சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் மீது பாலியல் புகார் கூறிய அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் மூன்று வாரங்களுக்குப் பிறகு காணொளி அழைப்பில் பேசியிருக்கிறார்.

தன்னுடன் சுமார் 30 நிமிடங்கள் வரை பேசியதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கூறியுள்ளார்.

தாம் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர் கூறியதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

"அவர் நலமாக இருந்தார். அதுவே எங்களது முக்கியமான கவலையாக இருந்தது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

35 வயதான பெங் ஷூயேய் சீனாவின் முதல்நிலை இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர்.

சீன முன்னாள் துணைப் பிரதமர் ஷாங் காவ்லிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருந்தார். கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இது தொடர்பாக வெய்போ இணையதளத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியிருந்தார்.

ஷாங் காவ்லியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தப் பதிவில் பெங் கூறியிருந்தார்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அந்தப் பதிவு காணாமல் போனது. அவரது பக்கத்தில் கருத்துகளைப் பதிவிடுவதும் தடுக்கப்பட்டது. அதனால் அவரைப் பின்தொடரும் சுமார் 5 லட்சம் பேரும் தங்களது கருத்துகளை பதிவிட முடியாமல் தவித்தனர்.

ஷாங் காவ்லி பெயரைக் குறிப்பிட்ட பிற பதிவுகளும் தேடுபொறியில் காட்டவில்லை. இதனால் அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பதிவுகள் இடப்பட்டன.

அதன் பிறகு பெங் பொதுவெளியில் இருந்து காணாமல் போனார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இது பரவலாகக் கவலையை ஏற்படுத்தியது. சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். அவர் பாதுகாப்பாக இருப்பதை சீன அரசு உறுதி செய்ய வேண்டும் என பல நாட்டு அரசுகளும் கோரிக்கை விடுத்தன.

டென்னிஸ் நட்சத்திரங்கள் நவோமி ஒசாகா, செரீனா வில்லியஸ் ஆகியோரும் குரல் எழுப்பியோரில் அடங்குவார்கள்.

Image

நியூயார்க்கில் சீன பெண்ணியவாதிகளின் குழு பெங் ஷூயேய்க்கு ஆதரவாக ஒரு பேரணியை நடத்தப்பட்டது.

பெங்கின் இருப்பிடம் குறித்த விவரம் தெரியாததால் எழுந்த குரல்களுக்கு மத்தியில், அவர் நலமாக இருப்பது போன்ற புகைப்படங்களை சீன அரசு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டன.

ஞாயிற்றுக்கிழமையன்று பெய்ஜிங் நகரில் நடந்த ஒரு டென்னிஸ் போட்டியில் பெங் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு காணொளியை அரசு ஊடக பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்தப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தங்களது அதிகாரபூர்வ WeChat பக்கத்தில் பெங்கின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால் அவை மட்டுமே பெங் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதற்குப் போதுமான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (WTA) செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை அந்த அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை ஒனறிலும் இதையே வலியுறுத்தியது. "குறிப்பிட்ட காணொளிகள் மூலம் WTA-இன் கவலைகள் மறையவில்லை " என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கிரிஸ்டல் சென் பிபிசியிடம், வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பெங் "உடல் பாதிப்பில்லாமல்" இருப்பதைக் காட்டுவதாகத் தோன்றினாலும், அவர் "உண்மையில் சுதந்திரமாக இல்லை" என்று கூறினார்.

ஐஓசி அறிக்கையில் கூறப்பட்டது என்ன?

மூன்று வாரங்களுக்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸுடன் பெங் காணொளி மூலம் உரையாடியதாக ஒலிமபிக் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"30 நிமிட அழைப்பின் தொடக்கத்தில், பெங் ஷுவாய் தனது நலம் குறித்த ஐஓசியின் அக்கறைக்கு நன்றி தெரிவித்தார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்

"அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகக் கூறினார். பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் வசிப்பதாகத் தெரிவித்தார். இந்த நேரத்தில் அவரது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும்" என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

"அவர் இப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட விரும்புகிறார். இருப்பினும், அவர் தொடர்ந்து டென்னிஸ் ஆடுவார்"

IOC அறிக்கையில் வீடியோ அழைப்பின்போது எடுக்கப்பட்ட படம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பெங் கேமராவை நோக்கி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி