அதிமுக இரு இடங்களிலும் திமுக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 75 இடங்களிலும் திமுக 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

பாஜக மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மநீம சார்பில் முன்னிலையில் உள்ளார்.

பாமக 6 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைக் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரு தொகுதியிலும் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) இரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92, 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியமைக்க கட்டளையிட்ட மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்

மேற்கு வங்கத்தில் வீசும் மம்தா பேரலை! பாஜகவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது ஏன்?

மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் கருத்துக் கணிப்புகள், எக்சிட் போல் எனப்படும் வாக்குச்சாவடி புறவாசல் கணிப்புகள் ஆகியவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி 209 தொகுதிகளில் வெற்றியோ, முன்னிலையோ பெற்றுள்ளது மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்.

கணிப்புகளை மட்டும் தவிடுபொடியாக்கவில்லை மம்தா. தம் கட்சியின் மீது கிட்டத்தட்ட படையெடுப்பே நடத்தி, நிர்வாகிகளை, அள்ளிக்கொண்டு சென்ற பாஜகவின் ஆட்சிக் கனவையும் அவர் தகர்த்திருக்கிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் வென்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புகளோடு பாஜக அந்த மாநிலத்தில் பல அரசியல் முயற்சிகளை அரங்கேற்றி வந்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பல முக்கியத் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு இழுக்கப்பட்டார்கள்.

தீவிரமாக நடந்த திரிணமூல் - பாஜக அரசியல் மோதலுக்கு நடுவில் மேற்கு வங்கத்தின் அதிகாரவர்க்கம் மாட்டிக்கொண்டது.

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மேற்கு வங்கத்துக்கு சென்றபோது அவரது வாகனத்தின் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு அம்மாநிலத்தின் அதிகாரிகளுக்கு கடும் அழுத்தத்தை தந்தது.

மம்தா பானர்ஜி

மிக அரிதாக, மேற்கு வங்க மாநிலத்துக்கு 8 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபோது பலரும் நெற்றி சுருக்கினார்கள். பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது பாஜக-வுக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகித்தனர்.

ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும், அந்த கட்டத்தில் வாக்குப் பதிவு நடக்கவுள்ள சிறிய பகுதியில், மத்தியில் ஆளும் பாஜக தனது அதிகார, அரசியல் பலத்தை குவித்து வேலை செய்வதற்கே இது வசதி செய்யும் என்று பலரும் விமர்சித்தார்கள்.

பாஜக, திரிணமூல் தலைவர்களின் பிரசாரம் பல நேரங்களில் கசப்பான கடும் மொழிக்கு மாறியது.

தேர்தல் ஆணையம் சந்தேகித்தபடி, வாக்குப் பதிவு நிகழ்வுகளின்போது வன்முறை வெடிக்கத் தவறவில்லை.

கூச்பெஹார் மாவட்டம் சித்தால்குச்சியில் நடந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரை அல்ல 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் ராகுல் சின்ஹா பேசி அதிர வைத்தார்.

இதற்கு மத்திய அரசை குறை சொன்னார் முதல்வர் மம்தா பேனர்ஜி. வாக்காளர்கள் வாக்களிப்பதை மத்திய படையினர் தடுப்பதாக குற்றம்சாட்டிய அவர் பெண்கள் அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் அப்போதுதான் மக்கள் வாக்களிக்க முடியும் என்று பேசி தம் பங்குக்கு சர்ச்சையை உண்டாக்கினார். அவர் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார் மம்தா.

தம்முடைய நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து பின்னர் பிரிந்து பாஜகவுக்கு சென்ற சுவேந்து அதிகாரிக்கு சவால் விடும் வகையில் அவர் போட்டியிட்ட நந்திகிராமிலேயே அவரை எதிர்த்து களம் கண்டார் மம்தா பேனர்ஜி. அந்த தொகுதியின் முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வாக வெளிவரவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 294 தொகுதிகளில் தேர்தல் நடந்த 292 தொகுதிகளில் 209 இடங்களில் முன்னிலையும், வெற்றியும் பெற்றிருக்கிறது.

பாஜக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தேசிய அரசியலில் காங்கிரசை விலக்கிவைத்த கம்யூனிஸ்டுகள், தாங்கள் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் அவர்களோடு கூட்டணி சேர்ந்து போட்டியை சந்தித்தனர். இந்த கூட்டணியால் ஒரு இடத்தில்கூட வெற்றி முகம் காட்ட முடியவில்லை. சில நேரங்களில், ஓரிரு தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டியது காங்கிரஸ் அவ்வளவே.

8 கட்டத் தேர்தல்தான் காரணமா?

பாஜக-வுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட 8 கட்டத் தேர்தல் கடைசியில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

​கடைசியாக நடந்த 3 கட்டத் தேர்தல்களின்போது இந்தியாவில் தீவிரமடைந்த கொரோனா வைரஸ் தொற்று, அதை மத்திய அரசு சமாளிக்க முடியாமல் தடுமாறியது போன்றவை மேற்கு வங்க மக்கள் வாக்களித்த விதத்தில் செல்வாக்கு செலுத்தியதன் விளைவுதான் மம்தா பேனர்ஜிக்கு பெரிய வெற்றியாக கனிந்திருக்கிறதா?

அல்லது அதிகார பலத்தின் துணையோடு அவரது கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வேட்டையாடப்பட்டது, தேர்தல் பிரசாரத்தின் போது தாக்கப்பட்டு, மம்தா காலில் கட்டோடு தோன்றியது ஆகியவற்றால் ஒரு அனுதாப அலை உருவாகி அவருக்கு பெருவெற்றியைத் தந்திருக்கிறதா என்ற கேள்விகளுக்கான விடையை இனி ஆராயவேண்டியிருக்கும்.

அதைப் போல மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கென சொந்த முகமாக யாரும் சொல்லிக்கொள்வது போல இல்லாத நிலையில், போட்டி என்பது மம்தாவுக்கும், பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் இடையிலான மோதலாகவே உருவெடுத்தது. இந்நிலையில், வங்காளியா, அன்னியரா என்ற வாதத்தை மம்தா பேனர்ஜி கிளப்பியது மக்களிடம் எடுபட்டிருக்கலாம் என்ற பார்வையும் இருக்கிறது.

இதில் ஏதோ ஒரு காரணமோ, அல்லது எல்லா காரணங்களும் சேர்த்தோ, மம்தாவை கரையேற்றியிருக்கின்றன.

மார்க்சிஸ்ட் துடைக்கப்பட்டது ஏன்?

கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல. அவர்களது வாக்கு சதவீதமும் அதலபாதாளத்தில் இருக்கிறது.

அவர்களது படுதோல்வி குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகமது சலீம் தெரிவிக்கையில் அவர், "மக்கள் யாரோ ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றும் வாக்களிப்பார்கள். அல்லது, யாரோ தோற்கவேண்டும் என்றும் வாக்களிப்பார்கள். இந்த முறை அவர்கள் பாஜக தோற்கவேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்த பாடுபடுவதாகவும், தங்கள் கட்சி எப்படி பயங்கர தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது என்பது வங்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி