1200 x 80 DMirror

 
 

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை ஹொரணை, மில்லேவ பகுதிக்கு மாற்றுவது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காவிடின் கடுமையான பொது மக்கள் போராட்டம் ஏற்படும் என பிரதமரின் கீழ் இயங்கும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் சார்பாக நிலையான அபிவிருத்திக்கான ஆலோசகர்களின் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கைக்கு அமைய, அப்பகுதியின் பெரும்பான்மையான மக்களுக்கு மாத்திரமல்ல, உள்ளூர் அரசாங்க மட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கூட முன்மொழியப்பட்ட திட்டம், அதன் கூறுகள் மற்றும் சாத்தியமான தாக்கங்கள் பற்றி சிறிய புரிதல்கூட  இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சமீபத்தில் இந்த நிலம் சாதாரண தொழில்களை நிறுவப் பயன்படுத்தப்படப்போகிறது என கேள்விப்பட்டோம், ஆனால் அந்த முன்மொழிவுக்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று சமூகத் தலைவர்கள் கூறியதாக வார இறுதி ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

"இந்த நிலத்தை அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் தரும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு பல உள்ளூர் குடியிருப்பாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மகிழ்ச்சியடைந்தனர், ” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையைத் தொகுத்த ஆய்வுக் குழு, வெலிக்கடை சிறைச்சாலையை தங்கள் சொந்த ஊரான மில்லேவவிற்கு மாற்றுவது "சில சட்ட விரோதச் செயல்களுக்கு" வழிவகுக்கும் என அஞ்சும் மத மற்றும் பிற சமூகத் தலைவர்கள் உட்பட உள்ளூர்வாசிகளைச் சந்திக்க முயன்றது.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து அடிக்கடி வெளியாகும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அப்பகுதி மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பானவர்கள், உத்தேச திட்டம், அதன் கூறுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூகங்களுக்கு அறிவுறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறித்த அறிக்கையானது, பரிந்துரைக்கிறது.

"இப்பகுதியில் கூட்டுறவு மற்றும் நட்பு சூழ்நிலையை" நிறுவுவதற்கு திட்டத்தின் மிகவும் முக்கியமான பகுதிகளை செயல்படுத்த பல பங்குதாரர் அணுகுமுறையை இது முன்மொழிகிறது.

1941ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை வளாகம் தற்போது சனநெரிசல் அதிகமாகவும் மக்கள் வாழத் தகுதியற்றதாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு இரண்டு காரணங்களை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடையாளம் கண்டுள்ளது.

இந்தக் காணி சிறைச்சாலையாக பயன்படுத்தால் அதன் பயனை முழுமையாக அடையமுடியாது உள்ளது. ஆகவே இந்த வளாகத்தை நகர்ப்புற பயன்பாட்டுக்கு மிகவும் பிரயோசனமாக பயன்படுத்த வேண்டுமெனவும், அதேவேளை, புதிய சிறைச்சாலை வளாகம் நவீன நியமங்களுக்கு அமைய அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், புதிய 'வெலிக்கடை சிறைச்சாலை' நிர்மாணத் தளத்திற்கு இடமளிப்பதற்காக மில்லேவ பிரதேசத்தில் சுமார் 250 ஏக்கர் இறப்பர் வேரோடு பிடுங்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சிறை வளாகத்தில் மெகசின், பெண்கள், வெலிக்கடை மற்றும் விளக்கமறியல் சிறைச்சாலைகள் நிறுவப்படும்.

மேலும், சிறைச்சாலை வைத்தியசாலை, ஊழியர் குடியிருப்புகள், பயிற்சி மையம், புலனாய்வு பிரிவு மற்றும் சமூக அடிப்படையிலான சீர்திருத்த மையம் ஆகியவற்றை புதிய வளாகத்திற்கு கொண்டுச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி