தற்போதைய அரசாங்கம் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை என சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார். மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும் சபை முதல்வர் கூறினார்.

கூட்டு எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு பயந்து ஆளும் கட்சி மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.  மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

ரவி கருணாநாயக்கா கேட்ட கேள்வி!

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என அமைச்சர் ரவீ கருணாநாயக்கா கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியிடத்தில் கேட்டதைத் தொடர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்திருந்தது. மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படக் கூடாது என்ற ஜனாதிபதியின் உத்தரவு தற்போதும் அமுலில் உள்ளதா?  என்றும் அமைச்சர் இதன் போது ஜனாதிபதியிடம் தொடர்ந்தும கேள்வி எழுப்பினார்.

எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது குறிப்பிட்டார்.

விமல் வீரவங்சவின் இணையத்தளம் வெளியிட்ட செய்தி

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் இயக்கப்படும் ராஜபக்ஷ சார்பு இணையத்தளம் இச்செய்தியை பின்வருமாறு வெளியிட்டிருந்தது.

“ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குச் சார்பான பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எத்தனோல் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சிக்கு சார்பான இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எதனோல் இலஞ்சம் வழங்கப்பட்டிருப்பது மென்மேலும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்துக் கொள்வதற்கேயாகும்”  என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சஜித் தரப்பினைச் சேர்ந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனோல் இறக்குமதி செய்யும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல முற்றாக மறுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி