1200 x 80 DMirror

 
 

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறும் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பதற்கான தேசிய நிறுவனத்தின் பணிகள் குறித்து நாடாளுமன்றக் கோப் குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை குறித்த தேசிய கொள்கையை வகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், அண்மையில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அவர்களின் முதன்மையான கடமையாக தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், இந்த தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தேசியக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அறிக்கைகள் எதனையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான அதிகார சபையின் வருடாந்த அறிக்கைகள் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோப் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை செய்து, குறித்த வருடங்களுக்கான அறிக்கைகளை, இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

12 இலட்சம்  வீணானது

அதிகார சபையுடன் தொடர்புடைய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கான  ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒன்பது இலட்ச ரூபாயும், மென்பொருள் ஒன்றை உருவாக்குவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி ஆய்வு பிரிவிற்காக 1.2 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த நிதியின் ஊடாக சரியான பலன்களைப் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக பாடசாலை சிறுவர்களின் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட கட்டமைப்பும் ஒழுங்குமுறையும் அடையாளம் காணப்பட்டாலும், அது இன்னும் செயற்படுத்தப்படவில்லை எனக் கோப் குழு குறிப்பிட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை தாக்கல் செய்ய நீண்டகாலம் எடுப்பதால் பல சிரமங்களை அவர் எதிர்கொள்வதாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

"துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் பெரியவர் ஆவதற்கு முன்னர் வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யும் வகையில், காலத்தை குறைப்பது தொடர்பிலான திட்டம் ஒன்றை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.”

சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க 3,165 பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும், தற்போது 2,392 மாத்திரமே செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-2020 காலகட்டத்தில் அதிகார சபைக்கு 89,405 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, 2021 ஜனவரி 31 ஆம் திகதி வரை சுமார் 40,668 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டில்  சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 5,292 எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முறைப்பாடுகளை கையாளும் சட்ட அமுலாக்கப் பிரிவில் ஒரே ஒரு நபர் மட்டுமே பணியாற்றுவது துரதிர்ஷ்டவசமானது, இதற்கமைய கோப் குழு, சட்ட அமுலாக்கப் பிரிவை தேவைக்கேற்ப பலப்படுத்தவும், முறைப்பாடுகளை கையாளும் செயன்முறையை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, எரான் விக்ரமரத்ன, பிரேம்நாத் சி தொலவத்த, எஸ். இராசமாணிக்கம், சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதிதா விதானபதிரண, மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி