1200 x 80 DMirror

 
 

கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள் தான் எமது தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.

தேயிலைத் தோட்டத்தை நம்பியிருக்கும் ஒரு பிரதேசம்தான் கண்டி. கண்டி மாவட்டத்தில் உள்ள அப்பர் கலஹா தோட்டம் எவ்வித அடிப்படை வசதிகளையும் கொண்டிராத, நாட்டின் பொருளாதாரத்திற்கு உழைப்பவர்கள் வாழும் இடம்.

இவர்களுக்கு வீடு, நீர், போக்குவரத்து, கழிப்பறை என எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. அப்பர் கலஹா தோட்டத்தில் வசிப்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிபவர்கள் ஆவர். இவர்கள் லயன் வீடுகளில் வசித்து வருகின்றனர். இங்கு நான்கு லயன் குடியிருப்பு பகுதிகள்தான் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் இரண்டு சிறிய அறைகளைக் கொண்டதாக அமையப்பெற்றுள்ளன.

இவ் அளவிலான வீடுகளில் 50 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர். ஒரு குடும்பத்தில் ஐந்து ஆறு உறுப்பினர்கள் உள்ள நிலையில் இத் தோட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலம் வந்துவிட்டால் வாசல்களில் மட்டுமல்ல வீட்டினுள்ளும் நீர் நிறைந்து விடும். தரமற்ற தகரக் கூரைகளினால் நீர் வீட்டிற்குள் வடியும்.

ஒவ்வொரு இடங்களிலும் பாத்திரங்கள் வைத்து நீரை ஏந்துவார்கள். உறங்குவதற்கும், அன்றாட வேலைகளை செய்வதற்கும் இந்நிலமை மிகவும் இடையூறாகவே இருக்கின்றது. இவர்களுக்கு ஏற்றவாறு கூரைகளை அமைக்கவோ, மேலதிகமான அறைகளை அமைத்துக்கொள்ளவோ எவ்வித வசதிகளும் கிடையாது. தேயிலைத் தோட்டத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொணடே தமது சீவனோபாயத்தை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு இவர்கள் எவ்வித உபதொழிலையும் செய்யாதவர்களே. கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டாலும் அதற்கும் வனவிலங்குகள் இடம் கொடுப்பதில்லை. கீரிகள் கோழிகளை பிடித்துச் சென்று விடுகின்றன. அத்தோடு ஆடுகளை சிறுத்தைகள் கொண்டு சென்ற சந்தர்ப்பமும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன.

வாழும் வீடுகள் மட்டுமல்ல தொழில் புரியும் தேயிலை மலைகளும் இவர்களுக்கு பெரும் சவாலாகவே அமைகிறது.

தேயிலை தோட்டங்கள் காடுகளாக மாறி வருவதால் மிருகங்களின் வாழ்விடமாகிவிட்டது. தேயிலை மலைகளில் வேலை செய்பவர்களை பாம்பு தீண்டிய, குளவி கொட்டிய சந்தர்ப்பமும் இங்கு வெகுவாகவே இடம்பெற்றுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டமும் இத்தேயிலை மலைகளில் அதிகமாகும். சிறுத்தைகள்,வளர்ப்பு பிராணிகளை தாக்கிய மற்றும் கடித்து கொன்ற சந்தர்ப்பங்களும் அதிகம்.

வைத்திய சேவையை பெற்றுக் கொள்வதும் இவர்களுக்கு சிக்கலே. அருகில் ஆரேக்கர் வைத்தியசாலை அமைந்திருந்தாலும் முக்கியமான சிகிச்சைகள், பரிசோதனைகள் கண்டி அல்லது பேராதனை பகுதிகளுக்கே செல்ல வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயுற்றவர்களை கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது நிறைய பணம் செலவாகிறது.

நாட்டில் கொவிட் -19 மற்றும் ஓமிக்ரோன் நோய் பரவி வரும் இக்காலத்தில் இவர்கள் ஒரு கழிப்பறையை மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் பயன்படுத்தி வரும் நிலையும் இத்தோட்டத்தில் காணப்படுகிறது. இவை வெவ்வேறான நோய் தாக்கத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித அச்சமும் இல்லை.

இங்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது என்ற ஒரு விடயம் பயனற்று போகிறது. இயன்றளவு நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக உழைக்கும் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

கொரோனா அதிகமாக பரவி வரும் காலத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தமது பங்களிப்பினை வழங்கி உள்ளனர்.

ஆனால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாது போகிறது என்பதற்கு அப்பர் கலஹா மக்களின் வாழ்வு ஒரு சான்றாகும்.

kuruvi.lk

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி