இலங்கையில் அரச சேவையில் புதிதாக இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான பெண் பணியாளர்களின்  மகப்பேறு விடுமுறையை  பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையம், தொழிற்சங்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்பு இணைந்து நேற்றைய தினம் (12) இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன.

மகப்பேறு விடுமுறை குறைக்கப்படுவதற்கு எதிராக கடந்த வருடம் செப்டம்பர் 7ஆம்  செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் விசாரணை மேற்கொண்டது.

இதன்போது, பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோக பண்டார கலந்து கொண்டார்.

அரச சேவையில் உள்ள தாய்மார்கள் இதுவரை அனுபவித்த 12 வார மகப்பேறு விடுமுறையை, இந்த வருடம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆறு வாரங்கள் மாத்திரமே வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெண்களுக்கான 84 நாட்கள் மகப்பேறு விடுமுறையை, 42 நாட்களாகக் குறைப்பது பிறக்காத குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் 2ஆம் திகதி, பயிற்சி பட்டதாரிகளாக பொது சேவையில் சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பட்டதாரிகளின் மகப்பேறு விடுமுறையை அரசாங்கம் பாதியாக குறைத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி ஊழியர் நிலையத்தின், செயலாளர் தம்மிக முனசிங்க சுட்டிக்காட்டினார்.

Dammika 2021.03.12தற்போதைய அரசாங்கம் ஸ்தாபனக் குறியீட்டிற்கு வெளியே சென்று மகப்பேறு விடுமுறையை பாதியாக குறைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்தாபனக் குறியீட்டின் 18ஆவது பிரிவின் கீழ் நிரந்தர, தற்காலிக, சாதாரண மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு, 84 வேலை நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் மகப்பேறு விடுமுறையை குறைப்பதானது, பொது வேலைவாய்ப்புக்கான வழிகாட்டியாக அமைந்துள்ள, ஸ்தாபனக் குறியீட்டை மீறும் செயல் என தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி