கப்பல் தீப்பற்றியமை மற்றும் எரிபொருற்களின் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பாலத்துறை லுனுபொக்குன பிரதேச மீனவர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு செய்ததுடன், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொடவை கைது செய்ய முயன்ற போது மீனவர்கள் கடுமையாக எதிர்த்த நிலையில் பொலிஸாரின் முயற்சி கைவிடப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் தீப்பிடித்து இன்றோடு ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. இந்த ஒரு மாத காலத்தில் மீனவ மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பிடிக்கும் மீன்களை மக்கள் விலைக்கு வாங்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாத்திரமல்ல, எரிபொருள் விலையேற்றம் காரணமாக மீனவ மக்கள் மேலும் கஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். என்றாலும்  அரசாங்கம் மீனவ மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபாய்  வழங்குவதாகச் சொன்னாலும் பெருமபாலான குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த அனைத்து காரணிகளாலும் இன்னலுக்காளாகியிருக்கும் கம்பஹ, புத்தளம், கொழும்பு  மீனவ மக்களோடு சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததோடு, கொழும்பு பாலத்துறை லுனுபொக்குன மீனவ கிராமத்தில்  மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றாலும் அவ்விடத்திற்கு வந்த பாலத்துறை பொலிஸார் ஆர்ப்பாட்டத்திற்கு  இடையூறு செய்து, தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டதாகக் கூறி அங்கிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் உட்பட சிலரை கைது செய்ய முயன்றுள்ளனர்.

கடந்த காலத்தில் ஆறுமுகம் தொண்டமானின் மரண வீடு தொடங்கி சமீத்தில் நடந்த இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரரின் தாயாரினது மரண வீடு வரை  தனிமைப்படுத்தல் சட்டத்தை வௌிப்படையாகவே மீறியதை காணக் கூடியதாக இருந்தது.  அந்த நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தாத பொலிஸ், தமக்கு நேர்ந்துள்ள அநீதிக்கு எதிராக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு இடையூறு செய்வது ஏனென லுனுபொக்குன மீனவ மக்கள் கேட்கிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி