ஆடை மற்றும் தொழில்துறை ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொவிட் -19 தொற்றிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கும், உற்பத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஐக்கிய ஆடைத் தொழிற்சங்க மன்றம், சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு இடையில் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, ஒவ்வொரு ஆடைத் தொழிற்சாலையிலும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் குழுக்களில் நிர்வாகத்திற்கு மேலதிகமாக தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து உற்பத்தி தொழிற்சாலைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதை இந்த குழுக்கள் உறுதி செய்யும்.

"இலங்கையில் மனித வளப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய்க்குப் பின்னர் வணிகங்களின் தொடர்ச்சியான உயிர்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது" என ஐக்கிய ஆடை சங்கங்கள் மன்றத்தின் செயலாளர் நாயகம் டுலி குரே தெரிவித்தார்.

தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்துறை முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையாக, வெளிப்படையாக தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்படும் தொழிலாளர்களின் குறைகளை மதிப்பாய்வு செய்ய JAAF செயற்குழு மற்றும் தொழிற்சங்க கூட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் பிரச்சினையைத் தீர்ப்பது இரு தரப்பினரின் பொறுப்பு என்பதை ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், இது தொழிலாளர்களின் சங்க சுதந்திரம் மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளனர்.

"இந்த ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம், இது முடிவெடுக்கும் செயற்பாட்டில் தொழிலாளர்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், குறைகளைத் தீர்ப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.

இது தொடர்பாக முதலாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி