தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பகுதி மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட பக்கத்தினைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆகவே தாக்குதல் நடாத்திய ஏனையோரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள்   இன்று (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த கும்பல் மூளாய், பொன்னாலை, அராலி, முதலியார் கோவில், துணைவி போன்ற அனைத்து பகுதிகளிலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள்.

இருப்பினும் அவர்களுக்கு எதிரான முறைப்படியான சட்ட நடவடிக்கைக்கள் எவையும் இதுவரை சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகளை சேகரிப்பதற்காக வருவார்கள், தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். இப்படியான பிரச்சினைகள் ஏற்படும் போது வந்து   எமக்கான நியாயத்திற்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.

தமிழ் தேசியம் என்று பேசுகின்றவர்கள் முதலில் எமக்கான தீர்வினைப் பெற்றுத்தந்துவிட்டு தமிழ் தேசியம் பற்றி பேசட்டும் என தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக தெரிவிக்கையில்,

மக்களது அமைதி வழியிலான பேரணிக்கு நாங்கள் எந்தவிதத்திலும் இடையூறு செய்யப்போவதில்லை. நீங்கள் தாராளமாக உங்களது போராட்டத்தினை முன்னெடுக்கலாம்.

நாங்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறையாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவாறே இருக்கின்றோம்.

ஆனால் இச் சம்பவத்துடன் தொடர்புடைய வன்முறையாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மறைந்துள்ளார்கள்.

அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாகத் தான் உள்ளோம் என கூறியுள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஜனக கருணசிங்க (Janaka Karunasinghe) மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக ஆகியோர் எதிர்வரும் 11ம் மாதம் 16ம் திகதிக்கு முன்னர் அவர்களை கைது செய்வதாக போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வட்டுக்கோட்டை பொலிஸாருடன் யாழ். பொலிஸ் நிலையத்தின் சிறப்பு குழுக்கள் இரண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின் நிறைவில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஊடாக ஜனாதிபதி செயலகம், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்க உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

GalleryGalleryGallery

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி