1200 x 80 DMirror

 
 

இலங்கையில் இந்திய மீனவர்களின் படகுகளை ஏலமிடும் விவகாரம் குறித்து பேசித் தீர்த்துக்கொள்ள, தமிழக பிரதிநிதிகள் சிலர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தமிழக மீனவர்களின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை முகாம்களில் கைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான தமிழக மீன்பிடி படகுகளை இலங்கை ஏலம் விடும் பணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.

இந்த விவகாரம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் நிலைப்பாட்டை தமிழ்ப் பத்திரிகையொன்று கேட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில்,
“இலங்கையில் இந்திய மீன்பிடி படகுகள் ஏலம்விடப்படுகின்றமை தொடர்பாக வெளியான பல்வேறு அறிக்கைகளும் செய்திகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தி கூறுகின்றோம். இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தனர். இலங்கை அரசாங்கத்திடம் இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

2014ஆம் ஆண்டு முதல், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுது;து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நல்லிணக்க அடிப்படையில் படகுகளை, தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டது அதன் அடிப்படையில், படகுகளை தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் தமிழக மீனவர்களால், இலங்கையில் தடுத்து கைபடுத்தப்பட்ட படகுகளை மீட்க முடியவில்லை. இதனையடுத்து 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன்' வளத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள படகுகளை, தமிழக மீனவர்கள் திருப்பி எடுத்துச் செல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் விபத்துள்ளாவதுடன் இலங்கை கடற்படை வீரர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதால், அந்தப் படகுகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக படகுகளை ஏலமிட்டு, கிடைக்கும் பணத்தை விசைப்படகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை செல்ல முடியாத சூழ்நிலையில், பயனற்று இலங்கை வசமுள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம், பறிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விசைப்படகுகளுக்கு 5 லட்ச ரூபாயும், நாட்டு படகுகளுக்கு ஒரு லட்சத்தி 50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்தது.

இதனை அறிந்த மீன் வளத்துறை, இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை, இன்று முதல் வரும் 10ஆம் திகதி வரை அந்தந்த கடற்படை தளத்தில் வைத்து ஏலம் விட உத்தரவிட்டிருந்ததது. இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் ஏலம் துவங்கி நடைபெற்று வருகிறது.

எனினும், இந்த ஏலமிடும் செயற்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அதிகாரிகள் இலங்கை வரவுள்ளதாகவும், இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளதாகவும் தற்போது கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி