14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்தநாள், அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை டெல்லியை எதிர்த்து களம் காண்கிறது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோதி மைதானத்தில் பிளே ஆஃப் போட்டிகளும், மே 30-ல் இறுதிப் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து, வழக்கம்போல் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் (இந்தியன் ப்ரீமியர் லீக்) டி20 போட்டிகள் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களுக்கு அனுமதி?

கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விதிமுறைகளை கடைப்பிடித்து ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் பிசிசிஐ இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நம்பிக்கையுடன் நடத்த திட்டமிட்டுள்ளது என ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஐபிஎல் போட்டியின் லீக் கட்டத்தில் ஒரு அணி மூன்று முறை மட்டுமே பயணம் செய்யுமாறு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகப் பார்வையாளர்கள் அற்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் போட்டிகள் செல்ல செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி