1200 x 80 DMirror

 
 

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

தேர்தல் சீர்திருத்த மசோதா' சொல்வது என்ன?

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, குடிமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாலும் இது கட்டாயமாக்கப்படாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்களில் வெவ்வேறு முகவரிகளில் வசிப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் களையப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக, எந்தவிதக் கருத்தையும் வெளியிடாமல் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

தீர்ப்புக்கு எதிரான மசோதா

`தேர்தல் சீர்திருத்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்க்க வேண்டும்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், `` ஆதார் தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அது. அதில், `அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை' எனத் தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், `ஆதார் விவரங்களை சமூக நலத்திட்டங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது' எனவும் கூறிவிட்டனர். மத்திய அரசின் இந்த மசோதா, அந்தத் தீர்ப்புக்கு எதிராக உள்ளது'' என்கிறார்.

பாலிசி, கடன் விவரத்தை பகிராமல் இறந்த கணவர் - மனைவி என்ன செய்ய வேண்டும்?

ஆதார் அவசியமா? அந்தரங்க உரிமை அவசியமா?

தொடர்ந்து பேசிய ரவிக்குமார் எம்.பி, `` ஆதார் தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, 2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது, வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தது. அதன்படி, ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பதாகத் தெரிவித்தனர். `இவ்வாறு செய்யக் கூடாது' என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையும் விதித்தது.

5 கோடிப் பேரின் வாக்குகள் பறிபோகும்

ஆனால், நீதிமன்றம் தடை கொடுப்பதற்கு முன்னால், ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதனால் அவ்விரு மாநிலங்களிலும் 55 லட்சம் பேரின் வாக்குரிமைகள் பறிபோய்விட்டன. அதற்குள் நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. 2011 ஆம் ஆண்டு இதுதொடர்பாக ஓர் ஆய்வு நடந்துள்ளது. அந்த ஆய்வில், `ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைத்தால் ஐந்து கோடிப் பேரின் வாக்குரிமை பறிபோகும்' எனக் குறிப்பிட்டுள்ளது. அப்படியானால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் ஒருவரின் மதம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இலக்கு வைத்து அவர்களின் வாக்குரிமையை பறிக்க முடியும். அது சாத்தியமான ஒன்றுதான். காரணம், ஏற்கெனவே 55 லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோன உதாரணமும் உண்டு. இதனைத் திரும்பவும் கொண்டு வருவதன் மூலம் உள்நோக்கம் இருப்பதை அறிய முடியும்'' என்கிறார்.

ரவிகுமார்

ரவிகுமார்

`` கடந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில் 303 எம்.பிக்கள் பா.ஜ.கவுக்குக் கிடைத்தனர். அவர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சதவிகித வாக்குகளே ஆட்சியைத் தீர்மானிப்பதாக உள்ளது. அதனைக் கணக்கிட்டு எங்கெல்லாம் பா.ஜ.கவுக்கு மைனஸாக உள்ளதோ, அந்த இடங்களில் எல்லாம் வாக்குகளை இல்லாமல் செய்வதன் மூலம் நிரந்தரமாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடும். கூட்டணிகளே தேவைப்படப் போவதில்லை. இது மிகவும் ஆபத்தானது'' என்கிறார் ரவிக்குமார் எம்.பி.

மேலும், `` எவ்வளவு பேருக்கு இரண்டு இடங்களில் வாக்கு உள்ளது, அவர்களை மட்டும் எப்படிக் கண்டறிந்து நீக்குவார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அடையாளம் கண்டறிந்து நீக்குவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அதற்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் உள்ளது'' என்கிறார்.

புதுச்சேரி உதாரணம்

``ஆதார் தொடர்பான தகவல்கள் மூலம் மக்களிடம் எந்தவகையில் வாக்குகளைப் பெற்றுவிட முடியும்?'' என்றோம். ``ஆதாரில் செல்போன் எண் உள்ளது. வாக்காளர் அட்டையோடு செல்போன் எண்ணும் இருப்பதால் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்வதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. காரணம், புதுச்சேரி மாநிலத்தில் 2021 தேர்தலில் வாக்காளர்கள் வாட்ஸப் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.கவில் இருந்து தகவல் சென்றுள்ளது. செல்போன் எண் எப்படிக் கிடைத்தது எனப் பார்த்தால் அனைத்தும் ஆதாரில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஜனநாயகத்துக்கு ஆபத்தா?

இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆதாரில் இருந்து முறைகேடாகத் தகவல்களைத் திரட்டி தேர்தல் பிரசாரம் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி, ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. இதற்கு நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. இந்த வழக்கில், UIDAI எனப்படும் ஆதாரைக் கையாளும் நிறுவனம் தெரிவித்த தகவலில், `எங்களிடம் மனுதாரர் கேட்டிருக்க வேண்டும்' என்றனர். இதனை ஏற்காத நீதிபதிகள், `ஆதாரில் இருந்து சென்றுள்ளது தெரியவந்ததால், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுங்கள்' எனக் கூறியது மட்டுமல்லாமல் `இது சட்டவிரோதமானது' எனக் கூறினார். அதனால்தான் முக்கியத்துவம் இல்லாத மாநிலத்துக்குத் தலைமை நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் வழக்கறிஞர் மத்தியில் பேசப்பட்டது'' என்றார்.

``ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என ஆதார் அட்டையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதே?'' என்றோம். `` ஆமாம். ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல. ஆனால், வாக்காளர் அடையாள அட்டை என்பது இந்திய குடியுரிமைக்கான முக்கியமான சான்று. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் தயார் செய்ய வேண்டும். ஆதாரும் வாக்காளர் அட்டையும் இணைக்கப்பட்ட பிறகு 1951 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்டவரின் பெற்றோர், வாக்காளராக இருந்துள்ளார்களா என்பதை சோதிக்க முடியும். அதில் நிறைய குளறுபடிகள் உள்ளன. அப்படிப் பார்த்தால் சிலரின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்படும். தங்களின் பெற்றோர் இந்த நாட்டில்தான் பிறந்தார்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அதற்கான முதல் திட்டமாக என்.பி.ஆரை தயாரிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாகக் கூறிவிட்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கம். அதற்கான தயாரிப்பாகவும் இதனைப் பார்க்கலாம். இது மிகப்பெரிய சதித்திட்டமாகவும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்டுவதற்காகவும் உள்ளது'' என்கிறார்.

மறைக்கப்பட்ட ஆவணம் அல்ல

வி.சி.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் சி.டி.நிர்மல்குமார், ``வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரையில் அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளன. இது இணையத்தளத்திலேயே கிடைக்கிறது. இது ஒன்றும் மறைக்கப்பட்ட ஆவணம் கிடையாது. மேலும், தற்போதும் சிலருக்கு நான்கைந்து இடங்களில் வாக்குகள் உள்ளன. இதனை சரிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு குறைபாடுகள் உள்ளன. எனவே, தவறு நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது'' என்கிறார்.

நிர்மல்குமார்

நிர்மல்குமார்

`` ரேசன் அட்டையை எவ்வளவு சீரமைத்தாலும் ஒருகாலத்தில் மாவட்டத்துக்கு 5 லட்சம் போலி அட்டைகள் இருந்தன. அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு கொடுக்கப்பட்ட பிறகு போலி அட்டைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஒருவருக்கு ரேசன் பொருள் கொடுத்தாலே உடனே செல்போனுக்கு தகவல் சென்றுவிடுகிறது. 100 சதவீதமாக நடந்த தவறு என்பது பத்து சதவீதமாக குறைந்துவிட்டது. சமையல் எரிவாயு விநியோகத்திலும் இதுதான் நடந்தது.

இந்தியாவில் 95 சதவிகிதம் பேர் வாடகை வீட்டுக்கு மாறி மாறிச் செல்பவர்களாக உள்ளனர். நிறைய மக்கள் வாக்களிக்காததற்கு இதுபோன்ற சிரமங்கள்தான் காரணம். முன்பெல்லாம் ரேசன் கார்டுகளை வாங்குவதற்கே ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது அப்படிப்பட்ட நிலை இல்லை. ஆதார் அனைவருக்கும் இருப்பதால், 18 வயது நிறைவடைந்த பிறகு இயல்பாகவே அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிடும். அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது'' என்கிறார் நிர்மல்குமார்.

சிவகங்கையில் என்ன நடந்தது?

``ஆதார் எண்ணை தனது தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜ.க பயன்படுத்துவதாகச் சொல்கிறார்களே?'' என்றோம். `` ஆதார் விவரங்கள் இருந்தால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்ன? மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இதை வைத்துத்தான் தவறு நடக்கும் என்பதல்ல. எதையாவது எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் பேசி வருகின்றன. இந்தியா போன்ற 140 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் அவசியம். ஆதார் தொடர்பான தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டாலே வழக்கு பதிவாகிவிடும். அந்தளவுக்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளருக்கும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வாட்ஸப் தகவல் சென்றது. அந்த மாவட்டத்தில் உள்ள 8 லட்சம் வாக்காளர்களிடமும் வாட்ஸப் மூலம் பிரசாரம் செய்தனர். இவ்வளவு தகவல்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு எப்படிக் கிடைத்தது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

கள்ள ஓட்டு போட முடியாது

தொடர்ந்து பேசுகையில், `` தேர்தல் சீர்திருத்த மசோதாவில் உள்ள நல்ல விஷயங்களில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதுதான். அதுதான் சில கட்சிகளுக்கு வேதனையைக் கொடுக்கிறது. காரணம், கைரேகையை தணிக்கை செய்ய முடியும். சிம்கார்டு வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டதால் போலி சிம்கார்டுகள் ஒழிக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும். வாக்காளர்களில் இறந்து போனவர் விவரங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் என அனைத்தையும் சீரமைப்பதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் முகாம் அமைத்து இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை எல்லாம் முறைப்படுத்துவதற்கு இந்த மசோதா அவசியமானது'' என்கிறார்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி