13 ஆம் திருத்த சட்டத்தை அமுலாக்குவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அவர் அங்கு பல அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

இதற்கமைய இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் 13ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் அவர் சந்தித்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான பிரதிநிதிகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சகல சந்திப்புகளிலும் தமிழ் தலைவர்கள், மாகாணத்தில் இந்திய நன்கொடையின் கீழான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் அடிப்படையில் மேலதிக பொருளாதாரம், முதலீடு மற்றும் மேலதிக உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றுக்கான உதவியினை கோரியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இந்த விடயங்களில் தனது தொடர்ச்சியான ஒத்துழைப்பினை வழங்குமென உயர் ஸ்தானிகர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும் மக்களாலும் முன்வைக்கப்படும் தேவைகளுக்கு அமைவாக மாகாணங்களின் அபிவிருத்திக்காக இந்தியா நீண்டகாலமாக ஒத்துழைப்பினை வழங்குவதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கௌரவம், சமாதானம், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கான தமிழ் சமூகத்தின் நியாயபூர்வமான அபிலாசைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாடு தொடர்பில் நினைவூட்டியிருந்த இந்திய உயர் ஸ்தானிகர், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்றின் ஊடாக அவற்றினை உறுதிப்படுத்துவது நாட்டின் சமாதானம் நல்லிணக்கம் வினைத்திறன் மிக்க முன்னேற்றம் மற்றும் ஐக்கியம் ஆகியவற்றிற்கு பங்களிப்பு வழங்குமெனவும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி