ஐ. நா மனித உரிமை சபையில் (46வது) நாற்பத்தி ஆறாவது கூட்டத் தொடரில், சிறீலங்கா மீது தயாராகியுள்ள தீர்மானத்தின் திருத்த வரைவு (A/HRC//L-/REV.1) சில சில மாற்றங்களுடன் மனித உரிமை

சபையின் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மார்ச் மாதம் 16 ஆம் திகதி பதிவாகியுள்ளது. 

முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது - எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஜெனிவா நேரம் மதியத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு, ஐ. நா மனித உரிமை சபையில் வரவுள் தீர்மானம் பற்றி எழுதுவதானால், ஓர் புத்தகமே எழுதுவதற்கான தகவல்கள் உள்ளன. விசேடமாக தீர்மானத்தை முன்நகர்த்தும் நாடுகளும் தீர்மானத்தின் உள்ளடக்கமும்; ஐ.நா மனித உரிமை ஆணயாளரும் அவரது எதிர்பார்ப்பும்; சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் உலக முக்கியஸ்தர்களும்;  நாட்டில் பாதிக்கப்பட்டோர் சிவில் அமைப்புக்கள் தமிழ் கட்சிகளும்; புலம் பெயர் வாழ் செயற்பாட்டாளரும்  அமைப்புகளும்; சிறீலங்கா அரசும் அவர்கள் சார்ந்த செயற்பாடுகளுமென பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். 
 
இவற்றில், நாம் தீர்மானத்தையும், அதை முன்நகர்த்தும் நாடுகளையும் பார்ப்போமானால், தீர்மானம் ஏற்கனவே கூறியது போல், பாதிக்கப்பட்ட மக்களை திருப்தி தருவதாக இல்லை. ஆனால் இவ் தீர்மானம் முன்னைய தீர்மானங்களிலிருந்து வேறுபட்டுள்ளது.
இவ் தீர்மானத்தை முன் நகரத்திய நாடுகளை நாம் பார்க்கும் பொழுது, பிரித்தானியா உட்பட மற்றைய இணைத் தலைமை நாடுகளான கனடா, ஜேர்மனி, மலாவி, மொன்றநீக்கிரோ, வட -மசிடோனியா ஆகியவை காணப்படுகிறது. 
 
ஆனால் இன்றைய நிலையில் இவ் தீர்மானத்திற்கு மொத்தமாக நாற்பது (40) ஐ. நா அங்கத்துவ நாடுகள் ஆதரவு வழங்குகின்றன. அதாவது, இவ் தீர்மானத்தை முன்மொழிகின்றனர். இவற்றில் பதின் மூன்று நாடுகள், ஐ.நா மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகளாகும். 
 
அடுத்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பங்கு, சிறீலங்கா பற்றிய அறிக்கை சமர்ப்பித்ததுடன் முடிந்திருந்தாலும், சில நாடுகள் ஆணையாளருடன் உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல்களை நடத்துவது வழமை. கடுமையான அறிக்கையை சமர்ப்பித்த ஆணையாளர் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுவார் என்பது யாதார்த்தம். 
 
அடுத்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான, சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், ஐ.சி.யே, இமாடார் போன்ற பல அமைப்புக்கள் சிறீலங்கா மீது மிகவும் கடுமையான நடவடிக்கைக்கு குரல் கொடுத்துள்ளதுடன், தற்பொழுது இத்தீர்மானம் வெற்றி பெற கடுமையாக உழைக்கின்றனர். 
 
இதேவேளை, உலக முக்கியஸ்தர்களான முன்னாள் ஐ.நா மனிதர் உரிமை ஆணையாளர்களுடன் பல நோபல் பரிசு பெற்ற முக்கிய புள்ளிகள் இத் தீர்மானம் வெற்றிபெற தமது கடமைகளை செய்துகொண்டிருக்கின்றனர். 
 
அடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் போராட்டங்களான காணாமல் போனோரது பெற்றோர், உறவினர்களது போராட்டங்கள் பல வருடங்களாக தொடருகின்றன. 
 
இத் தீர்மானம் அவர்களிற்கு திருப்தி தரும் செய்தி ஒன்றையும் கூறாதது கவலைக்குரிய விடயம். 
 
சிறீலங்காவின் சிவில் அமைப்புக்கள், விசேடமான வடக்கு கிழக்கில் உள்ள அமைப்புக்கள் பல சிக்கல்கள் நெருக்கடிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் தம்மால் முடிந்த வேலைத் திட்டங்களை மேற்கொள்கின்றனர். 
  
வடக்கு கிழக்கு வாழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும், ஐ.நா தீர்மானம் என்ற பெயரில், தமது வாக்கு வங்கியை நோக்கிய வேலை திட்டங்களையே மேற்கொள்கின்றனர். 
 
இவர்களில் பெரும்பான்மையோர்; இந்தியா முலமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஓர் அரசியல் தீர்வு சாத்தியம் என்பதை இதுவரையில் உணராத ‘மாதன முத்தாக்கள்’. 
  
எமது தமிழ் தலைவர்களும் புலம் பெயர் மக்களும் உணர தவறும் முக்கிய விடயம் என்னவெனில், "இந்தியா அசைந்தால் அசையும் அகிலம் எல்லமே" என்பது. எமது அரசியல் உரிமை விடயத்தில் இந்தியாவைக் கடந்து யாரும் முன்வரப் போவதில்லை. 
 
 புலம் பெயர்வாழ் அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், உணர்ச்சி மிகுந்த தனிநபர்கள் பலர், தற்பொழுது வாக்கெடுப்பிற்கு தயாராகியுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை, “குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”; பார்க்கின்றனர்.

சிலர் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாது விதண்டாவாதம் செய்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் சிலரது வாயிலிருந்து வெளிவரும் இரண்டு ஆங்கிலச் சொற்பதங்கள் - ஒன்று I.C.C. (சர்வதேச கிறிமினல் நீதிமன்றம்), மற்றையது IIIM – (International Independent and Impartial Mechanism).

அதாவது சர்வதேச பக்கச் சார்பற்ற மற்றும் சுயாதீனப் பொறிமுறை. இவை பற்றி கதைக்கும் பலருக்கு, இவற்றின் வரவிலக்கணம் செயற்பாடுகள் வழிமுறைகள் பற்றி அறவே அறியாது தெரியாது புரியாது புசத்துகின்றனர்.

விசேடமாக IIIMம் பற்றிய உண்மையை கூறுவதானால், இதற்கான அத்திவாரம் ஆரம்பத்தில் உருவான “Zero draft" எனப்படும் தீர்மானத்தின், ஆறாவது பந்தியில் ‘பிள்ளையார் சுழி’ இடப்பட்டுள்ளதை இவர்களால் புரியமுடியவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விடயம். இதனால், இவர்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறர்கள் என்பதே உண்மை.

இலங்கையின் விடயம் ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட வேண்டுமென சிலர் புசத்துகிறார்கள். தற்போதைய தீர்மானத்தில், I.C.C. என்ற கதைக்கு இடமில்லை என்பதைப் பலநாடுகள் அறுத்து உறுத்தி கூறிவிட்டனர்.

அப்படியானால் இலங்கையை எப்படியாக மனித உரிமை சபையிலிருந்து வேறு இடத்திற்கு நகர்த்துவது?

எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி, இலங்கை மீதான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், முள்ளிவாய்க்கால் முடிவிற்கு வந்த வேளையில் - 2009 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் - பால் பொங்கல், வெடி, வானவேடிக்கைகளுடன் பலவிதப்பட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றது போன்று, மீண்டும் திங்கட்கிழமை 22ம் திகதி தெற்கில் நடைபெறவேண்டும் என்பது தான் இந்த ‘மாதன முத்தாக்களின்’. விருப்பமா?

விதண்டாவாதம் செய்யும் பொழுது முன்பின் ஆய்வு செய்து கதைக்க வேண்டும். இன்றைய நிலையில் இலங்கை அரசு இத் தீர்மானம் விடயமாக என்ன அணுகுமுறையைக் கொண்டுள்ளார்கள். என்பதை நாம் ஆராயவேண்டும்.

கடந்த வாரம் என்னால் கூறப்பட்டது போல் இத் தீர்மானம் நிச்சயம் வெற்றியடையும். ஆனால், இலங்கை அரசின் கூடுதலான நிர்வாகிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகையால், தாம் போராடித் தோல்வி அடையலாம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளனர்.

இவ் அடிப்படையில் இலங்கை - சீனாவின் உதவியுடன் ஆசியா, ஆபிரிக்க நாடுகளையும், பாகிஸ்தானின் உதவியுடன் இஸ்லாமிய நாடுகளையும், கியூபாவின் உதவியுடன் லத்தீன் அமெரிக்கா (தென் அமெரிக்கா) நாடுகளையும் நோக்கி, சூறாவளி பிரச்சாரத்தில் தமக்கு வாக்கு திரட்டும் பணியில் இறுதி முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இப்பிரச்சாரத்தை இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னின்று நேரடியாக நடத்துகின்றார். இவர் பல ஆசியா, ஆபிரிக்க, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்கா தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர்களுடன் தொலைபேசியில் கதைத்து தம்மை ஆதரிக்குமாறு வேண்டியுள்ளார்.

இதேவேளை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், அவர்கள் இத் தீர்மானத்திற்கு எதிராக ஒரு பொழுதும் வாக்களிக்க மாட்டார்கள். ஒன்றில் நடுநிலை வகிப்பார்கள், அல்லது தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்பதே நடைமுறை சாத்தியம். எதிர்வரும் தமிழ் நாட்டுத் தேர்தலில், மோடியின் கூட்டு கட்சியின் தோல்விக்கு இவர்கள் வழிவகுக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இன்றைய பேரம் பேசும் நிலையில், இந்தியா நடுநிலை வகிப்பதே பெரிய விடயமாகும்.

கடந்த ஓக்டோபர் மாதம் என்னால் ஆரூடம் கூறப்பட்டது போல் தீர்மானம் நிச்சயமாக இருபது முதல் இருபத்தைந்து (20-25) வாக்குகளால் வெற்றி பெறும். தற்போதைய நிலையில் இத் தீர்மானத்திற்கு எதிராக பத்திற்கும், பதின்மூன்று (10-13) நாடுகளே வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் ஏறக்குறைய எட்டிலிருந்து பத்து நாடுகள் (8-10) நடுநிலைமையாக வாக்களிக்கக் கூடிய சாத்வீக கூறுகளே பெரிதும் காணப்படுகிறது.

“முள்ளு செடியில் துணியை போட்டால், மிகவும் அவதானமாக எடுக்கத் தவறும் பட்சத்தில், துணி கிழிந்து நெளிந்து எந்த நன்மையும் அற்ற நிலையில் துண்டாகும்” என்பதைத் தமிழீழ மக்கள் நாட்டிலும் புலத்தில் மனதில் கொள்ள வேண்டும்.

 
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு  பிரசுரிக்கப்பட்டது. 
 

-ச.வி.கிருபாகரன்- பிரான்ஸ் 

 

 

 

lnw 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி