ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வென்றிருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் தெரிவித்து வந்தாலும், அவ்வாறு வென்றவர்கள் விஜய் மக்கள் மன்றத்தில் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடக்கம்.

இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட ஆட்கள் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23,978 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் 110 இடங்களைக் கைப்பற்றியுள்ளோம் என்கின்றனர் விஜய் மக்கள் மன்றத்தினர்.

`மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேர்தலில் நின்றதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது' என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன். என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை ஆளும்கட்சியான தி.மு.க பெற்றுள்ளது.

பல மாவட்டங்களில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க படுதோல்வியடைந்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அ.ம.மு.க வெற்றி பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, இந்தமுறை படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டி 169 இடங்கள்.. வெற்றி?

அதேநேரம், 109 இடங்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நேற்று மாலை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நேரம், 55 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நேற்று இரவு முழுக்க வாக்கு எண்ணும் பணிகள் நீடித்தன. முடிவில் 110 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய்

விஜய்

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் நடிகர் விஜய்

இதன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நடிகர் விஜய்யை சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னம் என்பது பிரதானமாக இருப்பதில்லை என்பதால், அந்தந்த பகுதிகளில் செல்வாக்கானவர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கின. சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் பிரதானப் பங்கு வகித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியை மிக முக்கியமான ஒன்றாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

போட்டியின்றி தேர்வான 13 பேர்

உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் குறித்து, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளரும் மாவட்ட இளைஞர் அணி தலைவருமான சரவணனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னரே ஒன்பது மாவட்டங்களில் போட்டியின்றி 13 பேர் தேர்வானார்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே இந்த வெற்றி எங்களுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சரவணன், `` உள்ளாட்சியில் 169 இடங்களில் போட்டியிட்டோம். இந்த நிமிடம் வரையில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 2019 உள்ளாட்சித் தேர்தலில் 32 மாவட்டங்களில் சுயேச்சையாக கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் போட்டியிட்டோம். அப்போது 135 பேர் வெற்றி பெற்றனர். இந்தமுறை மக்கள் இயக்கத்தின் கொடி, பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை அறிய முடிந்தது.

விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். எங்களின் சேவைகளைப் பார்த்து மக்களும் ஆதரவு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, `100 இடங்களில் வெற்றி பெறுவோம்' என உறுதியாக நம்பினோம்" என்கிறார்.

``தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து எதாவது தகவல்கள் வந்ததா?" என்றோம். `` மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டலில்தான் நாங்கள் தேர்தலில் நின்றோம். தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகளிடம் இருந்து எங்களுக்கு எந்தவித சிக்கல்களும் வரவில்லை. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் மாநிலத் தலைமைக்கு அனுப்பி வந்தோம்" என்கிறார்.

என்ன ஆதாரம் இருக்கிறது?

`` உள்ளாட்சியில் வெற்றி பெற்றதை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்களே?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

விஜய்

விஜய்

`` தாங்கள் வெற்றி பெற்றதற்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் விஜய்யை முன்வைத்து உரிமை கோருகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்தத் தேர்தலில் சுயேச்சை சின்னத்தில்தான் அனைவரும் போட்டியிட்டுள்ளனர். ஊராட்சி மன்றத் தேர்தலில் கட்சி சின்னத்தில் யாரும் போட்டியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது, `நடிகர் விஜய்யின் ஆதரவில்தான் நாங்கள் வெற்றி பெற்றோம்' என இவர்கள் கூறுவதை யாரும் சென்று சரிபார்க்கப் போவதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசிய சிகாமணி, `` ஊரக உள்ளாட்சியில் இவர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பில்லை. தனது தந்தை புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அதனை மறுத்து விஜய் அறிக்கையும் வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் உள்ளாட்சியில் அதிக இடங்களில் விஜயகாந்த் வெற்றி பெற்றார் என்றால், அதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்தன. அதேநேரம், விஜய் ரசிகர்கள் தரப்பில் கற்பனையான, நிரூபிக்க முடியாத தகவல்களைக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார்.

மேலும், `` தற்போதைய அரசியல் சூழலில், யாராவது ஒருவர் வந்துதான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியம் எதுவும் தற்போது இல்லை. உள்ளாட்சியில் எதாவது ஒரு காரணத்தால் சிலர் வெற்றி பெற்றிருக்கலாம். அதற்காக, விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதன்மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 110 இடங்களில் வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கப் போகிறது?" என்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி