கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் சிலர் நடிகர் விவேக் மரணத்திற்கு பின்னர் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

ஆர்வத்துடன் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், பக்க விளைவுகள் பற்றிய பயம் அதிகரித்துள்ளதால், தயக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவர்கள்.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமா அல்லது இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது. இரண்டாவது தடுப்பூசி செலுத்துவது குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டோம்.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநராக பணியாற்றியவர் மருத்துவர் குழந்தைசாமி. கொரோனா தடுப்பூசியில் இரண்டாம் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது என்கிறார் குழந்தைசாமி.

''ஒரு நபருக்கு குறிப்பிட்ட மருந்து அலர்ஜி ஏற்படுத்தும் என்றால் அது முதல் முறை அந்த மருந்து செலுத்தப்பட்டவுடன் தெரியவரும். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் அந்த நபருக்கு பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றால் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று மேலும் கூறுகிறார் அவர்.

முதல் தடுப்பூசியில் அந்த நபருக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு எதிரான குறிப்பான நோய் எதிர்ப்பாற்றல் மேலும் பெருகுவதற்குத்தான் இரண்டாவது தடுப்பூசி செலுத்துகிறார்கள். அதனால், இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் அதனால் பாதிப்பில்லை. ஆனால் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வது கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு மேலும் அதிக உதவி செய்யும் என்கிறார் குழந்தைசாமி.

மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு ஊசிகள் இந்திய வகையைச் சேர்ந்த கொரோனாவுக்கு எதிராக மட்டும் பாதுகாப்பு வழங்குமா அல்லது வெளிநாட்டில் இருந்து ஊடுருவியுள்ள கொரோனா திரிபுகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குமா என்ற சந்தேகம் மக்களிடம் நிலவுவது பற்றி கேட்டோம்.

கொரோனா தடுப்பூசி

''இதுபோன்ற குழப்பங்கள் வருவது இயல்புதான். அதாவது இந்தியாவில் தற்போது இரண்டு விதமான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு. இந்த இரண்டு தடுப்பூசிகளும் கொரோனா இரண்டாம் அலையில் வெளியாகியுள்ள எல்லா விதமான திரிபுகளுக்கும் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. அதனால், வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் பரவியுள்ள கொரோனா திரிபுகளையும் இது கட்டுப்படுத்தும்,''என்கிறார் அவர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய சந்தேகங்களை மக்களுக்கு புரியும் வகையில் நிவர்த்தி செய்யாமல் இருப்பதால் குழப்பங்கள் நேருகின்றன என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

''நடிகர் விவேக் மரணத்திற்கு பின்னர் பலருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டுமா என்ற அச்சம் எழுந்துள்ளது இயற்கைதான். இந்திய அரசின் அறிக்கையின்படி, இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பம்தான்.

அதோடு தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமோ அல்லது தடுப்பூசி நிறுவனமோ எந்த பொறுப்பும் ஏற்காது. இழப்பீடும் இல்லை என அறிவித்துவிட்டது.

யாரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்பது இல்லை என்றும் சொல்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் கொரோனா வராது என நிச்சயமாக சொல்லமுடியாது என்றும் கூறுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் கொரோனா வரும் என்ற பட்சத்தில், மக்கள் எப்படி நம்பிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள்,''என கேள்வி எழுப்புகிறார் புகழேந்தி.

கொரோனா தடுப்பூசி

இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட சுமார் 600 மரணங்களில் 15 மரணங்களை இந்தியா அரசு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது என்கிறார் புகழேந்தி. ''இந்திய அரசின் தடுப்பூசியின் பக்க விளைவுகளை கண்டறியும் குழுவிடம் உள்ள விவரங்களின்படி 15 நபர்களின் மரணங்களில் சந்தேகம் உள்ளது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த மரணங்கள் எப்படி ஏற்பட்டன, அதற்கு என்ன காரணம் என பொதுவெளியில் அரசாங்கம் எந்த ஆவணத்தையும் வெளியிடவில்லை.

நடிகர் விவேக் மரணம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்தாலும் பின்னர் அவர்களின் உறவினர்கள் விரும்பவில்லை என காரணம் கூறி கைவிடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால் மக்களிடம் நம்பிக்கையற்ற நிலை ஏற்படுகிறது,''என்கிறார் அவர்.

மக்களிடம் பரவியுள்ள குழப்பங்களை போக்குவது சவாலான காரியம் என கூறும் ஓய்வு பெற்ற ஐசிஎம்ஆர் விஞ்ஞானி மாரியப்பன், அவர்களின் பயம் இயல்பானதுதான் என்கிறார்.

''இரண்டாவது தடுப்பூசி போடாமல் இருப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்த கொரோனா பரவுவதை தடுக்கவேண்டும் என்பதற்காகதான் தடுப்பூசி போடுகிறோம். இந்த ஊசிகள் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காக என்பதால், முதல் ஊசி போட்டவர்கள், இரண்டாவது ஊசி போடுவதால் மேலும் நோய் தடுப்புக்கான வாய்ப்பு அதிகம். அதேநேரம், போடவில்லை என்றால் பாதிப்பு இருக்காது,''என்கிறார் மாரியப்பன்.

மேலும் ஒரு சிலர் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொண்டால், பாதிப்பு இருக்குமா, இருக்காதா என தடுப்பூசி நிறுவனம்தான் ஆய்வு செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி