1200 x 80 DMirror

 
 

கம்பஹாவில் உள்ள "சிதுசர" என்ற உயர்தர மாணவர்களுக்கான தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சிசிடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் கம்ப நீதவான் மஞ்சுளா கருணாரத்னவிடம் இன்று மாலை அறிக்கை சமர்ப்பித்தனர். 2023 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவரின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் க.பொ.த உயர்தர பகுதி நேர வகுப்புகளுக்குச் சென்ற போது அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் கழிவறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்ததாகத் தனது நண்பிகளிடம் முறைப்பாடு செய்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் குறித்த தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தும் நபரின் தாயார் கழிவறையிலிருந்த கமராவை அகற்றியதை மாணவர்கள் பார்த்ததோடு, பெற்றோருக்கு இது தொடர்பில் தகவல் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து கல்வி நிறுவனத்தை நடத்திச்செல்பவரின் மனைவியினால் பின்னர் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த கமரா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கமராவை பொருத்தியவர் யார் என்பது முறைப்பாடு செய்தவர்களுக்குத் தெரியாத நிலையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு கோரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்வி நிறுவன உரிமையாளர், நிறுவனத்தை நடத்திச்செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். எனினும், இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்கவும் இன்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைத்தொலைப்போசி அல்லது கணினியில் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் வகையில் இந்த நவீன கமரா பொருத்தப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸ், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவரும் நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி