நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு குறித்த தினத்தில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய, சிநேகப்பூர்வமான, உள்ளூராட்சி சபைக்கு பொருத்தமானவர்களை நாட்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல்கள் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனைகளானது எமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் அபிவிருத்திக்கு பிரதான தடையாக அமைகின்றன.
ஒரு நாளைக்கு எமது நாட்டில் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் பாவனைகளுக்காக 121 கோடி ரூபாய் எனும் பெருந்தொகையை மக்கள் செலவழிக்கின்றனர். சராசரியாக கிராமமொன்றில் மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைகளுக்காக சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது.
இதனால் பல குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகின்றது. இந்நிலைமையானது குறிப்பிட்ட கிராமத்தின் அபிவிருத்திக்கு பிரதான தடையாகவும் அமைகின்றது. சில பிரதேசங்களில் மதுசாரத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தாராளத்தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது மேலும் புதிய மதுசாரசாலைகள் உருவாக்குவதற்கான முயற்சிகளும் அவ்வப்போது இடம்பறுகின்றன.
மேலும் மதுசாரத்தை காரணமாக வைத்து பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகமாக இடம்பெறுகின்றன. சமூக மட்டத்தில் ஏற்படுகின்ற சீர்கேடுகளுக்கும், மதுசார பாவனை காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டில் பொது இடங்களில் மதுசாரம் மற்றும் புகைப்பொருட்களின் பாவனை தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னமும் இவற்றின் பாவனை பொது இடங்களில் இடம்பெறுகின்றன. இதனால் பொது மக்கள் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
மதுசாரம் மற்றும் சிகரட் நிறுவனங்களானது எமது நாட்டில் தினமும் சுமார் 55 பேரை அகால மரணமடையச் செய்கின்ற நிறுவனங்களாகும். இழக்கப்படுகின்ற ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஈடு செய்வதற்காக எமது பிரதேசத்திலுள்ள இளைஞர்களையும், சிறுவர்களையும் இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கான விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன.
உள்ளூராட்சி சபைகளின் ஊடாக அச்சபைகளுக்குட்பட்ட பிரதேசங்கள் கண்காணிக்கப்படுவதோடு அப்பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
ஆகவே இது போன்ற பல்வேறு இன்னல்களை பொது மக்களுக்கு விளைவிக்கும் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவும், பாவனைகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும், குறிப்பிட்ட நிறுவனங்களின் பொறியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் உள்ளூராட்சி சபைகள் மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளைக் குறைப்பதற்காக முன்வர வேண்டியமை மிகவும் முக்கியமானதாகும்.
எமது நாட்டில், பொது மக்கள் உள்ளூராட்சி சபைகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாக இருப்பதுடன், உள்ளூராட்சி சபைகள் இலகுவாக பொது மக்களை அணுகவும் முடிகின்றது. ஆகவே மக்களின் குரலாக தேசிய ரீதியில் மதுசாரம், புகைப்பொருட்கள், மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகளிலிருந்து அழுத்தங்கள் வழங்குவதற்கு முன்வர வேண்டியமையும் முக்கியமானதாகும்.
மேலும் குறிப்பிட்ட பிரதேசத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இயங்கும் உள்ளூராட்சி சபைகள் அப்பிரதேச மக்களுக்கு மதுசாரம், புகைப்பொருள், மற்றும் ஏனைய போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவதற்கும், மதுசாரம் மற்றும் சிகரட் நிறுவனங்களின் தலையீடுகளை குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து அகற்றுவதற்கும் வராமல் தடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகள் முன்வர வேண்டும்.
ஆகவே இம்முறை எமது பிரதேசத்தை மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகளைக் குறைப்பதற்காக எந்த நபரை தேர்ந்தெடுத்து உள்ளூராட்சி சபைகளுக்கு அனுப்பவுள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய, சிநேகப்பூர்வமான, உள்ளூராட்சி சபைக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்வோம்! தெரிவு உங்களது கைகளில் என குறிப்பிடப்பட்டுள்ளது.