சித்திரை புத்தாண்டுக்கு தலைநகரில் இருந்து சொந்த இடங்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் திங்கட்கிழமையின் பின்னர் செல்வதற்கு எதிர்பார்க்க வேண்டாம் என அகில இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து சேவை சங்கம் அறிவித்துள்ளது.


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் வாரம் முதல் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் எனவும் பொதுமக்கள் எம்மை மன்னிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம், இருப்பினும் அரசாங்கம் எமது கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கவில்லை.

தனியார் பஸ் சேவை உரிமையாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்த போதும் பொது மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள சூழ்நிலையில் அவ்வாறு செய்வது பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் அமையும் என்ற காரணத்தினால் போராட்டத்தை கைவிட்டோம்.

எனினும் தற்போது எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் எவரிடம் முறையிடுவது என்ற பிரச்சினை தோற்றம் பெற்றுள்ள காரணத்தினால் தனியார் பஸ் போக்குவரத்து சேவையின் ஸ்தீரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் வாரம் முதல் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம். எரிபொருள் கிடைப்பனவில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் சேவையில் ஈடுப்படுவதற்கு சேவையாளர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

இவ்வாறானதொரு அவலநிலைமை முன்னொருபோதும் தனியார் பஸ் சேவை எதிர்க்கொள்ளவில்லை, சிறந்த திட்டங்களை செயற்படுத்தாதன் விளையை தற்போது எதிர்க்கொள்கிறோம் என்றார்.

 எனினும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தலைநகர் கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை வழமையை விட மேலதிக பஸ்களும் , புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல வரை 13 , மட்டக்களப்பு வரை 15 , பெலியத்தை வரை 8, புத்தளம் வரை 4 என புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இன்று முதல் கொழும்பிலிருந்து ஏனைய நகரங்களுக்கு 172 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் திகதியாகும் போது இந்த எண்ணிக்கை 296 ஆக அதிகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பிலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் செல்வதற்கு பிரதான வீதிகளிலும் , அதிவேக வீதிகளிலும் 578 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதே போன்று கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, நானோயா, பதுளை, தெமோதர மற்றும் எல்ல வரை 13 சந்தர்ப்பங்களிலும் , வடக்கு நோக்கி குருணாகல், கனேவத்த, மஹவ, அநுராதபுரம், காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்பு வரை 15 சந்தர்ப்பங்களிலும் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 5 புகையிரதங்கள் மாத்திரம் காலி, மாத்தறை, பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு 8 சந்தர்ப்பங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி