leader eng

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது.

இலங்கைக்கு அதிகளவிலான வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய பிரதான ஏற்றுமதித்துறையாக தேயிலை ஏற்றுமதி காணப்படுகின்றது. இந்த தேயிலை துறையின் வழியாக சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை வருடம் தோறும் இலங்கை பெற்றுக்கொள்கின்றது. இலங்கை, ஆண்டுதோறும் ஈராக்கிற்கு அதிகளவிலான தேயிலையை ஏற்றுமதி செய்வதுடன், அதற்கு அடுத்ததாக துருக்கிக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

மூன்றாவது நாடாக காணப்படும் ரஷ்யாவிற்கு கடந்த ஆண்டு சுமார் 29 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இதனூடாக நாட்டிற்கு 24,822 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி முல்லிகொட தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில், யுக்ரேன் 18வது இடத்தை பிடிக்கின்றது. யுக்ரேனுக்கு கடந்த ஆண்டு 04 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், அதனூடாக இலங்கைக்கு 4,279 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலையில், குறித்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நிலவி வருகின்றமையினால், தேயிலை ஏற்றுமதி ஊடாக நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்வு கூறப்படுகின்றது.

தேயிலை தொழில்துறை பாதிப்பு ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக, இலங்கையின் தேயிலை துறை பெரிதும் பாதிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், சர்வதேச விவகார பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

ஐரோப்பிய நாடுகள் இலங்கையிடமிருந்து குளிர்கால தேவைக்காக கொள்முதல் செய்யும் தேயிலை தொகையின் அளவு, கடந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டது என அவர் கூறுகின்றார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நாடுகளில் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு குளிர்கால தேவைக்கான தேயிலை கொள்வனவானது, கிலோகிராம் ஒன்றிற்கான விலை மிக அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக, 2020ம் ஆண்டு 866.70 ரூபாயாக காணப்பட்ட தேயிலை ஒரு கிலோகிராமின் விலை, 2021ம் ஆண்டு இறுதி காலப் பகுதியில் 920.76 ரூபாயாக காணப்பட்டது.

இதன்படி, உயர் நிலப்பரப்பில் வளரும் தேயிலையை, ரஷ்யா போன்ற நாடுகள் அதிகளவில் இம்முறை கொள்வனவு செய்ததாகவும் பாரத் அருள்சாமி கூறுகின்றார். இலங்கைக்கு என்ன சிக்கல்? இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், வங்கி கொடுக்கல் வாங்கல் முறைக்கும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது.

இதனால், தற்போது காணப்படுகின்ற யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு தேயிலையை நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியாது என்பதுடன், ரஷ்யாவுடன் நட்புறவை கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகளின் ஊடாகவே ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

"இவ்வாறு சீனா ஊடாக தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில், அது சீனாவின் நாணய அலகான யென் நாணயத்தின் அடிப்படையிலேயே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதுடன், சிலோன் டீ என்ற பெயருக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்" என அவர் கூறுகின்றார்.

"தேயிலை ஏற்றுமதியில் சீனா, இலங்கைக்கு போட்டி நாடு என்ற அடிப்படையில், சிலோன் டீ என்ற நாமத்திற்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி, ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அது தேயிலை உற்பத்தித்துறையை பாதித்து, அதனூடாக தேயிலை தொழில்துறையை நம்பி வாழும் மலையக தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என பாரத் அருள்சாமி கூறுகின்றார்.

தேயிலை ஏற்றுமதித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது, மலையகத்தில் தேயிலை தொழில்துறையை நம்பி வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் மக்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், சர்வதேச விவகார பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

'இதுவரை பிரச்சினை இல்லை'

ரஷ்யா - யுக்ரேன் யுத்தம் காரணமாக, இதுவரை இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என இலங்கை தேயிலை சபை தெரிவிக்கின்றது. எனினும், ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைக்கான பணத்தை பெற்றுக்கொள்வதில் சற்று தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக சபையின் தலைவர் ஜயம்பதி முல்லிகொட தெரிவித்துள்ளார். BBC tamil

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி