1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் காணித்துண்டுகள் தமிழர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களால் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

நிலைமாறு கால நீதியின் பிரகாரம் காணிகள் விடுவிக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையடைந்திருக்கவில்லை. குறிப்பாக காங்கேசன்துறை பகுதியில் விடுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட காணிகளில் இராணுவ முகாம்களும், பொலிஸாரின் விடுதிகளும் இருக்கிறது.

அத்துடன் வடக்கில் கரையோர பகுதிகளை மையமாக வைத்து காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றது.

வடமாகாணத்திற்கான காணி ஆவணங்கள் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்த நிலையில்,வடமாகாணத்திற்குத் தொடர்பே இல்லாத இன்னொரு மாகாணத்திற்கு மாற்றப்பட்டமை பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி வடக்கில் திடீர் என்று மின்தடையென்று ஏற்படுத்தப்பட்டது.

காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு கபளீகரம் செய்வதற்காகத் திட்டமிட்டே இந்த மின்தடை ஏற்படுத்தப்பட்டது.

குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களிற்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஒரு இலட்சம் காணித்துண்டுகளுக்காக வடபகுதியில் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

எனவே அவற்றைப் பங்கீடு செய்து வழங்கினால் தமிழர்களுக்கே அந்த காணிகள் சென்றுவிடும் என்ற வகையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த முதலாளிகளுக்கும், தனவந்தர்களுக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டே அந்த ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.

புதுக்காடு பகுதியில் 286 ஏக்கர் காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனவந்தர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிகிறோம்.

அத்துடன் கிளிநொச்சி இரணைதீவு விடுவிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரியான முறையில் பூர்த்திசெய்து கொடுக்கப்படவில்லை.

அந்த மக்களின் உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. எனவே அவற்றைப் பூர்த்தி செய்து இராணுவ அடக்குமுறை அற்ற நிலைமைக்கு வழிவகுக்க வேண்டும்.

போர் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை, போரால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை., அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள், என மனித உரிமைகளை மதிக்காது அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரல்கள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிக்க வைக்குமே தவிர ஒருசமாதான மனநிலையை உருவாக்கும் என்பது ஐயமே.

நிலைமாறு கால நீதி தொடர்பான பொறிமுறைகளை உருவாக்கும் அரசு அவற்றை நடைமுறைப்படுத்தத் தயங்குவது ஏன்? அல்லது மக்களது பிரச்சினைகளில் சாதகமாக செயற்படாமைக்கான காரணமென்ன?

பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளைச் சுதந்திரமாக அவர்களது வகிபாகத்திலேயே பொருத்தமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன? இவற்றைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நாட்டில் சுமூகமாக வாழ வழிவகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவர் ரத்தினசிங்கம் முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதிநிதி சந்திரலீலா, கிளிநொச்சி மாவட்டத்தின் வேதநாயகம் மன்னார் மாவட்டத்தின் நீதுசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி