த நெருக்கடிக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போதைய நிர்வாகம், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி, மற்றும் நாடளுமன்றத்தில் இருக்கும் அவரது கூட்டாளிகள் இந்த சிக்கலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது இலங்கை ஒரு பேரழிவு நிலையை சந்தித்து வருகிறது.

கே: இந்த அரசை அகற்ற உங்களது திட்டம் என்ன?

பதில்: அரசியல் சாசனம் பரிந்துரைக்கும் அத்தனை ஜனநாயக முறைகளையும் நாங்கள் கையாள்வோம் — மக்களின் அதிகாரம் நிலைத்திருப்பதற்காக. தெருவில் போராடும் மக்கள் முழுமையான மாற்றங்களைக் கோருகிறார்கள். ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம். அவர்கள் ஜனாதிபதியை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள்.

கே: என்னென்ன வழிமுறைகள் உங்களிடம் உள்ளன?

பதில்: பல உள்ளன. மிக ஆற்றல்மிக்க செயல்பாட்டினை உறுதி செய்வதற்காக, நாடாளுமன்றத்தின் மற்ற உறுப்பினர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம். பல வழிமுறைகள் உள்ளன.

கே: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானமோ, குற்றப் பிரேரணையோ கொண்டு வருவீர்களா?

பதில்: குற்றப் பிரேரணை, நம்பிக்கையில்லாத் தீர்மானம், நிர்வாக ஜனாதிபதித்துவத்தை ஒழிப்பது போன்ற புதிய கருத்துக்களை முன்னெடுப்பது, 20ம் சட்ட திருத்தத்தை திரும்பப்பெற்று, 19-ஆவதைக் கொண்டு வருவது போன்ற பல வழிகளில் நாங்கள் செயலாற்றுவதைப் பரிந்துரைக்கிறோம். ஆனால் தற்போதைக்கு நாடாளுமன்றத்தின் மற்ற உறுப்பினர்களோடு எங்களை விவாதிக்க விடுங்கள். அதன்பிறகு எங்கள் செயல்முறையைத் தெளிவாகச் சொல்கிறோம்.

கே: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நீங்கள் தோல்வி அடைந்தால், அதை ஏறுக்கொள்வீர்களா? அப்போது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும்?

பதில்: முதலில், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் வெல்வோம், தொடர்வோம் என்று நினைக்கிறோம். ஒரு பேச்சுக்காக, எங்களுக்கு எண்ணிக்கை கிடைக்கவில்லையென்றால், அதை தோல்வி என்று எப்படி சொல்ல முடியும்? சுயநலம் மிக்க, நாட்டை சூறையாடிய ஒரு அரசியல் தலைமையை இன்னும் ஆதரிக்கும் உறுப்பினர்களுடைய தோல்வி. நீங்கள் சொல்வது போல நாங்கள் வெல்லாவிட்டால், அது எங்கள் தோல்வியல்ல, அது மக்கள் மனநிலையோடு ஒத்துப் போகும் முடிவினை எடுக்கும் தைரியமற்ற மற்ற நாடளுமன்ற உறுப்பினர்களுடைய தோல்வி.

காலி முகத் திடலில் இருக்கும் இளைஞர்களும், பொது சமூகமும், பெரும்பான்மையான குடிமக்கள், மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள், பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். 'இந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்தால், அடுத்த தேர்தலில் போட்டியிடாதீர்கள்' என்ற வாசகம் இப்போது சொல்லப்படுகிறது. இலங்கையில் மக்கள் அதிகாரமே கோலோச்சுகிறது, மக்கள் அதிகாரமே இலங்கையில் தலையெழுத்தை முடிவு செய்யும்.

கே: நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களுமே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று பல போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். ஏனெனில் மக்கள்தான் இந்த ஜனாதிபதியையும் இந்த சட்டத்தையும் தேர்ந்தெடுத்தார்கள். மேலிருந்து யாரும் அவர்களை முன்மொழியவில்லை. இந்த நாடாளுமன்றமும் இந்த ஜனாதிபதியும் கடவுளின் கொடை அல்ல. ஜனநாயக சக்திகள் முடிவு செய்தன, இவை இந்த நாட்டை ஆளச் சிறந்தவை என்று. மக்களை தவறாக வழிநடத்தியவர்கள், பிரகடனத்தை மீறியவர்கள், மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்தவர்கள் — அவர்களே இதற்குக் காரணம்.

நிச்சயமாக நான் இதற்குப் பொறுப்பேற்க விரும்பவில்லை, ஏனெனில் நாங்கள் ஒரு புதிய கட்சி. பிப்ரவரி 2020ல் தான் நாங்கள் கட்சியை பதிவு செய்தோம். நாங்கள் ஒரு புதிய பயணத்தைத் துவங்குகியிருக்கிறோம். அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவரும் கொள்கையினால் வழிநடத்தப்படும் பயணம் — ஒரு சிலருக்கோ, ஒரு அரசியல் குடும்பத்தினருக்கோ அல்ல. எங்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன, நவீன பார்வை உள்ளது. இலங்கையை புனரமைப்போம். அனைவருக்கும் செழிப்பு என்பதை நிஜமாக்குவோம்.

கே: நாட்டை ஆளும் பொறுப்பு கிடைத்தால், உங்களது திட்டம் என்னவாக இருக்கும்?

பதில்: மக்கள் அந்த பொறுப்பை எனக்குத் தர வேண்டும். அரசியல் பேரத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. அது ஜென் ஸி (Gen Z - 1990களின் பிற்பகுதியில் தொடங்கி புதிய நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரை பிறந்தவர்கள்) இளைஞர்கள், நாட்டின் பெரும்பான்மை மக்கள், மற்றும் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்து இந்த ஆட்சியின் வீழ்ச்சியைக் கோரும் மக்களுடைய விருப்பத்திற்கு எதிரானது. என் தாய்நட்டின் மக்களுடைய விருப்பத்திற்கு எதிரான எவ்வித அரசியல் ஒப்பந்தத்திலும் நான் ஈடுபட மாட்டேன்.

கே: தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற நீங்கள் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

பதில்: முதலும் முக்கியமுமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித்துவ முறையை (Executive presidential system) மாற்ற வேண்டும். நிச்சயமாக. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் கூட இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வோம். கண்காணிப்புகள் இருப்பதை உறுதி செய்வோம், ஒற்றைப்படையாக முடிவுகள் எடுக்கும் முறையை எதிர்ப்போம்.

உண்மை, தரவுகள், அறிவியல் இவை சார்ந்த முடிவெடுத்தல் முறையை, நிபுணர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்கும் முறையை, அனைத்தையும் உள்ளடக்கிய முடிவெடுத்தல் முறையை, சரியான ஆலோசனை, ஒருமித்த கருத்துடன்… கொள்கை முடிவுகளில்… இந்த நட்டின் தற்போதைய குழப்பம், தலையாடடியே பழகப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களால், ஜனாதிபதியின் முன் அடிமைபட்டுக் கிடப்பவர்களால் உருவானது.அத்தகைய பழமைவாத, மேட்டிமைத்தனமான முடிவெடுத்தல் முறையை ஒழித்துவிட்டு நவீன முறைக்கு, ஜனநாயகத்துக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். போதுமான அளவு ஜனநாயகமே இந்த நாட்டு மக்கள் சந்தித்துவரும் துயரத்தைப் போக்கும் முதற்படி.

கே: நாட்டை மீட்க ஐஎம்எம் நிதியுதவி போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இது பலனளிக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: பலனளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சரியான கொள்கைகளை நான் ஆதரிப்பேன். ஆனால் அரசாங்கம் சரியான கொள்கைகளை பின்பற்றவில்லை. வேண்டுமென்றே இந்த நாட்டை அவர்கள் ஒரு குழப்பமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார்கள். தவணைகளை நிறுத்தி வைக்கவும் தள்ளிவைக்கவும் முயற்சிக்க வேண்டும். நமது இருதரப்பு, பலதரப்பு கூட்டாளிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். நமது கடன் பத்திரங்களை வைத்திருப்போருடனும் பேச்சு நடத்த வேண்டும்.

கே: இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

பதில்: இலங்கைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவும் படி இந்திய அரசின் பிரதிநிதிகளிடம் கூறியிருக்கிறேன். மேலும் இந்தியாவின் வரிசெலுத்துவோரால் தரப்படும் உதவி, மக்களின் நலனுக்குப் பயன்படுவதை உறுதி செய்யுமாறு கூறியிருக்கிறேன். அத்தகைய நன்கொடையும் உதவியும் ஆளும் வர்க்கத்திடம், ராஜபக்ஷ குடும்பத்திடம் திசை மாறிச் சென்றுவிடக் கூடாது என்று கூறியிருக்கிறேன். தரப்படும் நன்கொடையும் உதவியும் இலங்கை மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும்.

கே: இலங்கையின் இந்தச் சிக்கலை அண்மை நாடுகள் சாதகமாக எடுத்துக் கொள்கின்றன என்று நினைக்கிறீர்களா?

பதில்: இந்த யதார்த்த அரசியல் உலகத்தில் எந்தவொரு நாடும் தனது தேசிய நலனை அடையவே முயலும். இலங்கையை ஆண்டுவரும் நிர்வாகங்கள் தேசிய நலனை முன்னிறுத்தாமல் குடும்ப நலனை முன்னிறுத்தியிருக்கின்றன. மற்ற நாடுகள் தேசிய நலனை முன்னிறுத்தியிருக்கின்றன. இந்த அதிகார விளையாட்டில், இந்த யதார்த்த அரசியல் உலகில், மக்கியவலியின் கருத்துக்கள் ஜீவித்து இருக்கின்றன என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாடும் தங்கள் நலனுக்காக வேலை செய்யும். அதைத்தான் இலங்கை செய்ய வேண்டும், அதைத்தான் நான் செய்வேன் — மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால். நிர்வாகத்தில் எனக்கு முதன்மையான உந்துதலாக இருக்கப்போவது இலங்கையின் தேசிய நலனை முன்னெடுத்துச் செல்வது. இலங்கையை சர்வதேசிய நாடாக்க, உள்நாட்டு வெளிநாட்டு அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க, நாங்கள் யதார்த்த அரசியல் போக்கினை கையாளுவோம். தாய்நாட்டை மீட்டெடுப்போம், அனைவருக்கும் செழிப்பினை வழங்குவோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. பகிர்ந்த செழிப்பு - இதுவே எங்கள் கொள்கை மேடைகளில் ஒளிரும் தீப்பந்தம்.மற்ற நாடுகளின் மீதான சார்பினை குறைப்பதையும் உறுதி செய்வோம். ஏற்றுமதி சந்தையை பல்வகைபடுத்தவும், அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற எந்த துறையிலும் ஒப்பீட்டளவில் இலங்கையின் நலனை முன்னெடுப்போம். இதையே சஜித் பிரேமதாச கூட்டணி செய்யும்.

கே: நீங்கள் இந்தியாவை விட சீனாவையே நாடுவதாக கருத்துக்கள் உள்ளன. இது உண்மையா?

பதில்: இது நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் குறித்த குழந்தைத்தனமான பார்வை. நாங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு மதிப்பளிக்கும் நாடுகளுடன் மிகவும் நேர்மறையான, உறுதியான, பலமான உறவை நிலைநாட்டுவோம். எங்களின் சர்வதேச உறவுகள் குறித்த நோக்கத்தில் இதுவே முதன்மையாக இருக்கும். பரஸ்பர நன்மை, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஒத்துழைப்பு, இறையாண்மை ஆகியவையே எங்களின் வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படைகள்.

 --நன்றி பிபிசி

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி