1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பசிஃபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தொலைதூர தீவுகளில் ஒன்றான சமோவா நாட்டில் புதிய பெண் பிரதமராக தேர்வான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபாவை பதவியேற்க விடாமல் தேர்தலில் தோல்வியடைந்தவரின் ஆதரவாளர்கள் விரட்டியடித்துள்ளனர்.

இதனால், பதவியேற்பு விழாவுக்கு நாட்டின் தலைமை நீதிபதியுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்ற அந்த பெண் பிரதமர், கடைசியில் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் அவசரகதியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அளவில் சிறியது என்றாலும், நியூஸிலாந்துக்கும் ஹவாயி தீவுக்கும் மத்தியில் பசிஃபிக் பிராந்திய பகுதியில் உள்ளது சமோவா நாடு. இங்குள்ள மொத்த மக்கள்தொகையே சுமார் இரண்டு லட்சத்து பத்தாயிரம்தான்.

பொருளாதாரத்தில் வலுவுடன் உள்ள இந்த நாடு, தீவிர வறுமையை இதுவரை கண்டதில்லை. காரணம், இதன் பழங்கால வரலாறு. ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் நியூஸிலாந்து என இரு வலுவான பொருளாதார நாடுகளின் ஆதரவு எப்போதுமே சமோவாவுக்கு இருக்கும்.

இங்கு 22 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் ட்வீலாஎப்பா அயனோ சிலேலே மலீலெங்கொய். ஜனநாயக நாடாக அறியப்படும் சமோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் பிரதமர் ட்வீலாஎப்பா அயனோவை பெண் வேட்பாளரான ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா தோற்கடித்தார். பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நவோமே, ஏற்கெனவே நாட்டின் துணை பிரதமராக இருந்தவர்.

தேர்தலில் வென்ற மகிழ்ச்சியுடன் திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள தலைமை நீதிபதியுடன் சென்ற அவருக்கு நாடாளுமன்ற வாயிலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

சமோவா

சமோவா

அங்கு தோல்வியுற்ற ட்வீலாஎப்பாவின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் அவர்களை நுழைய விடாமல் வழிமறித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கு உள்ளே நுழைய முற்பட்டவர்களையும் அவர்கள் விரட்டினர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்புக்கு மத்தியில் பல மணி நேர காத்திருப்புக்குப் பிறகு நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில் தமது பதவியேற்பு விழாவை நடத்திக் கொள்ள ஃபியாமே நவோமி முடிவு செய்தார். அதன்படி, நவோமே மட்டாஃபியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நாடாளுமன்றத்துக்குள் இருந்த ட்வீலாஎப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாரம்பரிய முறைப்படி நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படாத பதவிப்பிரமாணம் சட்டவிரோதமானது என்று தெரிவித்தனர்.

தேர்தல் பரபரப்பு

சமோவா

ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா

சமோவா நாட்டில் ஆளும் ட்வீலாஎப்பா அயனோ சிலேலே மலீலெங்கொயின் ஹ்யூமன் ரைஸ்ட் ப்ரொடெக்ஷன் கட்சி, சுமார் 40 ஆண்டுகலாக ஆட்சியில் இருந்துள்ளது. அதற்கு எதிரணியில் இருந்தது நவோமேயின் ஃபாஸ்ட் கட்சி. இங்கு நீண்ட தேர்தல் போராட்டத்துக்கு பிறகு ஏப்ரல் மாதம் நடந்த வாக்குப்பதிவில் இரு கட்சிகளும் தலா 25 இடங்களில் வென்றன. ஆனால், ஒரேயொரு சுயேச்சை எம்.பி தமது ஆதரவை ஃபாஸ்ட் கட்சிக்கு வழங்கினார். அந்த தேர்தலில் ஃபாஸ்ட் கட்சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்று ட்வீலாஎப்பா அயனோ சிலேலே மலீலெங்கொய் கட்சி முறையிட்டது. இதைத்தொடர்ந்து சமோவா தேர்தல் ஆணையம் ஏப்ரலில் நடந்த தேர்தலை ரத்து செய்தது. பிறகு ஆணையத்தின் உத்தரவின்படி மே 21ஆம் தேதி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சமோவா

ட்வீலாஎப்பா அயனோ சிலேலே மலீலெங்கொய், முன்னாள் பிரதமர்

ஆனால், தேர்தலுக்கு ஐந்து நாட்கள் இருந்த வேளையில், சமோவா உச்ச நீதிமன்றம், ஹ்யூமன் ரைஸ்ட் ப்ரொடெக்ஷன் கட்சிக்கு எதிராக தீர்ப்பளித்தது. எம்.பி.க்கள் ஆதரவு அடிப்படையில் ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா பிரதமராக பதவியேற்கலாம் என்று அனுமதி அளித்தது.

இதன் மூலம், 22 ஆண்டுகளாக நாட்டின் பிரதமர் பதவியில் நீடித்து வந்த ட்வீலாஎப்பா அயனோ சிலேலே மலீலெங்கொய் ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.

இந்த நாட்டின் முதலாவது பிரதமராக இருந்தவரின் மகள்தான் 64 வயதாகும் ஃபியாமே நவோமி மட்டாட்டாஃபா. 1980களில் இருந்து இவர் சமோவா அரசியலில் தீவிரமாக பங்கெடுத்து வருகிறார்.

சமோவா தீவு எங்குள்ளது?

சமோவா

சமோவா

தென்கிழக்கு ஆசியாவிலிருந்து குடியேறியவர்கள் சமோவாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக தொல்பொருள் சான்றுகள் காட்டுகின்றன. 1700-கள் வரை ஐரோப்பியர்கள் இப்பகுதிக்கு வரவில்லை, 1830-களில், இங்கிலாந்திலிருந்து மிஷனரிகள் மற்றும் வர்த்தகர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினர்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமோவான் தீவுகள் அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டன, 1904ஆம் ஆண்டில் கிழக்கு திசைகள் அமெரிக்க சமோவா என அழைக்கப்பட்டது. மேற்குப்புற தீவுகள் மேற்கு சமோவாவாக மாறியது, மேலும் அவை 1914ஆம் ஆண்டு வரை ஜெர்மனியால் கட்டுப்படுத்தப்பட்டன, அந்த கட்டுப்பாடு நியூசிலாந்திற்கு சென்றது. 1962இல் சுதந்திரம் பெறும் வரை மேற்கு சமோவாவை நியூசிலாந்து நிர்வகித்தது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, இப்பகுதியில் சுதந்திரம் பெற்ற முதல் நாடு இதுவாகும்.

1997ஆம் ஆண்டில், மேற்கு சமோவாவின் பெயர் சமோவா சுதந்திர மாநிலமாக மாற்றப்பட்டது. இருப்பினும், இன்று, உலகின் பெரும்பகுதி நாடுகள், இந்த இடத்தை சமோவா என்றே அழைக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பத்து நாடுகள் வரிசையில் சமோவா எட்டாவது இடத்தில் உள்ளது.

2011ஆம் ஆண்டில், சமோவா என்ற இந்த குட்டித் தீவு சர்வதேச திகதி எல்லைக்கோட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு மாறி விடுவது என்று முடிவு செய்தது. அதன் மூலம் அந்த தீவு கால அளவில் ஒரு நாள் முன்னுக்கு சென்றது. இந்த நடவடிக்கை அதன் வர்த்தகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த தீவு கூறியது.

ஒரு நாள் முடிவதைப் பார்க்கும் கடைசி நாடுகள் சிலவற்றுள் ஒன்றாக பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சமோவா தீவுகள் நாடு அமைந்தது. அதாவது, இங்குதான் ஒரு நாள் என்பது கடைசியாக உதயமாகி, கடைசியாக முடிவடைவதாக கணக்கிடப்படுகிறது.

2011க்கு முன்புவரை, சமோவா தீவுகள், அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டை விட 23 மணி நேரங்கள் பின்னதாக இருந்தது. புதிய நேர கணக்கீடு மாற்றத்துக்குப் பிறகு, நியூசிலாந்துடன் ஒரே நாளில் சமோவா இருக்கும், ஆனால், ஒரு மணி நேரம் நியூசிலாந்தை விட முன்னதாக இருக்கும்.

சமோவா

இந்த நேர மாற்ற நடவடிக்கை, சமோவா நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காகவும் செய்யப்பட்டது என்ற ஒரு கூற்று உள்ளது.

அண்டை நாடான, சமோவா தீவுகள், சர்வதேச திகதிக்கோட்டுக்கு கிழக்கேயே இருக்கும். எனவே இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் அங்கு தங்களது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு அடுத்த நாள் ஒரு விமானத்தில் சிறிது நேரம் பயணித்து அடுத்த தீவுக்கு சென்று மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடுவதால் இது பசிஃபிக் சுற்றுலாவில் முக்கிய இடமாக கருதப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி