1200 x 80 DMirror

 
 

சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளில் கோவிட்-19 அச்சம் காரணமாக முகக்கவசம் அணிவது சிறார்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. வைரஸுக்கு எதிரான ஒரு வகைப் பாதுகாப்பு வழங்குவதைத் தாண்டி, அவர்களின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு இது ஒரு சவாலாக இருக்கவும் வாய்ப்புள்ளதா?

மூன்று வயதுக் குழந்தை இஷான் இவான்ஸ், தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போல மிகவும் சுறுசுறுப்பான உற்சாகமான குழந்தை தான். ஆனால், முகக்கவசம் அணிந்து கொண்டவுடன் ஏதோ ஒன்று மாறி விடுகிறது. அவன் மிகவும் அமைதியான அடக்கமான சிறுவனாக மாறிவிடுகிறான் என்று அவன் தாயார் ஹெர்ன் கூறுகிறார்.

இஷான் குடும்பத்தினர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். அங்கு ஆறு வயதுக்கு மேற்பட்டவ சிறார்கள் முகக்கவசம் அணிவது சட்டப்படி அவசியம். ஆனால், பல சிறார் பள்ளிகளும் இந்தப் பழக்கத்தை ஊக்குவிப்பதை ஆதரிக்கின்றன. அதாவது சாப்பிடுவது, குடிப்பது, தூங்குவது போக மீதி நேரத்தில் ஒரு பள்ளி நாளில் எட்டு மணி நேரம், மூன்றடுக்கு கொண்ட ஒரு முறை உபயோக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டிய நிலை இஷானுக்கு ஏற்படுகிறது.

அவன் வெளியே வந்த அடுத்த நொடி, அதைக் கழற்றித் தனது சட்டைப்பையிலோ அல்லது தனது பாட்டியின் கையிலோ திணித்து விடுகிறான். ஜூலை மாதத்தில் ஒரு நாள், தனது முகக் கவசத்தைக் கழற்றிக் கீழே போட்டுவிட்டுப் பள்ளியின் வாசலைத் தாண்டி ஓடினான்.

பள்ளியை விட்டு வெளியே வந்ததும் முகக்கவசம் அணியச் செய்ய விரும்பாத அவனது தாயார், அவனுக்கு இதன் மீது ஒரு வெறுப்பே வந்து விட்டது என்கிறார். அவனுக்கு அது வசதியாக இல்லாததால் நாங்கள் அதைத் திணிக்க விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார்.

கோவிட்-19-இல் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அனிவது குறித்த முடிவெடுப்பது உலகெங்கிலும் உள்ள பெற்றோர்களின் முக்கியக் குழப்பமாக உள்ளது. காரணம், சிறார்களின் உணர்ச்சி ரீதியான வளர்ச்சிக்கும் இயல்பாகப் பிறருடன் கலந்து பழகுவதற்கும் இது ஒரு தடையாக உள்ளது.

அக்டோபர் தொடக்கத்தில் உலக நாடுகள் மூன்று முகாம்களாகப் பிரிந்து நிற்பதாக ஒரு ஒழுங்குமுறைக் கண்ணோட்டம் காட்டுகிறது. சிங்கப்பூர் மற்றும் ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஆறு வயது முதல் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பதைப் பரிந்துரைக்கின்றன. அதிக அளவில் பரவல் இருக்கும் இடங்கள் போன்ற குறிப்பிட்ட சூழலில் ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. சிலர், அதை வகுப்பறை போன்ற ஒரு மூடிய சூழலில் பின்பற்ற வலியுறுத்துகின்றனர்.

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் போன்ற சில ஒழுங்குமுறை அமைப்புகள் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வலியுறுத்துகின்றன. சில நாடுகளில், உதாரணமாக இங்கிலாந்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே விஷயம், மூச்சுத் திணறல் ஏற்படும் என்ற காரணத்தால், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக்கூடாது என்பது தான்.

குழந்தை

யூரோப்பியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்-ன் தலைவர் ஆடமோஸ் ஹட்ஜிபனயிஸ், குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க ஒரு குறிப்பிட்ட வயது என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இது குறித்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. முகமூடிகளால் சுவாசத்தில் உடல்ரீதியான தாக்கத்தை மையமாகக் கொண்ட அந்த சில ஆய்வுகளும் எந்தத் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையும் கண்டறியவில்லை. ஆனால் இதன் நன்மை தீமைகள் பற்றிய பரவலான விவாதம் சூடுபிடித்துள்ளது.

முகக் கவசம் அணிவதை ஆதரிப்பவர்கள், இது, அணிபவரையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் கோவிட்-19 இலிருந்து பாதுகாக்கும் என்றும், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோயின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்று கூறுகிறார்கள். பெரும்பாலான நாடுகள் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை. விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் நோய் தாக்கினால் மட்டுமே போடுகிறார்கள். இளம் குழந்தைகளில் கோவிட்-19 இன் தாக்கம் தீவிரமாக இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது. இந்த ஜூலையில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 50,000 குழந்தைகளில் ஒருவருக்குத் தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறுகிறது. மேலும் ஒரு மில்லியனில் இருவர் இறக்கின்றனர். ஆனால் வேகமாகப் பரவிவரும் டெல்டா பிறழ்வு, முந்தையவற்றுடன் ஒப்பிடுகையில் குறைந்தது இருமடங்கு தொற்றக்கூடியது, குழந்தைகள் உட்பட இதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் நாடுகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா பிறழ்வுக்குப் பிறகு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் அதிகம் பரவுவதாகவும் லண்டனைச் சேர்ந்த க்வீன் மேரி பல்கலைக்கழகப் பெருந்தொற்று நிபுணர் தீப்தி குர்தாஸானி கூறுகிறார்.

ஆனால், முகக் கவசம் அணிவது பள்ளிகளில் கோவிட்-19 பரவுவதைப் பெருமளவில் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்ட சூழலில், மார்ச் முதல் ஜுன் மாதத்தில், 7000 ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து புழங்கிய இடத்தில், 363 பேருக்குத் தான் தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் கூடுதல் பாதுகாப்பு அளித்து நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது - அனபெல் டீ செயின்ட். மோரிஸ்

ஜார்ஜியா மாகாணத்தில் 169 ஆரம்பப் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதால் நோய் பரவல் 37% குறைந்ததாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

முகக்கவசம் கூடுதல் பாதுகாப்பு அளித்து நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகக் குழந்தைகள் மருத்துவப் பேராசிரியர் அனபெல் டீ செயின் மோரிஸ் கூறுகிறார்.

முகக்கவசம் அணிவதால் பரவல் முற்றிலுமாகத் தடுக்கப்படாது. கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல், தனி நபர் இடைவெளி, காற்றோட்டம் போன்ற பல பாதுகாப்புக் காரணிகளும் இதில் பங்களிக்கின்றன என்று கூறுகிறார், சிங்கப்பூரில் உள்ள சிங்க் ஹெல்த் பாலி க்ளினிகின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் தலைவர் மார்க் நெக்.

சிங்கப்பூரில், ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருந்த நிலையில், இப்போது அது ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு என்று மாற்றப்பட்ட போதும், பெற்றோர்கள் இன்னும் இரண்டு வயது குழந்தைகளுக்கும் அணிவிக்கவே விரும்புகின்றனர். இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பை அளிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

குழந்ை

மூன்று மற்றும் ஐந்து வயதுச் சிறுவர்களின் தாயான மிமி ஸைனலைப் பொருத்தவரை இந்தச் சட்டம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சிறுவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது என்கிறார் அவர்.

முதலில் குழந்தைகளுக்கு அது சற்று சிரமமாக இருந்தாலும், அவரும் அவரது கணவரும் அதை ஒரு விளையாட்டைப் போல உணரச் செய்து, அனைவரும் ஒன்றாக முகக்கவசம் அணிந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தினர். குழந்தைகளுக்குப் பிடித்த வடிவங்களையும் கதாபாத்திரங்களையும் அதில் அச்சிடச் செய்து வழங்கியதால், குழந்தைகள் விரும்பி அணியத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும் எப்படிப்பட்ட வடிவமைப்பும் இதில் பெரிதாக உதவாது என்றும் முகம் பாதி மூடியிருப்பதால், மனிதர்களின் மன நிலையையும் உணர்வுகளையும் படிக்க முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

மகிழ்ச்சி, துக்கம், அச்சம், கோபம் முதலிய உணர்ச்சிகளைக் குழந்தைகள் பத்து மாதத்திலேயே கண்டறியத் தொடங்குகின்றன என்றும் ஐந்து அல்லது ஆறு வயதில் இது உச்சத்தை எட்டுவதாகவும் டொரொன்டொ பல்கலைக்கழக உளவியலாளர் கேங்க் லீ கூறுகிறார். முகத்தின் பாவங்களை முழுவதுமாகப் பார்ப்பது இதற்கு மிகவும் முக்கியம் என்றும் கூறும் இவர், முகக்கவசம் இதைத் தடுப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் மற்ற பல நிபுணர்கள் கருத்தில் மாறுபடுகின்றனர். முகம் மட்டுமே உணர்ச்சிகளை அறிய ஒரே வழி இல்லை என்றும் குரலின் த்வனி, உடல் மொழி, சமூகச் சூழல் போன்ற வேறு முக்கிய அறிகுறிகளும் இருப்பதாகவும் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆஷ்லீ ருபா கூறுகிறார்.

ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள், வாயைப் பார்க்காவிட்டாலும் முகத்தின் உணர்ச்சிகளை அறிய முடியும் என்று 2012 ஆண்டின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஒரு சோதனையில், ருபா மற்றும் அவரது சகா இருவரும், துக்கம், கோபம், அச்சம் போன்ற உணர்ச்சிகளை அறிவதில் முகக்கவசம் ஏற்படுத்தும் தாக்கம், குளிர் கண்ணாடி அணிவதற்கு ஒப்ப தான் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

முகக்கவசம் அணிவதால், குழந்தைகளின் உணர்ச்சி ரீதியான வளர்ச்சியில் எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை என்பதற்கு இது ஒரு ஆதாரம் என்று ருபா கூறுகிறார். குழந்தைகளுக்கு மத்தியில் குளிர் கண்ணாடி அணிவது போலத் தான் இதுவும் என்பது இவர் கருத்து.

ஹாங்காங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் இவா சென், எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களும் குளிர் கண்ணாடிகளும் அணிவதில்லை என்பதால் குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார். பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற இடங்களில் முகக்கவசம் பரவலாக அணியப்பட்டு வந்தும் குழந்தைகளின் வளர்ச்சி இயல்பாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் குழந்தைகளின் மொழி வளர்ச்சியில் முகக்கவசம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் பொதுவாக உள்ளது. இதிலும் இரு வேறு கருத்துகள் நிலவினாலும், எந்தச் சிக்கலையும் முளையிலேயே கிள்ளி எறிவது பெற்றோர்களின் கையில் உள்ளது என்பது ஒருமித்த கருத்தாக உள்ளது.

சிங்கப்பூரின் ந்கீ ஆன் பாலிடெக்னிக்கில் மழலை மொழி வளர்ச்சி பயிற்றுவிக்கும் லினெட் டியோ, "குழந்தைகள் பார்த்துக் கற்கின்றனர். வாயசைவையும் உதட்டசைவையும் கொண்டு அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உதாரணமாக 'த' என்ற எழுத்தின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ள நாவின் அசைவு மிக முக்கியம்" என்கிறார்.

குழந்ை

ஆனால், குழந்தைகள் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள் என்பதால் பெற்றோர் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்றும் ஒரு வழி அடைபட்டால், வேறு வழியை அவர்கள் கண்டறிந்துகொள்வார்கள் என்றும் லீ கூறுகிறார்.

சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு நிலைமை வேறு என்று டெனஸி யில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் கேட்கும் மற்றும் பேசும் திறன் குறித்த பேராசியர் ஸ்டீஃபன் கமராடா கூறுகிறார். இவர் அத்தகைய குழந்தைகளுடன் பணியாற்றுகிறார். இவர்,"குறைபாடுகள் உள்ள குழந்தைகள, குறிப்பாகக் காது கேளாத குழந்தைகள், முக பாவங்களைக் கொண்டு தான் புரிந்து கொள்கின்றனர். முகக்கவசங்களால் அவர்களுக்கு இதில் குறை ஏற்படுகிறது" என்கிறார்.

குழந்தைகள் புதிய வார்த்தைகளைக் கற்பதில் இது ஒரு தடையை ஏற்படுத்தும் என்றும் இவர் கருதுகிறார்.

இரண்டு குழந்தைகளின் தாயாரான, சிங்கப்பூரைச் சேர்ந்த ஸைனல், தனது மகனுக்கும் இந்நிலை ஏற்பட்டதென்றும் எனினும் கூடுதல் உதவியால் சிக்கலைத் தீர்த்ததாகவும் கூறுகிறார். ஐந்து வயது மகன், வார்த்தைகளையும் ஒலிகளையும் கற்பதில் சற்று பின் தங்கியிருந்ததால், கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பியதால் நிலைமை சீரானதாகக் கூறுகிறார். அங்கும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், ஒலிகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டனர் என்று அவர் விளக்குகிறார்.

நீண்ட காலத் தாக்கம் எதுவும் உளவியல் ரீதியாக இருப்பதாக நான் கருதவில்லை - காங்க் லீ

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவின் ஆலோசகர் டாமி லிம் இதை ஒப்புக்கொள்கிறார். முகக்கவசத்துடன் பேசும்போது கூட இரண்டு வயதுக் குழந்தைகள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளவும் அடையாளம் காணவும் முடியும் என்று உள்ளூர் ஆய்வில் கண்டறிந்ததை அவர் எடுத்துக்காட்டுகிறார். கோவிட்-19-ஆல் அவர்களுக்கு ஏற்படும் மற்ற தாக்கங்களை ஒப்பிடும்போது முகக்கவசங்களின் தாக்கம் மிகக் குறைவு என்பது இவர் வாதம். எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சி, விளையாடும் நேரம் மற்றும் பிற செயல்பாடுகளை எவ்வாறு திரை நேரம் அதிகரித்தது என்பதைப் பற்றி அவர் அதிகம் கவலைப்படுகிறார். வளர்ச்சியில் தாமதங்கள் மற்றும் நடத்தைச் சிக்கல்கள் கொண்ட இளம் நோயாளிகள் அதிகரிக்க, தடையில்லா விளையாட்டு மற்றும் இணைந்து பழகும் வாய்ப்புகள் குறைந்ததும் ஓரளவுக்குக் காரணம் என்கிறார் அவர்.

முகக்கவசத்தால் ஏற்படும் இழப்புகள் மிகச் சாதாரணமானவை என்றும் நீண்ட கால உளவியல் தாக்கங்கள் எதுவும் பெரிதாக இருப்பதாகத் தாம் கருதவில்லை என்றும் கூறுகிறார் லீ.

இதே கருத்தைத் தான் சென்னும் பிரதிபலிக்கிறார். "குழந்தைகள் வியப்பளிக்கும் வகையில் சூழலுக்கு ஏற்பப் பழகிக்கொள்கிறார்கள். பெற்றோருக்கு அச்சம் இருந்தால், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது தான் சிறந்த தீர்வு. குழந்தைகள் பாதுகாப்பாகப் பெற்றோருடன் இணைந்திருப்பதும் பெற்றோர்கள் அவர்களின் பேச்சைக் கேட்டு உணர்வுப் பூர்வமாக எதிர்வினை ஆற்றுவதும் மிகவும் முக்கியம் என்பதைக் காட்டும் போதுமான ஆய்வுகள் உள்ளன" என்கிறார்.

பெருந்தொற்றால் ஏற்பட்ட சீர்கேடுகளை இட்டு நிரப்ப, இனிமையான குடும்ப உறவுகள் மிக முக்கியம்.

பால்கனியில் பிக்னிக் செய்வது, வீட்டிற்குள் ஒளிந்து விளையாடுவது, வாரமொருமுறை கைவினைப் பொருட்கள் உருவாக்குதல் போன்ற ஆக்கப்பூர்வமான வழிகளைப் பரிந்துரைக்கிறார் ஸைனல். முகக் கவசங்கள் எரிச்சலூட்டுகின்றன, ஆனால் வீட்டிற்குள் இருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். அவர்கள் வெளியே செல்லும்போது, முகக் கவசங்கள் குழந்தைகள் குறைந்தபட்சம் பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற திருப்தியையும் மேலும் பள்ளிக்குச் சென்று அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்வதைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை உணர்வையும் வழங்குகிறது என்கிறார் அவர்.

இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்தும் பொதுவான தகவலுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை சுகாதார நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. மேலும் தகவலுக்கு ஆர்வமுள்ள எவரையும் தங்கள் சுகாதார வழங்குநரிடமிருந்து ஆலோசனையைப் பெற பிபிசி ஊக்குவிக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நோய் கண்டறியப்பட்டாலோ வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ பிபிசி பொறுப்பாகாது. பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு வெளிப்புற இணையத் தளங்களின் உள்ளடக்கங்களுக்கும் பிபிசி பொறுப்பேற்காது. எந்தவொரு தளத்திலும் குறிப்பிடப்பட்ட அல்லது அறிவுறுத்தப்பட்ட எந்தவொரு வணிக தயாரிப்பு அல்லது சேவையையும் அது அங்கீகரிக்காது. உங்கள் உடல்நலம் அல்லது உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து நீங்கள் எந்த வகையிலும் அக்கறை கொண்டிருந்தால், எப்போதும் உங்கள் சொந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

BBC

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி