சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாத சக்திகள், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து வருவதாகவும், இதிலுள்ள பின்புல சக்திகளை

வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அணியின் கொழும்பு மாவட்ட “இளைஞர் மாநாடு” முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட அங்கத்தவருமான பாயிஸின் ஏற்பாட்டில் மட்டக்குளியில் நேற்று (28) நடைபெற்ற போது, பிரதம அதிதியாக கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் இருப்பை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இனவாத சக்திகள் எங்களை மையமாக வைத்து, அரசியல் செய்து மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொண்டனர். சிறுபான்மை சக்திகளை ஒடுக்குவதும், அக்கட்சித் தலைமைகளின் குரல்வளையை நசுக்குவதும் அதன்மூலம் தமது இலக்கை அடைவதுமே இவர்களின் நீண்டகாலத் திட்டம். இனவாதத்தையும், இனக்குரோத சிந்தனையையும் முதலீடாகக் கொண்டே இவர்கள் இன்னும் அரசியலில் நீடிக்கின்றனர். நாட்டையோ மக்களையோ பொருளாதாரத்தையோ இவர்கள் பெரிதாகக் கருதவில்லை. அவைபற்றி எந்தக் கவலைகளும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அமைச்சர்கள் சிலர் தினந்தோறும் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் புனித வேதமான அல்குர்ஆன் பற்றியும் பொய்யான கருத்துக்களை அப்பாவி மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். தீவிரவாதத்தை இந்த நாட்டில் தூண்டுவதற்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான். சஹ்றான் என்ற கயவனும், அவனது அடியாட்களும் மிலேச்சத்தனமான செயலை மேற்கொள்வதற்கு, அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவங்களும் காரணமாயிருந்தன என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட இந்த படுபாதக செயலை முஸ்லிம் சமூகம் ஒருபோதுமே அங்கீகரிக்கவில்லை. இன நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் இந்தச் சமூகம் தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் ஒருபோதுமே துணைபோன வரலாறும் இல்லை. பேரினவாதிகளின் எஜண்டுகளே இந்த கொலைகாரர்களை உருவாக்க தூபமிட்டனர் என்ற உண்மையை, இனியாவது நல்லெண்ணத்தை விரும்புவோர் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்த்த ஞாயிறு அறிக்கையில் இந்த விடயங்கள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

முஸ்லிம் இளைஞர்களை பொறுத்தவரையில், இது மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட வேண்டிய காலம். அவ்வாறான காலத்தின் கட்டாயத்தில் நாம் வாழ்கின்றோம். பெருமானாரின் போதனைகளை பின்பற்றி, மார்க்கப் பற்றுடன் வாழ்வோமேயானால் எமக்கு எந்தக் கஷ்டமும் எவராலும் வராது.

நமது சமூகம் நிறைய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. உலகில் 2 பில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக ஏற்றுக்கொண்ட, அதனை நேசிக்கின்ற நமது அல் குர்ஆனை அசிங்கப்படுத்தும் வேலைத்திட்டமும் இங்கு அரங்கேற்றப்படுகின்றது. எனினும், பெருமானார் காட்டித் தந்த வழியை பின்பற்றினால் மத விரோதிகளால் ஒன்றும் நடவாது. ஏனைய இனங்களைப் போன்று, கத்தோலிக்க மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வரும் நாம், குண்டுத்தாக்குதல் நடந்தபோது மிகவும் வேதனை அடைந்தோம்.

“இந்தச் செயலை முஸ்லிம்கள் மேற்கொள்ளவில்லை. இதற்குப் பின்னால் எதோ ஒரு சக்தி இவர்களை வழிநடத்தியுள்ளது” என அப்போது பேராயர் மல்கம் ரஞ்சித் அறிவித்து, “அப்பாவி முஸ்லிம்களை தண்டித்து விடாதீர்கள்” என்று பகிரங்கமாக வேண்டினார். அவருக்கு சமூகம் சார்பில் என்றுமே நாம் நன்றியுள்ளவர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பிலான விவாதம் மூன்று நாட்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது, நான் பாராளுமன்றத்தில் அமர்ந்து, அந்த உரைகளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டேன். இந்த அரசியல்வாதிகளின் மனதில் என்ன இருக்கின்றது? சமுதாயம் பற்றி என்ன நினைக்கின்றார்கள்? எதை எதிர்பார்க்கின்றார்கள்? என்பதையும் கிரகித்துக்கொண்டேன். இது தொடர்பில், பாராளுமன்றத்தில் விரைவில் நானும் உரையாற்றவுள்ளேன்.

இந்தத் கொலைகளினால் கத்தோலிக்க சமூகம் எவ்வாறு வேதனைபட்டதோ, அதற்கு நிகரான வேதனையை முஸ்லிம் சமூகமும் அனுபவித்தது. அந்த வேதனை எமது சமூகத்தவரிடமும் இன்னும் இருக்கின்றது. அதுமாத்திரமின்றி சம்பந்தம் இல்லாத எத்தனை அப்பாவிகள் சிறைகளிலே வாடுகின்றனர். எனவே, உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென நாம் கோருகிறோம்.

இன்றைய இளைஞர் மாநாட்டின் ஏற்பாட்டாளரான சகோதரர் பாயிஸ், கொழும்பு மாவட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுபவர். குறிப்பாக மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு இன மத பேதமின்றி பணியாற்றுபவர். கொழும்பில் முதுபெரும் அரசியல்வாதிகளின் சேவைகளுக்கு நிகராக அவரின் கல்விச் சேவை அமைந்து வருகின்றது. இதற்கு நான் சாட்சியாக இருக்கின்றேன். அவரது பணிக்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குங்கள். என்றார்.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களான ரம்சி ஹாஜியார், ஹசீப் மரைக்கார், ஹிஷாம் சுஹைல் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி