கரைத்துறைப்பற்றில் எட்டு கிராமங்களது காணி நிருவாகத்தினை மகாவலியின் கீழ் கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த நிலங்களை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி, மகாவலி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார் என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

4 ம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இவ்விடயத்தை ஆராய அமைக்கப்பட்ட செயற்குழுவின் நடவடிக்கை முற்றுப்பெறாத நிலையில் ஜனாதிபதி தன்னிச்சையாக எந்த முடிவினையும் எடுக்க முடியாது. நீதியற்ற இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு நான் கோருகிறேன்.

ஐனாதிபதியை தனது முடிவினை மீளாய்வு செய்யுமாறும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோருகிறேன் என்றார். அவரது உரையின் முழுவிபரம் வருமாறு-

கொவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நி​லைமையினால் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரிய பொருளாதார பிரச்சினையிலிருந்து தப்பமுடியாதுள்ளது.

இது இந்த நாட்டுக்கு மட்டுமான ஒரு பிரச்சினையல்ல இது ஒரு உலகம் தழுவிய பிரச்சினை. அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இங்கு உரையாற்றிய போது இப்பிரச்சினையை விபரித்து, இதனை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ள விழைகிறது என்பதனை விளக்கினார்.

அந்தப் பின்னணியில் கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் பொருண்மிய பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இலங்கையில் வாழும் சாதாரணமக்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனராயின் வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் நிலையைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள் அதனை உங்களது கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன்.

முப்பத்திரண்டு வருட யுத்தகாலத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீள முடியாதுள்ளனர். இந் நிலையில் இந்த கோவிட் 19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள நிலவரத்திற்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பின்புலத்தில் தமிழர் பிரதேசத்தில் நடைபெறும் விடயங்களை சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த பெரும்துயரத்தின் மத்தியிலும் இவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாமல் தமிழர்களுக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ப்படுகின்றன. 1984ம் ஆண்டு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் அங்கிருந்து இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இராணுவம் நடவடிக்கையொன்றினை மேற்கொள்ளுவதற்காக இம்மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் 2012ம் ஆண்டுவரை இடம்பெயர்ந்தவர்களாக வேறு இடங்களில் தங்கியிருந்தனர். அதுவரை அவர்கள் அங்கு மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை.

பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை மீளக்குடியேற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்கு சில பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். போருக்குப் பின்னர் அங்குள்ள நிலங்களின் சட்டரீதியான தமிழ் உரிமையாளர்கள் மீளக்குடியேற முற்பட்டபோது, அந்நிலங்கள் மகாவலி அபிவிருந்தி அதிகாரசபைக்குட்பட்ட பிரதேசம் என்று கூறப்பட்டது.

கொக்கிளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் கிழக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு, செம்மலை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் மகாவலி அபிவிருந்தி அதிகாரசபையின் கீழ் வருவதாக 2007ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் மீளக்குடியேறி நெற் செய்கை மேற்கொள்ள முற்பட்டபோது சட்டரீதியான உரித்துடைய, உறுதிப்பத்திரங்களைக் கொண்ட காணிகளிருந்தும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கியிருக்கிறது. இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியாயிருந்தபோதிலும், காணி நிர்வாக அதிகாரம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திடமே வழங்கப்பட்டிருந்தது.

அதனால் கரைத்துறைப் பற்று பிரதேச செயலாளர் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை மீளக்குடியேறுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் இந்த எட்டு கிராம சேவகர் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்பதற்கு முயன்றது.

காணிகளை நிர்வகிக்கு அதிகாரத்தை தாம் பெற்றுகொள்வதாகவும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை தங்களுக்கு மாற்றுமாறு மகாவலி அபிவிருந்தி அதிகாரசபை பிரதேச செயலாளருக்கு அறிவித்தது. அச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாம் இவ்விடயத்தை அறிந்துகொண்டோம்.

கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரும் நாங்களும் அமைச்சர் சாமல் இராஜபக்சவை சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டுவர விரும்பினோம். அவர் தன்பங்கிற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனபரிபாலன திணைக்களம், மற்றும் சம்பந்தப்பட்ட இதர திணைக்களங்களையும் தொடர்புகொண்டு ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தார். அதில் இந்த காணிகளை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு மாற்றுவதனை இடைநிறுத்துவதற்கு அமைச்சர் உடன்பட்டார்.

சம்பந்தப்பட்ட தரப்புகளை உள்ளடக்கியதாக ஒரு செயற்குழுவை உருவாக்கி அவர்களின் உடன்பாட்டுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் அவர் இணங்கினார்.

அமைச்சர் அந்த செயற்குழுவை நியமித்திருந்தபோதிலும் நாட்டிலுள்ள கொவிட் தொற்று நிலவரத்தினால் அச்செயற்குழு ஒரு தடவையாவது கூடவில்லை.

இருப்பினும் பிரதேச செயலாளர் பணியகத்திலிருந்து மகாவலி அதிகாரசபைக்கு காணிகள் மாற்றப்படுவது இடைநிறுத்தப்பட்டது. இதற்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இது இவ்வாறிருக்க, கடந்த மாதம் ஏப்பிரல் 3ம் திகதி வவுனியா வடக்கு நெடுங்கேணிக்கு பயணம் செய்த ஜனாதிபதி அவர்கள் சிங்களக் குடியேற்றம் நடந்த போகஸ்வெவ என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள சிங்கள மக்களைச் சந்தித்தார்.

அந்த கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு தமிழ்க் கிராமங்களும் ஒரு சிங்களக் கிராமமும் உள்ளன. கொக்கச்சன் குளம் என்ற தமிழ் கிராமம் பின்னர் சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு போகஸ்வெவ என்று மாற்றப்பட்டது. அந்த போகஸ்வெவ சிங்களக் கிராமத்திற்குச் சென்ற ஜனாதிபதி தமிழ் கிராமங்களிலுள்ள மக்களுக்கு தன்னைச் சந்திக்குமாறு அறிவிக்கவில்லை. தனித்து சிங்களக் கிராமத்தில் உள்ளவர்களை மட்டும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு முல்லைத்தீவிலிருந்து வந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் மகாவலி அதிகாரசபை இந்தநிலங்களை பொறுப்பேற்காததால் அங்கு குடியேற்றப்பட்டவர்கள் காணிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக முறைப்பட்டுள்ளார். இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பிரதேச செயலாளர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கமால் தன்னிச்சையாக இந்த நிலங்களை பொறுப்பேற்குமாறு மகாவலி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இதற்கு பொறுப்பான அமைச்சர் இந்தவிடயத்தை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

ஜனாதிபதி அவரது சொந்த மூத்த சகோதரரான அமைச்ருக்கு இவ்விடயம் பற்றி அறிவிக்கவில்லை. அமைக்கப்பட்ட செயற்குழுவின் நடவடிக்கை முற்றுப்பெறாத நிலையில் ஜனாதிபதி தன்னிச்சையாக எந்த முடிவினையும் எடுக்க முடியாது.

நீதியற்ற இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு நான் கோருகிறேன் ஐனாதிபதியை தனது முடிவினை மீளாய்வு செய்யுமாறும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோருகிறேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி