அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், USAIDஇன் செயல்பாடுகளை இடைநிறுத்த முடிவு
செய்ததன் காரணமாக, இந்த ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, பல உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாததால், வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய ஜனாதிபதித் தேர்தலின் போது ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல்வேறு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் இந்த நாட்டில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் சில வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.