உலக சிட்டுக் குருவிகள் தினம் நேற்று (20.03.2021) அனுஷ்டிக்கப்பட்டது. உலகம் உயிர்ப் பல்வகைமை மிக்கது. மனிதன், விலங்குகள், பறவைகள், ஊர்வன, வண்டுகள், பூச்சி, புழுக்கள், மீன்கள் 

என பல்வகையான உயிரினங்கள் இப்புவியில் வாழ்கின்றன. அவற்றில் நிலத்தில் வாழ்பவையும் காணப்படுகின்றன. நீரில் வாழ்பவையும் இருக்கின்றன.

அந்த வகையில் பறவை இனங்களை எடுத்துப் நோக்கினால் அவற்றிலும் கைபெருவிரல் அளவு சிறியது முதல் பெரிய தீக்கோழி வரையான பறவைகள் வரை உள்ளன. அப்பறவை இனங்களில் நிலத்திலும், நீரிலும், நீரை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்பவையும் இரை தேடுபவையும் காணப்படுகின்றன.
 
இவ்வாறு ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் காணப்பட்ட போதிலும் சிட்டுக்குருவி தொடர்பில் உலகளாவிய ரீதியில் விஷேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதன் விளைவாக இக்குருவிகள் தொடர்பில் உலகளாவிய தினமொன்றும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்தினம் வருடாவருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதி உலக சிட்டுக் குருவிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
 
அண்மைக் காலமாக மனிதக் குடியிருப்பு மற்றும் மனித நடமாட்டப் பிரதேசங்களுக்கு சிட்டுக் குருவிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இப்பறவை இனம் அழிந்து அருகிவிடக் கூடிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
இந்த நிலையில்தான் சிட்டுக் குருவிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவென ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்துமாறு இந்தியப் பேராசிரியர் முஹம்மது திலாவர் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் ஒருவராவார். இவருக்கு 2008 இல் 'டைம்' இதழ் 'Heroes of the Environment' என்ற விருது வழங்கி கௌரவித்தது.
 
சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவில் 'Nature forever society' என்ற அமைப்பை ஆரம்பித்தவரும் இவரேயாவார். இவரது கோரிக்கையில் இருக்கும் உண்மைத் தன்மையை உணர்ந்த ஐ.நா, சிட்டுக்குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, 2010 மார்ச் 20 ஆம் திகதியை உலக சிட்டுக் குருவிகள் தினமாக அறிவித்தது.
 
அன்று தொடக்கம் இப்பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக மக்களை அறிவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வருடா வருடம் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
 
இந்தியாவின் டெல்லி மாநில அரசு 2012 இல் சிட்டுக் குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
எவ்வளவோ பறவை இனங்கள் இருந்தும் சிட்டுக் குருவிகள் தொடர்பில் இவ்வாறு விஷேட கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு உலகம் உள்ளானது ஏன் என்பது தொடர்பில் நோக்க வேண்டும்.
 
சிட்டுக் குருவியானது உருவில் சிறியது. ஆனால் அவை பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. இனிமையான ஒசை எழுப்பக் கூடிய குரலைக் கொண்டவை. அத்தோடு மனித குலத்துக்கும் குறிப்பாக விவசாயிகளுக்கும் சிட்டுக் குருவிகள் ஆற்றும் பணிகள் அளப்பரியன.
 
இப்பறவை இனமானது மனிதன் வாழும் பிரதேசங்களில் உணவு தேடி நடமாடுவதோடு, மனிதக் குடியிருப்புக்களிலும் காலாகாலமாகக் கூடமைத்து வாழ்பவையும் கூட. ஆனால் அவை மனிதனுடன் நெருங்கிப் பழகுவதில்லை. அதனால் அதனைச் செல்லப்பறவைகளாக வளர்க்க முடியாது.
 
‘பசரீன்’ குடும்பத்தைச் சேர்ந்த இப்பறவை இனம், மனிதக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு வருகை தருவதில் அண்மைக் காலம் முதல் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு தொலைத்தொடர்பு கோபுரங்கள் காரணமெனக் கருதப்படுகின்றது. அவ்வாறெனில் சிட்டுக்குருவியைப் போன்று மைனா, கிளி, உண்ணி கொக்கு போன்ற பறவை இனங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். அவையும் மனித நடமாட்டப் பிரதேசங்களுக்கு வருகை தரும் பறவைகளில் அடங்குபவை. அப்பறவை இனங்கள் தாக்கங்கள், பாதிப்புகளுக்கு முகம் கொடுத்திருப்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் இற்றைவரையும் வெளியாகவில்லை.
 
சிட்டுக் குருவிகளுக்கு தொலைத்தொடர்பு கோபுரங்கள் பாதிப்பாகவும், தாக்கம் மிக்கதாகவும் இருந்திருந்தால் அதே தாக்கம் மைனா, கிளி, உண்ணிக்கொக்கு உள்ளிட்ட ஏனைய பறவைகளுக்கும் ஏற்படவே செய்யும். தொலைத்தொடர்பு கோபுரங்கள் தனியே சிட்டுக்குருவிகளை மாத்திரம் இலக்கு வைத்து பாதிக்கக் கூடியவை அல்ல என்பதுதான் பறவையியலாளர்களின் கருத்தாகும்.
 
எனவே சிட்டுக்குருவிகள் மனித குடியிருப்பு பிரதேசங்களுக்கு வருவதில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதற்கான காரணம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
 
அந்த வகையில் தமிழ்நாடு, சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் சிட்டுக் குருவிகள் தொடர்பில் நான்கு மாதங்கள் கள ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிட்டுக் குருவியானது நெல், அரிசி உள்ளிட்ட தானியங்களை உணவாகக் கொள்பவை. வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு மனித குடியிருப்புக்களில் கூடுகளை அமைத்து வாழ்பவை. ஆனால் மனித வாழ்வொழுங்கில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் விளைவாக முன்பு போன்று வீடுகள் அமைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் கொங்கிறீட் மூலம் வீடுகள் அமைக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் குடிபுகுந்துள்ளது. இதன் விளைவாக வீடுகளில் கூடு அமைக்கக் கூடிய வசதி சிட்டுக் குருவிகளுக்கு இல்லாமல் போயுள்ளது.
 
அத்தோடு முன் போன்பு வீட்டு முற்றவெளிகளில் நெல்லை உலர வைக்கும் பழக்கமும் அரிசியில் குருணல் அகற்றும் நடவடிக்கைகளும் அருகி விட்டன. இவற்றின் விளைவாக அவை கிடைக்கப் பெறும் இடங்களுக்கு இக்குருவிகள் இடம்பெயர்ந்துள்ளன. அவ்வளவுதான். அது தவிர அவை அழிந்து அருகும் நிலையில் இல்லை' என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 
அதேநேரம், 1950 களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மா சேதுங் 1958 இல் 'பெரும் பாய்ச்சல்' (great leap forward) என்ற திட்டத்தை முன்னெடுத்தார். அதில் மக்கள் நலத் திட்டங்கள் பல அடங்கி இருந்தன. என்றாலும் அக்காலப் பகுதியில் சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் உணரப்பட்டிராத காரணத்தினால் பயனற்ற பூச்சிகளையும் வண்டுகளையும் அழிக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். அதில் மக்களுக்காக செய்கை பண்ணப்படும் தானியங்களை சிட்டுக்குருவிகள் உண்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பறவை இனத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
 
இதன் பொருட்டு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன. சிட்டுக் குருவிகளின் கூடுகளை அழித்தல், அவற்றின் முட்டைகளை சேதப்படுத்தல், பாரிய ஒலியை எழுப்பி அவற்றை நீண்ட தூரம் விரட்டுதல் போன்றன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். அத்தோடு சிட்டுக் குருவிகளை அதிகம் கொல்பவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
 
இந்நடவடிக்கைகளின் விளைவாக பின்வந்த சில ஆண்டுகளில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வீழச்சியடைந்தது. ஆனால் தானிய உணவு உற்பத்தியும் வீழச்சியடையவே செய்தது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட சீன ஆய்வாளர்கள், சிட்டுக் குருவிகள் தானியத்தை மாத்திரமல்லாமல் தானியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் வெட்டுக்கிளிகளையும் உணவாகக் கொள்ளக் கூடிய பறவை இனம் என்பதைக் கண்டறிந்தனர். அதனால் 1960 களின் பின்னர் அழிக்க வேண்டிய பட்டியலிலிருந்து சிட்டுக் குருவிகளை நீக்கியது சீனா.
 
அதேநேரம், வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி வீடுகள் அமைக்கப்பட்டு வீடுகள் குளிரூட்டப்பட்டிருப்பதும் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி குடியிருக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் 'மெத்தைல் நைத்திரேட்' எனும் இரசாயனக் கழிவுப் புகையால் காற்று மாசடைந்து இக்குருவிகள் உணவாகக் கொள்ளும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை இக்குருவிகளின் வருகையில் வீழச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் பலசரக்கு கடைகள் மூடப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பல்பொருள் அங்காடிகள் (Super market) கலாசாரம் பெரிதும் வளர்ந்து வருகின்றது. இங்கு பொலித்தீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிகொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுவதால் உணவு இன்மையாலும் அவ்வாறு கொல்லப்பட்ட பூச்சிகளை உண்பதாலும் கூட இக்குருவிகள் அழிகின்றன.
 
தொலைத்தொடர்பு கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, சிட்டுக் குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படவே செய்கின்றன.
 
இவ்வாறு பலவித சவால்களை சிட்டுக் குருவிகள் எதிர்கொண்டுள்ளன. ஆனாலும் அவை அழிந்து அருகி விடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்று ஆய்வு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மர்லின் மரிக்கார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி