1200 x 80 DMirror

 
 

முஸ்லிம் சமய  பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்துஇவ்வருடம் இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. 

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் பாரம்பரிய கலையான பொல்லடி, பக்கீர் பைத், கசீதா, குரவை, மாப்பிள்ளை பைத், வாள்வீச்சு என பல வகையான கலைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் முக்கிய கலை அம்சமாகக் காணப்படுகின்ற பொல்லடி, பக்கீர்பைத், கசீதா போன்ற மூன்று துறைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றில் பொல்லடிக்கான அண்ணாவிமார், பக்கீர்பைத் பாவாமார், கசீதாவிற்கான மௌலவிமார் போன்றோரை இனங்கண்டு அவர்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு பகிந்து கொள்ளும் நிகழ்வும், மூன்று துறைகளிலும் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களைக் கொண்டு மூன்று நூல்களை வெளியிடும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

அதுமாத்திரமன்றி, பாடசாலை மற்றும் திறந்த மட்டங்களில் பொல்லடிக் குழுக்கள், கசீதாக் குழுக்களை அமைக்கும் நோக்கில் இத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களை இணைத்து பயிற்சிப்பட்டறைகளை நடத்தி அதற்கான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றோடு இக்கலைகள் சம்பந்தமான ஆவணம் ஒன்றும் ஒலி,ஒளி வடிவில் வெளியிடப்படவுள்ளது.

2021ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தை மையமாக வைத்து நடத்தப்படவுள்ள வேலைத் திட்டத்தின் இணைப்பாளராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு இரு திணைக்கள உத்தியோகத்தர்களும் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளார்கள்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல்களை, மத்ரசாக்களை பரிபாலிப்பதும், ஹஜ், உம்றா, மீலாத் விழாக்களை நடத்துவதுமான ஒரு நிறுவனமாகவே மக்கள் மத்தியில் எண்ணக்கருவை ஏற்படுத்தியிருந்தது. இருந்த போதிலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளராக கடமையாற்றி வரும் ஏ.பி.எம்.அஷ்ரப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிகள் பரந்துபட்டவை. வெறுமென குறுகிய வட்டத்தினுள் இல்லாமல் பல்வேறு பணிகளை ஆற்ற முடியும் என்பதனை அண்மைக் காலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

தலைநகரில் உள்ள அலுவலகத்தில் மாத்திரம் அமர்ந்து கடமைகளை மேற்கொள்ளாது நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று முஸ்லிம் மக்களின் பல்வேறுபட்ட விடயங்களில் கலந்து கொள்வதுடன், அவர்களுடைய திணைக்களம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கி வருவது முஸ்லிம் மக்களிடத்தில் பெருவரவேற்பை பெற்றுள்ளது. 

இவ்வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், கலைஞர்கள், திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இங்கு கலந்து கொண்ட பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் கூறும் போது, கிழக்கு மாகாணம்தான் முஸ்லிம் கலைஞர்களை அதிகமாகக் கொண்ட ஒரு தளம். இந்த மாகாணத்தில்தான் இவ்வகையான வேலைத் திட்டங்களை செயற்படுத்தலாம். இதனடிப்படையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினரோடும், அதன் பணிப்பாளரோடும் பேசி அதற்கான நிதியையும் எமது திணைக்ளத்திலிருந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளேன். இதன் மூலம் பொல்லடி, பக்கீர் பைத், கசீதா போன்ற 3கலைகளை இந்த வருடம் எடுத்திருக்கிறோம். இன்னும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை சேர்த்துக் கொள்ளலாம். மாகாண மட்டத்தில் முஸ்லிம் கலைகளை மட்டும் மையப்படுத்திய ஒரு கலைவிழாவை நடத்தலாம். இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நேரடியாக மேற்கொள்ளும். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகளையும் செய்து வைத்த பின்னர் கொவிட்19நிலைமை சீரானதும் அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். இரண்டு திணைக்களங்களும் இணைந்து தற்போது மேற்கொள்ள திட்டமிட்டுள்ள கலாசார வேலைத் திட்டத்தில் வெளியிடப்படவுள்ள நூல் ஒரு வரலாற்று நூலாக மாத்திரமல்லாமல் ஒரு கைநூலாக எழுதப்பட வேண்டும். இதற்கு கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். எழுத்தாளர்களோடு கலைஞர்களும் இணைந்தே  இவ்வேலைத் திட்டங்களை மேற்கொள்வது மிக முக்கியமானதாகும்” என்றார்.

இதன் போது கலைஞர்களினால் எழுதப்பட்ட நூல்களும் பணிப்பாளருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

எம்.எல்.சரிப்டீன்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி