Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல்

T

The Leader Desk

ஜனவரி 24, 2025 • 1:50 PM

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதி பெற்றுத்தருமாறு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
  • திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (24.01.2025) மாலை திருகோணமலையில் எஸ்.சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட இடமான ஓசில் பார்க்கில் நடைபெற்றது.
  • இலங்கையின் வடக்கு கிழக்கில் 41க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • இலங்கையில் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.
எழுத்து அளவு:

நீதி பெற்றுத்தருமாறு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை (24.01.2025) மாலை திருகோணமலையில் எஸ்.சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட இடமான ஓசில் பார்க்கில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு கிழக்கு தெற்கு ஊடகவியலாளர் , இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மறைந்த ஊடகவியலாளர் சுகர்தராஜனோடு நெருங்கி பழகிய சிரேஸ்ட  ஊடகவியலாளர்களான முகமட் சாலி, கீத பொன்கலன் ஆகியோர் அவரது திரு உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்ததுடன் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் ஈகை சுடரேட்டையும் மலரஞ்சலி செலுத்திய அகவணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து இதன் போதும் திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் ராஜ்குமார், யாழ் ஊடக அமையத்தின் தலைவர் செல்வகுமார், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பணிப்பாளர் லவகுசராசா, தொழில் சார்ந்த ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே ,கிளிநொச்சி  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர்  தமிழ்ச்செல்வன், கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் வடிவேல் சக்திவேல் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட உரையாற்றினார்.

பின்னர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகாதராஜனின் திரு உருவப்படத்தையும் பதாகைகளையும் , ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்று ஆர்ப்பாட்டம் செய்து பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து ஊடக அமைப்புகள் சார்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி  வேண்டி, காணாமல் ஆக்கப்பட்டு கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணைகளை துரிதமாக முன் நகர்த்த வேண்டியும், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அருள் ராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கை

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அன்னாரின் 19 ஆவது ஞாபகார்த்த தினத்தை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம், முல்லைத்தீவு ஊடக அமையம், மன்னார் ஊடக அமையம், அகம் மனிதாபிமான வள நிலையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், இணைய ஊடகச் செயற்பாடு (IMA) வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்கள், பிரதேச சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் வலையமைப்பு, பாதிக்கப்பட்ட மக்கள் ஆகிய நாங்கள் 24 ஜனவரி 2025 ஆகிய இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் ஒன்று கூடி மேற்கொண்டதுடன், படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய எமது ஏகோபித்த கோரிக்கையினை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

இலங்கையின் ஊடகத்துறை வரலாறு பல்வேறு கொலைகளையும், கொடுமைகளையும், அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் உள்ளடக்கியதாகவே கடந்து போயிருக்கிறது. அவ்வாறானவைகள் இனிவரும் காலங்களிலேனும் இல்லாதிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

ஊடகப் பணியை, நேர்மையாக முன்னெடுப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே கடந்த யுத்த காலங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் பலர் தமது உயிரைக்காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குமப்பால் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன்,காணாமலாக்கப்பட்டும், பலர் உயிரைப் பாதுகாப்பதற்காக ஊடகப் பணியை விட்டொதுங்கியதுடன் பலர் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து தப்பியோடி தஞ்சமடைந்திருக்கின்றனர்.

குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்தும் குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப் பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் 41க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.

ஐயாத்துரை நடேசன், தராக்கி த.சிவராம், எல்.எம்.பலீல் (நற்பிட்டிமுனை பலீல்), சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சுப்பிரமணியம் ராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜீவர்மன், இசைவிழி செம்பியன் (சுபாஜினி), பரணி ரூபசிங்கம் தேவகுமார், இராசையா ஜெயேந்திரன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மகாலிங்கம் மகேஸ்வரன், மாரியப்பு அந்தோணிகுமார், ஷோபனா தர்மராஜா (இசைப்பிரியா),; மற்றும் சகாதேவன் நிலக்சன் உள்ளிட்டவர்கள் 2004-2010 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டதுடன் , அதே காலப்பகுதியில் திருகுலசிங்கம் தவபாலன், பிரகீத ஆகிய ஊடகவியலாளர்கள் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம்;, முல்லைத்தீவு ஊடக அமையம், மன்னார் ஊடக அமையம், அகம் மனிதாபிமான வள நிலையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், இணைய ஊடகச் செயற்பாடு (ஐஆயு) வடக்கு – கிழக்கு – தெற்கு ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளன.

2000ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதோடு அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டுகொண்டே சென்றிருந்தது.

வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.

நாம் வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சமரசம் செய்துகொள்ளத் தேவையற்றதான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிவருகின்றோம்.

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கைக்கான சரியான விசாரணைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை. 2005 – 2009 வரையான நல்லாட்சி காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடொன்றை வழங்குவதற்காக விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இருப்பினும் அது எந்தப்பயனையும் பெற்றுத்தரவில்லை.

பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என வாதிடப்பட்டிருந்தது. அவர் ஆட்சியை விட்டுத் துரத்தப்படும் வரை ஊடகவியலாளர்களின் விடயங்கள் எதுவும் கவனத்திலெடுக்கப்படவில்லை.

பின்னர் நடைபெற்ற ஆட்சியிலும் பூசிமெழுகல்களே நடைபெற்றிருந்தன. தாங்கள் ஜனாதிபதியானதையடுத்து ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணைக்குட்படுத்தப் போவதாக அறிவித்திருந்தீர்கள். அதில் த.சிவராம், லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்களுடைய வழக்குகளும் உள்வாங்கப்பட்டிருந்தன.

அதன் பின்னர் நவம்பர் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 2024 டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிற்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் விசாரணைகளின் நிலைமை தொடர்பில் இன்னமும் எவ்வித தகவல்களும் வெளியில் வரவில்லை. நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம், ஊழல்களைக் கண்டுபிடிக்கும் செயற்பாடு எனப் பல வேலைகளுக்கு மத்தியில் படுகொலையான ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டும் என சர்வதேச, தேசிய, வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்களால் தொடர்ச்சியாகவும், மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்துவதை மாத்திரமே செய்யமுடிகிறது. அந்தவகையில் ஊடகவியலாளர்களின் மரணம் மற்றும் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைககள் தவிர்க்கப்பட்டு வருவதாகவே எம்மால் ஊகிக்க முடிகிறது,

வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு அறிவித்தலை வெளியிடுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நடைபெறாது என நம்புகிறோம்.

படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதும் நிவாரணங்கள் வழங்கப்படுவதும் பறிக்கப்பட்ட உயிர்களையும் அவர்களின் குடும்பங்களின் கடந்தகால சிறப்பான வாழ்வையும் தந்துவிடப்போவதில்லை என்றாலும் ஒரு நிம்மதியையேயும் ஏற்படுத்தும் என்றும் நம்புகின்றோம்.

மக்களுக்கு உண்மையான தகவலை வழங்கும் தன்னுடைய பணியைச் செய்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 19வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். அவருடைய நினைவு நாளில் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.

எமது கோரிக்கைகள்:-

1. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதிக்காக தனியான விசாரணைக்குழுவினை நியமித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை வழங்க வேண்டும்.

2. இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் 41 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.

3. கடத்தப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை இலங்கை அரசானது வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன், பொறுப்புக் கூறலில் இருந்து அரசு விடுபடக் கூடாது எனவும் வேண்டுகின்றோம்.

4. இலங்கையின் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

5. அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

6. குற்றவாளிகளை தண்டணையிலிருந்து விலக்களிக்காமலிருக்கும் கலாச்சாரத்தை கொண்டுவருவதுதான் சுதந்திரமான ஊடக செயற்பாட்டை உறுதி செய்யும். ஆகவே தண்டணையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு,

1. திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், திருகோணமலை,

2. அகம் மனிதாபிமான வள நிலையம், திருகோணமலை,

3. யாழ் ஊடக அமையம், யாழ்ப்பாணம்,

4. வவுனியா ஊடக அமையம், வவுனியா,

5. கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம்;, கிளிநொச்சி,

6. முல்லைத்தீவு ஊடக அமையம், முல்லைத்தீவு

7. மன்னார் ஊடக அமையம், மன்னார்,

8. தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், கொழும்பு,

9. இணைய ஊடகச் செயற்பாடு (IMF), கொழும்பு,

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் | Tamil Leader | We Lead the Nation