ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய தலைமை நிர்வாகியாக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜேக் டோர்சி தமது பதவி விலகல் குறித்தும், பராக் அகர்வால் தமது கருத்து குறித்தும் தத்தமது ட்விட்டர் பக்கங்களில் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

2006இல் ட்விட்டரை இணைந்து நிறுவிய டோர்சி, அந்நிறுவனத்திலும் கட்டண நிறுவனமான ஸ்கொயர் என இரண்டிலும் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த நிலையில், தமது பதவி விலகலை உறுதிப்படுத்தும் கடிதத்தில் "இறுதியாக நான் வெளியேற வேண்டிய நேரம் இது" என்று அவர் கூறியுள்ளார்.

Image

ஜேக் டோர்சி தனக்கு மாற்றாக நியமிக்கப்படும் பராக் அகர்வால் மீது தனக்கு "ஆழ்ந்த" நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பராக், ப்ரெட் அணியுடன் சுமூகமாக தலைமை மாற்றல் பணிகள் நடக்க ஏதுவாக அவர்களுடன் இணைந்து வாரியக்குழுவில் பணியாற்றுவேன் என்றும் ஜேக் டோர்சி கூறியிருக்கிறார்.

இதேவேளை பராக் அகர்வால், தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய பொறுப்புக்காக ஜேக் டோர்சிக்கு இதயம் கனிந்த நன்றியதைத் தெரிவித்துள்ளார்.

Image

பராக் அகர்வால் 2011இல் ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்தார், 2017ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமை அதிகாரியாக இருந்து வருகிறார்.

'எனக்கு ட்விட்டர் பிடிக்கும்'

இதேவேளை ஜேக் டோர்சி பதவி விலகுவதாக காலையில் வதந்திகள் பரவியபோது அந்நிறுவன பங்குகளின் மதிப்பு சந்தையில் உயர்ந்தது.

இதன் விளைவாக பங்குச் சந்தையில் பங்குகளின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.டோர்சி வெளியேறுவது குறித்த செய்தி முதலில் சிஎன்பிசி ஆங்கில தொலைக்காட்சியில் திங்களன்று தெரிவிக்கப்பட்டது,

இந்த விஷயத்தை நன்கு அறிந்த அநாமதேய ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விஷயங்கள் எதையும் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் "நான் ட்விட்டரை நேசிக்கிறேன்," என்ற ஒற்றை வரி இடுகையை ஜேக் டோர்சி பதிவிட்டிருந்தார்.

கடைசியில் தமது பதவி விலகலை உறுதிப்படுத்தி அதிகாரபூர்வமாக அவரது நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "யாரும் இதை கேட்டீர்களா என உறுதியாக தெரியவில்லை. ஆனால் நான் ட்விட்டரில் இருந்து விலகி விட்டேன்."

"ஒரு நிறுவனம் 'நிறுவனர் தலைமையில்' இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நிறைய பேசப்படுகிறது. ஆனால் அது கடுமையாக வரம்புக்குட்பட்டது மற்றும் தோல்வியின் ஒரு புள்ளி என்றே நான் நம்புகிறேன்," என்று அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.

தனது பதவிக்காலம் முடிவடையும்வரை அவர் வாரியத்தில் தொடருவதாகவும் கூறியுள்ளார்.

"நிறுவனத்தின் தலைமை பதவியை வகிப்பதற்கான இடத்தை பராகுக்கு கொடுப்பது உண்மையில் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்," என்றும் ஜேக் டோர்சி கூறியுள்ளார்.

ட்விட்டர் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் குறித்து வட அமெரிக்காவுக்கான பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் ஜேம்ஸ் கிளேட்டன் விரிவாக அலசுகிறார்.

ஒரு வகையில், ஜேக் டோர்சி தொழில்நுட்ப உலகின் முகமையாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைமை நிர்வாக அதிகாரி போல கருதப்பட்டார்

அவர் பெரும் பணக்காரர் மற்றும் கோடீஸ்வரர். இரண்டு பெரிய வெற்றிகரமான நிறுவனங்களான ட்விட்டர் மற்றும் ஸ்கொயரை நிறுவியவர்.

உதாரணமாக, "உலக அமைதியை" உருவாக்கும் திறன் பிட்காயினுக்கு உண்டு என்று அவர் உண்மையாக நம்புகிறார். ட்விட்டர் மூலம், அவர் நிச்சயமாக உலகை மாற்றியுள்ளார்.

குறிப்பாக அரசியல்வாதிகள் வாக்காளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் - மற்றும் பொதுமக்களுடன் செய்திகள் வடிவில் தொடர்பு கொள்ளும் முறையில் புரட்சியை ஏற்படுத்தியது ட்விட்டர்.

ட்விட்டரின் சிறந்த முன்னாள் பயனர் டொனால்ட் டிரம்ப் ஆவார். ஜனரஞ்சகமான அதிபராக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அவர் பாரம்பரிய வெகுஜன ஊடகங்களைத் தவிர்ப்பதற்கான ட்விட்டரை ஒரு முக்கிய தளமாக தனது பதவிக்காலத்தில் பயன்படுத்தினார்.

ஆனால், கேப்பிடல் ஹில் கலவரத்திற்குப் பிறகு அவரை ட்விட்டர் தளத்தில் இருந்தே நீக்குவதற்கு எடுத்த நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமின்றி ஜேக் டோர்சி தலைமை அல்லது பதவிக்காலம் முக்கிய பங்கு வகித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜெஸ் பெசோஸ் விலகினார். அதன் பிறகு அவர் வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், ஜேக் டோர்சி தமது பதவி விலகலை அறிவித்திருந்தாலும், மறைமுகமாக பல பில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்த ட்விட்டர் நிறுவனத்தில், திரைக்குப் பின்னால் அதிகமாக பணியாற்றுவார் என்றே தோன்றுகிறது.

வயதில் 40-களின் மத்தியில் இருக்கும் ஜேக் டோர்சி, இன்னும் உலகை மாற்றுவதற்கான உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருக்கிறார். அதனால் மீண்டும் அவ்வாறு புதிய முயற்சியில் ஈடுபடக்கூடும் என்கிறார் ஜேம்ஸ் கிளேட்டன்.

யார் இந்த பராக் அகர்வால்? 5 முக்கிய தகவல்கள்

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

இந்தியரான பராக் அகர்வால் ஐஐடி-பாம்பேயில் பி.டெக் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். அத்துடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். விரைவில் அந்நிறுவனத்தின் 'சிறந்த மென்பொருள் பொறியாளர்' என்ற இடத்தைப் பிடித்தார்.

ட்விட்டர் 2018இல் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வாலை நியமித்தது.

ட்விட்டரில் சேருவதற்கு முன்பு, அவர் AT&T, மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவற்றில் ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், பராக் அகர்வால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமை நிர்வாக அதிகாரிகளின் குழுவில் சேர்ந்துள்ளார், இந்த பட்டியலில் ஏற்கெனவே சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி