“ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி, அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றான ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டம், மட்டக்களப்பில் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கிராமத்தில் வாழும் மக்கள், தமது உற்பத்திப் பொருட்களை இலகுவில் கொண்டுசென்று சந்தைப்படுத்தவும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும் இந்தக் கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரதமரின் தலைமையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேடன்குளம் வீதியில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திருமதி வன்னியசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிள்ளையான் எம்.பி, 

“எங்களுடைய பகுதிகளை விரைவாகக் கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பில் நாங்கள் இருக்கின்றோம். நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் சுபீட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்தை முன்வைத்தார். அதனடிப்படையில் பலவிதமான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

“ஒரு இலட்சம் வீதிகள் திட்டத்திலே எங்களுக்கு 300 வீதிகள் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பணிப்புரை வந்தது. 50 வீதிகளுக்கான வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்திருக்கின்றோம். 

“ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வவுணதீவில் 55 பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றோம். ஆகவே, சமுர்த்தித் திட்டத்தில் 55 குடும்பங்கள் குறைக்கப்படும். போக்குவரத்துப் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, மலசலகூடம் மற்றும் பொதுவசதிகள் இல்லாத பிரச்சினைகள் வந்திருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் இதனை மாற்ற வேண்டும்.

“ஆயுதத்தையும் நம்மையும் பிரிக்கமுடியாது. ஆயுதக்குழு என்பது விடுதலைப் புலிகளும் ஆயுதக் குழுதான். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஆயுதக்குழுதான். ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி, அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

“ஒரு சமூகம் மாறுவதற்குரிய பிரதான பங்கு ஓர் அரசியல் இயக்கத்தினுடையதாகும். அந்த இயக்கம் தான் நாங்களாவோம். எங்களுக்கும் திட்டங்கள் இருக்கின்றன. நாங்கள் பல வயல்களையும் வைத்துக்கொண்டு, உன்னிசைக் குளத்தையும் வைத்துக்கொண்டு, தண்ணீர் இல்லை என்று சொல்வது பிழையான விடயமாகும். 

“மகிழவெட்டுவான் ஒரு பாரம்பரிய கிராமமாகும். 5 வருடம் நல்லாட்சியில் இருந்தவர்கள் அங்கு இரண்டு வீதிகளையும் புணரமைக்கவில்லை. அங்கு பாடசாலையின் நிலையும் மோசமாகவுள்ளன. யோகேஸ்வரன் அவர்களின் சொந்த ஊரிலே இம்முறை முதலாம் தரத்துக்கு இரு பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். சமூகத்தில் வந்து வாக்கு கேட்டு வென்ற தலைவர்கள் தங்களுடைய கிராமத்தையே கட்டியெழுப்பவில்லை என்றால் அவர்களின் அரசியல் தோல்வியடைந்த ஒன்றாகும்” என்றார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி