தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு. இவரது தலைமையில் காவலர் நலன்களில் தனி அக்கறை காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் பணிச்சுமை உள்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை முடிவை நாடும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. `காவல்துறையில் நல்ல பெயரை எடுத்தவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்கள் கையில் வடிகாலாக ஆயுதங்கள் இருப்பதால், அவசர முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்' என்கிறார் ஓய்வுபெற்ற எஸ்.பி கருணாநிதி. இதனைத் தடுப்பதற்கு என்ன வழி?

பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் உபாத்யாயா, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவருடைய பாதுகாப்புப் பணியில் கவுதமன் என்ற சிறப்பு எஸ்.ஐ ஈடுபட்டிருந்தார்.

கடந்த 5 ஆம் தேதி காலை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பியவர், மனைவியிடம் காபி கேட்டுள்ளார். அவருக்கு காபி கொண்டு வருவதற்குள் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் ஓராண்டுக்குள் காவல் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த கவுதமன், அதற்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு கேட்டு மனு கொடுத்திருந்தார்.

தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது?

தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி?

கடன் நெருக்கடி, மருத்துவ செலவு, தனிப்பட்ட காரணங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து தற்கொலை முடிவுக்கு கவுதமனை தள்ளியதாக தாழம்பூர் காவல்நிலைய போலீஸாரிடம் அவரது மனைவி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் கவுதமனின் இரு மகன்களில் ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் மற்றொருவர் தனியார் கல்லூரியிலும் படித்து வருகிறார்.

காரணம் தெரியாத மன அழுத்தம்

காவல்துறை

இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், காட்பாடி அருகே உள்ள சேவூர் 15 ஆவது சிறப்பு காவல் படையணியில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்தவர், கடந்த செப்டம்பர் மாதம் துணியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இத்தனைக்கும் அவர் பணியில் சேர்ந்து நான்காண்டுகளே ஆகியிருந்தன.

திருச்சியில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சம்பவம் இது. திருச்சி காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அழகர் என்பவர், ஆயுதப் படை காவலர் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், `என்னுடைய மரணத்துக்கு காவல்துறை அதிகாரிகளோ, நண்பர்களோ, குடும்பத்தினரோ காரணம் இல்லை. கடந்த சில நாள்களாகவே காரணம் தெரியாத மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளேன். அதன் காரணமாக, சுயமாக யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்,' என எழுதி வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் அருண்ராஜ், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் உயிர் பிழைக்கவில்லை.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களில் பலர், கடந்த சில ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டும் பல்வேறு வடிவங்களில் தற்கொலை முடிவை நாடுவதும் அதிகரித்தபடியே உள்ளது. அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில், `காவலர் மனநலன் மேம்பாடு' என்ற பெயரில் புத்தாக்கப் பயிற்சிகளை அரசு அளித்தபோதிலும் இந்த எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்தபடியே உள்ளது.

அவசர முடிவுக்கு தள்ளப்படுவது ஏன்?

காவல்துறை

``காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் கைகளில் மட்டும்தான் ஆயுதங்கள் கொடுக்கப்படுகின்றன. அதனால்தான், அவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன. அவர்கள் பணியில் சேர்ந்த 3 மாதங்களுக்குப் பிறகுதான் ஆயுதத்தின் பக்கமே கூட்டிச் செல்கின்றனர். குறிப்பாக, எந்தவித கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்களைத்தான் காவல்துறையிலும் ராணுவத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு, `கஷ்டம் உள்ளது' எனக் கூறுவது ஏற்புடையதல்ல" என்கிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

காவல்துறை

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய கருணாநிதி, `` காவல்துறையில் தவறு செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதால் சிலர் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலருக்கு குடும்பத்தில் சிரமங்கள் இருக்கும். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியாமல் சிலர் தவிக்கின்றனர்.

காவல்துறையில் நல்ல பெயரை எடுத்தவர்கள்கூட இதுபோன்ற துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசர முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் கையில் வடிகாலாக ஆயுதங்கள் இருப்பதால் எளிதில் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.

விடுப்பு இல்லாததுதான் காரணமா?

நாம் செய்ய வேண்டியதெல்லாம், காவலர்களுக்குத் தனிப்பட்ட சிரமங்கள் எதாவது இருப்பதை சக காவலர்கள் உணர்ந்தால், அதை உடனே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அந்தக் காவலரின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது அவரின் தனிப்பட்ட விவகாரம் என அமைதியாக இருப்பது சரியானதல்ல. தற்கொலை எண்ணத்தில் உள்ள காவலருக்கு ஆறுதல் கொடுத்தாலே போதும். அந்தக் காவலர் தவறான முடிவுக்குத் தூண்டப்படுவதைத் தவிர்க்க முடியும்" என்கிறார்.

மேலும், `` காவல்துறையில் பணியாற்றுகிறவர்களுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு என்பது எப்போதுமே இருக்கிறது. ஆனால், அதனை சரிவர வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. எப்போது பிரச்னை வரும் எனத் தெரியாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிட்டால், காவல் நிலையமே பரபரப்பில் இருக்கும். அப்போது விடுப்பு கேட்கும் எண்ணம் தோன்றாது. வேலை இருந்தால்தான் சம்பளம் என்ற நிலையும் இந்தத் துறையில் இல்லை. 24 மணிநேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தால், அடுத்தநாள் ஓய்வெடுக்கச் சென்றுவிட வேண்டும். காவலர்களுக்கு அவ்வப்போது அதிகாரிகளும் ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்" என்கிறார்.

முன்கூட்டியே உணர்த்தப்படும் குறிப்புகள்

``மரபணுரீதியாகவும் போதைப் பழக்கங்களில் சிக்கிக் கொள்வதாலும் மனநோய்கள் வருகின்றன. அது தற்கொலை முடிவை நோக்கித் தூண்டுகிறது. நீண்டகாலமாக தீர்க்க முடியாத நோய்களால் அவதிப்பட்டு வந்தாலும் சிலர் தற்கொலை முடிவை நாடுகின்றனர். மூளையில் உள்ள வேதிப் பொருள்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது தற்கொலை எண்ணம் தோன்றுகிறது" என்கிறார், சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

மோகன்

மோகன வெங்கடாசலபதி, மனநல மருத்துவர்

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``அண்மைக்காலமாக, தற்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. இதற்குக் காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஈடுசெய்யக் கூடிய அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு வாழ்க்கை நிறைவடையாமல் இருப்பது என மத்தியதர வர்க்கத்தினர் இடையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தற்கொலை எண்ணத்தை நாடுகின்றனர்.

அதாவது, நீண்டகாலமாக நீடித்திருக்கும் பிரச்னைக்குத் தற்காலிக தீர்வாக தற்கொலை செய்து கொள்கின்றனர். உளவியல்ரீதியாக பார்த்தால், `மானம் மரியாதை போய்விட்டது' எனக் கூறி தற்கொலை செய்பவர்களும் உள்ளனர். அனைத்து தற்கொலைகளும் திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில நொடிகளில் திடீரென முடிவெடுத்துவிடுவார்கள். அவ்வாறு முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பவர்கள், `தனக்கு வாழப் பிடிக்கவில்லை,' என குறுஞ்செய்தி அனுப்பி முன்கூட்டியே உணர்த்துவார்கள்.

உளவியல் பயிற்சியால் என்ன பலன்?

நிறைய படித்தவர்கள் கூட, `நான் எதற்காக வாழ வேண்டும்?' என வெளிப்படையாகப் பேசுகின்றனர். இதில், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. பணியின் சுமை தாங்க முடியாமல், மருத்துவர் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். ஒரு பிரபலம் தற்கொலை செய்து கொண்டால், அதைப் பற்றி ஊடகங்கள் விரிவாக எழுதுவதும் சாதாரண மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. `அவரே இறந்து விட்டார், நானெல்லாம் எம்மாத்திரம்' எனக் கருதுகின்றனர்" என்கிறார்.

தொடர்ந்து காவலர்களின் தற்கொலைகள் குறித்துப் பேசியவர், `` காவலர்களின் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இடைவிடாத பணிச்சுமை, ஓய்வில்லாமல் இருத்தல், இரவு பகல் பாராமல் கூப்பிட்ட நேரத்துக்குச் செல்வது என கடுமையாகப் பணிபுரிகின்றனர். இதனால், பலரால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடிவதில்லை. இதனை உணர்ந்து காவலர்களின் மனநிலையைப் பாதுகாப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் உளவியல் ஆலோசகர்கள் மூலம் புத்தாக்கப் பயிற்சிகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்ட நல்ல முயற்சியாக இதனைப் பார்க்கிறேன்.

நம்பிக்கை கொடுங்கள்

சில காவல்துறை உயர் அதிகாரிகள், இதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இதன்மூலம் தற்கொலை எண்ணத்தை எளிதாக தடுத்துவிட முடியும். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, `நடவடிக்கை எடுங்கள், நம்பிக்கை கொடுங்கள்' என்பதை கருப்பொருளாக வைத்துள்ளனர். நமக்கு அருகில் உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தால் அவர் அருகில் அமர்ந்து பேசி ஆறுதல் கொடுக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தை மாற்றும் தீர்வு யாரிடம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதனைத் தேடிச் செல்வதுதான் சரியாக இருக்கும்" என்கிறார்.

மேலும், ``காவலர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ராணுவத்தில் பயிற்சியின்போதே சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். காவலர்களில் பலவீனம் உள்ளவர்களை சக காவலர்கள் கவனிக்க வேண்டும். அதற்கு முறையான சிகிச்சையளித்தாலே போதும். உடல் நலனைப் பேணிக் காக்கும் அளவுக்கு மனநலனையும் பேணிக் காப்பது அவசியம். அப்போதுதான் ஆரோக்கியமான சமூகம் உண்டாகும்" என்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி