நாம் தமிழ் - முஸ்லிம் மக்களிடமிருந்து விலகி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.. சிறுபான்மை மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, அரசாங்கத்தின் சிறந்த வெற்றியாகும்.”

தமிழ் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி தனித்து இருந்து ஆட்சி பலத்தை பெற்றுக்கொண்டுள்ளோம். அதற்காக, நாம் தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளக் கூடாது. சிறுபான்மை மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, அரசாங்கத்தின் சிறந்த வெற்றியாகும்.”இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (02) கொழும்பிலுள்ள தாமரை தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்..அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விமர்சனத்தை எதிர்கொண்டது. அவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தக் கட்சி கட்டியெழுப்பப்பட்டது. எவ்வளவு அடக்குமுறைகள் விதிக்கப்பட்டாலும் ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டோம். எங்களை சிறையில் அடைத்து, மக்களை இருளில் வைக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. அதன் காரணமாகவே அரசாங்கத்தை மக்கள் எங்களிடம் பொறுப்பளித்துள்ளார்கள். சிக்கல்களின் மத்தியில் நாங்கள் மக்களை கைவிட்டதும் இல்லை.

மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அரசியல் செயற்பாடுகளை தூரம் தள்ளிவிட்டு ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆளுங்கட்சி பொறுப்பில் இருப்பதால் கட்சி முன்னேற்றம் அடையப்போவதில்லை.அரசாங்கத்திலிருந்து நிர்வாகத்தை முன்னெடுப்பதை போன்று மக்கள் மத்தியிலும் அரசியலையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

 

ஆட்சி அதிகாரம், அமைச்சுகள், அரச நிறுவனங்களால் நிறுவனங்களினால் செய்யமுடியாத பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டங்கள் அதிகரித்தமைக்கு காரணம், நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியமை பிரதான காரணம் என்று நான் கருதுகிறேன். தற்போது இடம்பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்கள் பாரதூரமாக அதிகரித்துள்ளமைக்கு காரணமும் இதுவென நான் நம்புகிறேன்.

மக்களின் குரலை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் குரலை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நாம் அரசியலில் இருந்து ஒதுங்க எம்மால் தோற்கடிக்கப்பட்ட குழுவின் குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஊடுருவி பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். ஆகவே, ஸ்ரீ லங்கா பொதுஜன நாட்டில் நிலைக்க வேண்டுமெனில் ஆட்சிபொறுப்பில் இருக்கும்போதே மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டியது அவசியம்.அரச அதிகாரிகள் மாத்திரமே மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மாத்திரம் இருந்துவிடக் கூடாது. சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திலுள்ள சகல திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு கட்சி உறுப்பினர்களிடமே இருக்கிறது. தொழிற்சாலைகள், விவசாயிகள் என சகல இடங்களிலும் எமது கட்சியின் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எமக்கு வாக்களித்த மக்கள் பாரிய நெருக்கடியான நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதில் எமக்கு சிறந்த அனுபவம் இருக்கிறது. செய்யாத தவறுக்கும் மக்கள் அரசாங்கத்தையே நேரடியாக தாக்குவார்கள். இதுதான் யதார்த்தம். மக்கள் எம்மை நேரடியாக தாக்கலாம், பொம்மைகளை தீவைத்து எரிக்கலாம். அவற்றை எதிர்கொண்டு நாங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டும்.

வரலாறுகளில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளோம். அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மக்கள் மத்தியிலிருந்திருக்கிறோம். மக்களிடம் செல்லும் அரசியலொன்று இன்று எமக்கு அவசியம். நாம் சமாதானத்தை வரவேற்கும் கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எமது கட்சி. இது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியால் எமக்கு வழங்கப்பட்ட உரிமை. சுதந்திரக் கட்சி தொடரந்து எம்முடன் இருந்தது. பல்வேறு தர்க்கமான சூழ்நிலைகளிலும் எங்களுடன் இணைந்து அவர்கள் செயற்பட்டார்கள். ஆகவே, பொதுஜன பெரமுனவும் இதுதொடர்பில் சிந்திக்க வேண்டும்.

அநேகமான கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆசனம் இல்லாமல் இருக்கலாம். கட்சி குறுகியிருக்கலாம். ஆனால் , சிறியக் கட்சி பெரிய கட்சி எது என்பதில் சிக்கல் இல்லை. எமது நோக்கமே முக்கியம். இவர்கள் அனைவரும் எம்முடன் ஒரே பாதையில் செல்பவர்கள். நாம் பிரச்சினையில் இருக்கும்போது எம்முடன் இருந்தவர்கள். ஒரு கொள்கைக்காக எங்களுடன் ஒன்றிணைந்து போராடியவர்கள். இவர்கள் யாரும் இல்லாமல் எம்மால் தனியாக செயற்படமுடியாது.

அவர்கள் எமது கைபொம்மை இல்லை. ஒரே நோக்கத்துக்காக எம்முடன் பயணிக்கும் எங்களுடன் இருப்பவர்கள். அதனால், அன்றிருந்த சகல கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். கட்சியில் சமத்துவத்தை பேண வேண்டியது பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் பொறுப்பாகும்.

தற்போதுள்ள பிரச்சினைகள் எம்மால் கொண்டு வரப்பட்டவை அல்ல. 2015ஆம் ஆண்டு பொறுப்பளித்த நாட்டை 2019ஆம் ஆண்டு மீண்டும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பான நாட்டையே நாம் நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தோம். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தில் அந்த நிலை இருக்கவில்லை. வடக்கில் சமத்துவம் இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு இருக்கவில்லை.

எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான சகல நடவடிக்கைகளும் தயார் நிலையிலேயே இருந்தது. ஆனால், நாமே ஆட்சிக்கு வந்து அதனை தடுத்து நிறுத்தினோம்.சர்வதேசத்துடன் மோதி இந்த விடயங்களை செய்தமைக்கு காரணம் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்வதற்காகவே ஆகும்.

பல்வேறு சவால்களின் மத்தியிலும் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு காரணம் எமது செயற்பாடுகளின் பிரதிபலன்களாகும். இவ்வாறான செயற்பாடுகளிலுள்ள அரசியலை மக்களுக்கு தெளிவுப்படுத்திக் கொடுக்க வேண்டியது எமக்குள்ள பிரதான பொறுப்பாகும்.

நாட்டின் சுயாதீன தன்மைக்காக கடந்த காலங்களில் நாங்கள் வழங்கிய அர்ப்பணிப்பு தொடர்பில் பேசப்படுவதாக தெரியவில்லை. பேசுவதற்கு எதுவும் இல்லை என்பது மக்களுக்கு தெரியும். பல்வேறு சவால்களிலிருந்து பாதுகாத்து வந்த நாட்டை நாம் ஒருபோதும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டமை எமக்கு பாரிய பலத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மக்களும் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கட்சியும் அவருக்கு ஆதரவளித்தது போன்று அவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஒரு அடையாளத்தை தேடிக்கொடுத்துள்ளார்கள்.அரசியலிலிருந்து நீங்கிய இளைஞர்களும் அவர் மீது வைத்த நம்பிக்கையில் தேர்தல் களத்துக்கு இறங்கினார்கள். அதனால், பொதுஜன பெரமுனவிலுள்ள புதிய இளைஞர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நாட்டை முன்னெடுக்கும் பிரதான அரசியல் கட்சி என்ற அடிப்படையில் எமது நாட்டில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் எமக்கு தெளிவொன்று இருக்கவேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிட முடியாது என்று நான் நம்புகிறேன். வடக்கு கிழக்கிலுள்ள அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி ஜனாதிபதியொருவரை நியமிக்க முடியாது என்ற நம்பிக்கை தொடர்ச்சியாக இருந்து வந்தது. சகல ஜனாதிபதி தேர்தல்களிலும் அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியிருந்தது.

இன்று எம்முடன் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு சிறந்த சாட்சி. இருந்தபோதிலும், அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. நாம் தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளக் கூடாது. அந்த இன மக்களை நெருங்க முடியுமாக இருந்தால் அதுவே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செய்யக்கூடிய சிறந்த செயற்பாடாகும்.

அதேபோன்று அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் திட்டங்களுக்கு ஏற்றவாறு செயற்படாமல் பெரும்பான்மை பலத்தை எம்மால் பெற முடிந்தது. 70 வருடங்களுக்கு அதிக வரலாறுள்ள ஆட்சிபலம் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை, பொதுஜன பெரமுன ஒரு ஆசனம் வரையில் அந்த கட்சியை வீழச்சியடைய செய்துள்ளது. மக்கள் எம்மிடம் கேட்டதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கட்சியின் சார்பில் விசேட அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி