ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி – எல பிரதேச சபையின் சுயாதீன வேட்பாளர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.


முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில், உண்மையான தேசப்பாளர்கள் என்ற புதிய அமைப்பின் முதலாவது செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அருண் வெங்கடேஷ், தேசத்திற்காக உழைத்த மலையக மக்கள் தற்போது தேசத்தின் மாற்றத்திற்காக அணி திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

”இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், இயற்கை வளத்தையும், இந்த நாட்டின் நீர் வளத்தையும் காக்கின்ற மிக முக்கியமான மலையக சமூகத்தின் ஒரு இளைஞனாக இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ஜனநாயகம் என்கிற ஒரு மக உன்னதமான சக்தியில் எப்போது எல்லாம் விரிசில் ஏற்பட எத்தணிக்கிறதோ அப்போது எல்லாம் உண்மையான தேசப்பற்றாளர்கள் தங்களின் மௌனத்தைக் கலைத்து தேசியத்தைக் காக்க முன்வருவது இயல்பானது தான்.

தேசிய அரசியலாக இருக்கட்டும், மலையக அரசியலாக இருக்கட்டும், தமிழ் தேசிய அரசியலாக இருக்கட்டும் அல்லது மத ரீதியான அரசியலாக இருக்கட்டும் இவற்றில் கிடைக்கும் ஒதுக்கீட்டையும், இலாபத்தையும் மட்டும் கணக்கில் கொண்டு, உண்மையான தேசபக்தியுடன் கூடிய ஒரு ஆரோக்கியமான அரசியலை நாங்கள் இழந்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்தின் பெறும் வாய்ப்பான தேர்தல் காலங்களில் கிடைக்கின்ற வாய்ப்புக்களையும், தேசபக்திக்கான கடமையையும் நாம் இழந்து விடுகிறோம். அப்போது சலுகை அரசியலுக்கு முக்கிய இடத்தை வழங்கிவிடுகிறோம். இந்த முக்கியத்துவத்தை எமது நாட்டிற்காகவும். தேசியத்திற்காகவும் கொடுத்திருந்தால் நிறைய விடயங்கள் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்திருந்திருக்கும்.

ஆனால், அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்த இந்த அரசியலில் என்ன இலாபத்தைக் கண்டுவிட்டோம். ஒன்றும் கிடைக்கவில்லை.

மலையக சிறுபான்மை இனத்தின் இளைஞனாக நான் நேரடியாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். 200 ஆண்டுகளுக்கு மலையக சமூகம் இங்கு கூலி வேலைக்காக வந்தது. ஆனால் இன்றும் கூட இரண்டு நூற்றாண்டுகள் தாண்டி எங்களின் பெரும்பாலான இளைஞர்கள் கொழும்பிலும், இந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் கூலி வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர். யோசித்து பாருங்கள். இது ஒரு கலாசாரமாக, இந்த நாட்டிற்கு கூலித் தொழிலாளிகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மலையகம் இருந்து வந்துள்ளது.

மலையக சமூகம் கூலித் தொழிலை செய்யப் போவதில்லை என விலகிக் கொண்டால் மீண்டும் வெளிநாடுகளில் இருந்து கூலிகளைக் கொண்டுவர வேண்டியிருக்கும். இதற்கு முக்கிய காரணம், தேசியம் என்ற உணர்வை நாம் விட்டுவிட்டோம். அனைவரும் விட்டுவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும்.

நூறு கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் தான் இந்தியன் என்று சொல்லும் போது, இரண்டரை கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை உருவாக்கியது யார்? எங்களுக்குத் தெரியாது. மலையக சமூகம் என்பது இந்த நாட்டிற்கு உழைத்த சமூகம். எனினும், இந்த சமூகத்தைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை. தேர்தல் காலங்களில் மட்டும் இந்த மக்கள் குறித்து பேசுகின்றனர். இது மிகப் பெரிய பிழை.

இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால், இந்த நாட்டில் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால், கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயமாக தேசப்பற்றை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களின் பின்னால் மாத்திரம் ஒரே நாடு ஒரே தேசம் என்று அடித்துக் கொண்டால் போதாது. ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இதனைப் பொறித்துக் கொள்ள வேண்டும்.

யாரிடம் பேசினாலும், இந்த நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் திடீரென ஏற்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், திடீரென்று தான் முகக் கவசத்தை அணிய நேரிட்டது. மூன்று, நான்கு மாதங்களில் இலங்கையின் அனைத்து இடங்களிலும், அனைத்து மக்களும் முகக் கவசம் அணிய நேரிட்டது. இதேபோல் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் நாம் ஆரம்பித்துள்ளோம்.

இன்னுமும் இந்த தேசம் இப்படியே சென்றால் பல நூற்றாண்டுகளுக்கு பிரிவினைவாதத்தில் இல்லாமல் அழிந்து, வேறு ஆக்கிரமிப்பாளர்கள் வந்து எம்மையும், இந்த நாட்டையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். இதில் நாம் அனைவரும் சிக்கித் தவிக்க நேரிடும் என்பதை நீங்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் இஸ்லாமிய சமூகமாக இருக்கட்டும், தமிழ்ச் சமூகமாக இருக்கட்டும், மலையக சமூகமாக இருக்கட்டும், வடக்கு கிழக்கு சமூகமாக இருக்கட்டும், எல்லோரும் இலங்கையர் என்று பெருமையாக, கம்பீரமாக, கொலர்களை உயர்த்தி சொல்லும் காலத்தை உருவாக்க வேண்டும். இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

ஒரு விதையை விதைப்பதற்கு முன்பு மண்ணை வளப்படுத்துவதைப் போன்று இந்த நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கு முன்னர் மனிதர்களின் எண்ணத்தை சுத்தப்படுத்த வேண்டும். இல்லையெனில் எதனையும் செய்ய முடியாது. செய்வதில் அர்த்தமும் கிடையாது. இங்கு ஒரு வீதியை செய்வதும், அங்கு ஒரு வீதியை செய்வதும், அல்லது இரண்டு மின்விளக்குகள் பொருத்துவதிலும் எந்த மாற்றமும் நாட்டில் ஏற்படப் போவதில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி