சீனாவின் மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். அரிதிலும் அரிதாக சீனா தன் பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல அமைந்திருக்கிறது.

தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க பல கொரோனா தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த ஆலோசிப்பதாக காவ் ஃபூ ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

சீனா இதுவரை நான்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தடுப்பூசிகள் வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது.

பிறகு காவ் ஃபூ, தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சீனாவில் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சீன தடுப்பூசியின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகவும், சீனாவிற்கு வர விரும்பும் வெளிநாட்டவர்கள் சீனாவின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

என்ன பேசினார் காவ் ஃபூ?

கொரோனா தடுப்பூசி

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் கடந்த சனிக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சீன கொரோனா தடுப்பூசிகள் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை என கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த சீனா ஆலோசித்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர செலுத்தப்படும் டோஸ்களின் எண்ணிக்கையை மாற்றுவது மற்றும் செலுத்தப்படும் டோஸ்களுக்கு இடையிலான காலத்தை மாற்றுவது போன்றவைகள் அடங்கும் எனக் கூறினார்.

இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்கினார். "உலகம் முழுக்க உள்ள கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன" என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

"கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதுதான் கேள்வி, அதைத்தான் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்" என அப்பத்திரிகையிடம் காவ் ஃபூ கூறியுள்ளார்.

மேலும் சீன கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்கிற கருத்து, முழுமையாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார் காவ் ஃபூ.

காவ் ஃபூ முதலில் கூறிய கருத்தையும், அதன் பிறகு அவர் கொடுத்த விளக்கத்தையும் பெரும்பாலான சீன ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவ் ஃபூ முதலில் பேசிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன. சீனாவின் வைபோ செயலியில் தன் கருத்தை தெரிவிக்கும் இடத்தில், ஒரு நபர், காவ் ஃபூ பேசுவதை நிறுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

சீன கொரோனா தடுப்பூசிகளை குறித்து நமக்கு என்ன தெரியும்?

கொரோனா தடுப்பூசி

சீன கொரோனா தடுப்பூசிகள் குறித்து சர்வதேச அளவில் மிகக் குறைந்த தரவுகளே இருக்கின்றன. சீன கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் கடந்த பல காலமாக உறுதியாக தெரியாமலேயே இருக்கிறது.

உதாரணமாக சீனாவின் 'சினோவேக்' கொரோனா தடுப்பு மருந்து பிரேசிலில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்பரிசோதனையில் அம்மருந்தின் செயல்திறன் 50.4 சதவிகிதம் எனக் காட்டியது.

உலக சுகாதார அமைப்பு ஒரு கொரோனா தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் தடுப்பூசியின் செயல்திறன் 50 சதவீதமாக இருக்க வேண்டும்.

துருக்கி மற்றும் இந்தோனீசியா போன்ற நாடுகளில் நடந்த சீன கொரோனா தடுப்பூசியின் பரிசோதனைகளில், அதன் செயல் திறன் 91 மற்றும் 65 சதவீதமாக இருப்பதாக காட்டியது.

மேற்கத்திய நாடுகளின் கொரோனா தடுப்பூசிகளான ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனீகா போன்றவைகளின் செயல் திறன் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கின்றன.

சீன கொரொனோ தடுப்பூசிகள் எப்படி மற்ற தடுப்பூசிகளிலிருந்து வேறுபடுகின்றன?

சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் மற்ற தடுப்பூசிகளிலிருந்து குறிப்பாக ஃபைசர் மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளிலிருந்து பெரிய அளவில் வேறுபடுகின்றன.

A medical worker vaccinates a rural resident at a COVID-19 vaccination site at the township level in Fuyang.

சீன கொரோனா தடுப்பூசிகள் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டவை. அதை ஆங்கிலத்தில் inactivated vaccines என்பார்கள். அதாவது இறந்த வைரஸ் பாகங்களை வைத்து, மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வைரஸை அறிமுகப்படுத்துவார்கள்.

ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகள் எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்த தடுப்பு மருந்துகள். அதாவது கொரோனா வைரஸின் ஒரு சிறு மரபணுக் குறியீடு உடலுக்குள் செலுத்தப்படும். அதை நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் கண்டுகொண்டு கொரோனா வைரஸை எதிர்க்க பழகிக் கொள்ளும்.

பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்து வேறு வகையான தடுப்பு மருந்து. சிம்பான்சிகளிடம் காணப்படும் வழக்கமான சளியை உண்டாக்கும் வைரஸ், கொரோனா வைரஸின் மரபணுக் கூறுகளை உள்ளடக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு, மனித உடலில் செலுத்தப்படும்.

இம்மருந்தை உடலில் செலுத்திய பின், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம், உண்மையாகவே கொரோனா வைரஸ் இருந்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும்.

சீன கொரோனா தடுப்பூசிகளில் ஒரு மிகப்பெரிய நன்மை என்னவெனில், அம்மருந்துகளை சாதாரண குளிர்சாதனப்பெட்டியின் தட்பவெப்ப நிலையான 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் மாடர்னா தடுப்பூசிகள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையிலும், ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்துகளின் மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையிலும் சேமித்து வைக்க வேண்டும்.

ஏற்கனவே சீனா தன் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனீசியா, துருக்கி, பராகுவே, பிரேசில் என பல நாடுகளுக்கு பல கோடி டோஸ்களை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி