பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்தான், அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலைகள் அடிக்கத் தொடங்குகின்றன. எல்லாம், ஜெனீவாத் தோல்விகளின்

எதிரொலிகள்தான். ராஜபக்ஷக்கள் மீது, தென்னிலங்கைக்குள்ள பிடிப்பைத் தகர்த்தெறிய இந்தத் தோல்விகளைப் பயன்படுத்தப் பார்க்கின்றன பங்காளிக் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியும். சர்வதேச உறவுகளில் ஏற்பட்டுவரும் தொடர் பின்னடைவுகள், சீனாவின் தலையீடுகளை அதிகரித்துள்ளதாகவே, தென்னிலங்கைக்கு காட்டப்பட்டு வருகிறது. இதில், அரசாங்கம் இரண்டு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஒன்று பங்காளிக் கட்சிகளின் அதிருப்தி. இரண்டாவது ஐக்கிய மக்கள் சக்தியின் வியூகங்கள். பங்காளிக் கட்சிகளில் பிரதானமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடுகளுடன், ஏனைய உதிரிக் கட்சிகள் உடன்படும் விடயங்களிருக்கிறதே, எப்படியோ இணங்கித்தானாக வேண்டும் என்ற கட்டாயத்தை அரசுக்கு இது ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் மண்கவ்வ நேர்ந்த விடயத்துக்கு அவசரமாகச் செய்யும் சிகிச்சைதான் மாகாண சபைத் தேர்தல். எப்படியும் நடத்தியே தீர வேண்டிய கட்டாயத்தை, இந்தியாவின் நடுநிலைமையும், சர்வதேச நெருக்குதல்களும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காகத்தான் இந்த அவசரம். இந்நிலையில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள யோசனைகள், பங்காளிகளுக்குப் பிடிக்கவில்லை. தொகுதிரீதியான தெரிவில், ஒரே கட்சியில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தும் விடயம், பங்கிடலில் பங்காளிகளுக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.

உதாரணத்திற்கு கொழும்பு மேற்கு தொகுதியை எடுத்துக் கொண்டால், ஒரு கட்சிக்கா? மூன்று வேட்பாளர் அல்லது அரசின் கூட்டுக்கா? என்ற சிக்கல் எழுகிறது. அரசின் கூட்டுக்காக இருந்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுறு பெரமுன என்பன வேட்பாளர்களை நிறுத்தும். கூட்டுக்குள்ளே குத்துவெட்டை ஏற்படுத்தாதா இது? என்பதுதான் எழுந்துள்ள சிக்கல். ஒரு கட்சிக்காக இருந்தால் ஜனாதிபதி, பிரதமர் என ஆரம்பமாகும் அதிகாரத் தொடரில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாய்ப்புக்கிட்டும்தானே! இதுமாத்திரமல்ல, அளவுக்கு அதிகமாகவுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் வாய்ப்புக் கொடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்த முறைதானே அவசியம். முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் அழுத்தமும், இத்தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி விட்டதே. எல்லாமே விகிதாசாரத் தெரிவில் என்றால், எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுக்கலாம், அப்படியில்லையே! இந்தமுறை. அதற்காகத்தான் ஒரே தொகுதியில் மூன்று வேட்பாளர்கள். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிந்தனையே இப்புதிய முறையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இனி, எஞ்சியுள்ள முப்பது வீத, விகிதாசாரத்தில்தான் எதையாவது பெறவேண்டி வரும் இந்தப் பங்காளிகளுக்கு. இதற்காகவே சிறிய கட்சிகள் இதை எதிர்க்கின்றன.

தென்னிலங்கையில் ராஜபக்ஷக்களின் பிடிகள் இருக்கும் வரைக்கும், இத்தளத்தை நம்பியுள்ள சிறிய கட்சிகளுக்கு உண்மையில், இது பாதிப்பையே ஏற்படுத்தும். மட்டுமல்ல ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிறியவர்களுக்கும் இதுதான் நிலைமை. வடக்கு, கிழக்குக்கு வெளியில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் மற்றும் அடையாளமாக வாழும் தமிழர்களின் தெரிவுகளையும் இப்புதிய முறை கேள்விக்குட்படுத்தப் போகின்றது. மறுபக்கத்தில் யாரைத் திருப்திப்படுத்த இந்த அவசரம். புலிகள் இல்லாத நிலையில், யாருக்குத் தேவை அதிகாரப் பகிர்வு என்கின்றனர் பௌத்த மதகுருமார். ஏற்கனவேயிருந்த அதிகாரத்தையே, வடமாகாண சபை முறையாகப் பயன்படுத்தவில்லை. இன அடையாளத்துக்கான அதிகாரப் பங்கீடுகள், புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளையே பலப்படுத்தும் என்பதுதான் பௌத்த மகாபீடங்களின் கருத்தாகவுமுள்ளது. இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைகளைப் பலப்படுத்தி, மக்களின் நேரடித் தொடர்புகளை மத்திய அரசாங்கம் பேண வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சலசலப்புக்கள் போதாதென்பதற்காக, கொழும்பு துறைமுக நகரம் பற்றியும் அரசாங்கத்தின் முக்கிய எம்.பிக்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். சீனாவின் கொலனியாக இலங்கை மாறும் அபாயத்தையே இது ஏற்படுத்தும் என்கிறார் விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதில், கணிசமான பங்காற்றிய அபயராம விகாராதிபதி முறுத்தட்டுவ தேரரும், துறைமுக நகரம் சிங்கள சமூகத்திற்குள் ஆழமான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், தேர்தலுக்கு அவசரப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்கிறார். இவ்வாறான அச்சத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் ஜே.வி.பியுமே ஏற்படுத்தி வருகின்றன. கொழும்பு துறைமுக நகருக்கான பொருளாதார ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அனுமதி கோரும் விடயம் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவுள்ளது. இது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், ஐந்து அல்லது ஏழுபேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமிப்பார். இந்தக் குழுவே, இந்நகரத்தின் கொடுக்கல், வாங்கல்களைக் கையாளும். இவை, சீனாவின் நாணயத்தில்தான் (யுவான்) இடம்பெறும்.

உள்நாட்டு வர்த்தகர்கள், இந்த கொழும்பு துறைமுக நகருக்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. கொழும்பு மாநகர சபையோ அல்லது நாட்டின் எந்தவொரு உள்ளூராட்சி மன்றமோ இந்நகரின் செயற்பாடுகளுக்கு வரிவிதிப்பதும் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது, உள்நாட்டு வரிகளிலிருந்து இந்நகரம் விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இவை, அனைத்தையும் ஜனாதிபதி நியமிக்கும் குழுவினரே செய்யவுள்ளனர். இந்தக் குழுவுக்கான அனுமதியை பாராளுமன்றம் தர மறுத்தால் நிறைவேற்று அதிகாரத்தால், ஜனாதிபதி நியமித்துக்கொள்வார். இதில் ஊடகங்களும், அதிலும் அரசுக்கெதிரான சில, ஒருபிடி மண்ணளவை எகிப்திய பிரமிட்டுக்களாகக் காட்டுவதிலேதான் குறியாகச் செயற்படுகின்றன.

இருக்கட்டும் இவை.திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ள அரச உயர்மட்டச் சந்திப்புக்களில் எல்லாம் தீர்ந்து விடலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுக்கள், மாவட்டங்களை வெல்வதால் கிடைக்கும் இவ்விரண்டு போனஸ் ஆசனங்களில் ஒவ்வொன்று, விகிதாசாரத்தில் எஞ்சியதிலும் சில ஆசனங்கள் என்ற உடன்பாடுகள் வந்தால், முரண்பாடுகள் முடிந்துவிடாதா? பிறகென்ன பங்காளிகள்தான் அரசின் பிரதானிகள் என்ற நிலையும் வந்துவிடும்.

இருப்பினும், சீனப் பாதுகாப்பு அமைச்சரின் வருகை, கொழும்பு துறைமுக நகரால் நாட்டுக்குள் நடக்கவுள்ள நகர்வுகளைத் தூக்கிப் பிடிக்கும் பொறிமுறைகள் மற்றும் பிரச்சாரங்கள்தான், மாகாண சபைத் தேர்தலில் எதிரணியினரின் இலக்குகளையாவது காப்பாற்றும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாவதற்குள், சீன அரசாங்கத்தின் மிகப்பிரதான அரசியல் புள்ளிகளின் மற்றொரு விஜயமாகவே, பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளது.

சுஐப் எம்.காசிம்-

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி