1200 x 80 DMirror

 
 

டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு சர்வதேச பாப் பிரபலம் ரியான்னா ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியதும் தற்போது அந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியை இணைக்கும் உத்தர பிரதேசம், ஹரியாணா மாநில எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டம் புதன்கிழமை 70ஆவது நாளை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், பாப் இசை உலகில் சர்வதேச அளவில் புகழ் பெற்றவரான ரியான்னா, சிஎன்என் தொலைக்காட்சியின் இணையபக்கத்தில் வெளியான விவசாயிகள் போராட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து, "இதைப்பற்றி நாம் ஏன் பேசுவதில்லை?" என்று விவசாயிகள் போராட்ட ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் பக்கத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் இவரை பின்தொடருவதால், விவசாயிகள் போராட்ட விவகாரத்தை இவர் ட்வீட் செய்த அடுத்த நொடியே இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முறை அந்த பதிவு ரீ-ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த பதிவுக்கு பதில்களை பதிவிட்டிருந்தனர்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பார்ன் நட்சத்திர நடிகையான மியா கலிஃபாவும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனது கருத்துகளை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டம் நடத்தும் படங்களை பகிர்ந்த அவர், இவர்களா கூலிக்காக போராடுபவர்கள், எத்தகைய மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன? டெல்லியைச் சுற்றி இன்டர்நெட் சேவையை அவர்கள் (அரசு) முடக்கியிருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதேவேளை, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்கும் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்," என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப்பதிவு 81 ஆயிரத்துக்கும் அதிகமான முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விவசாயிகள் போராட்டம் தொடர்பான பதிவுக்கு தங்களுடைய கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

மற்றொரு பதிவில், விவசாயிகள் போராட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அடங்கிய கூகுள் ஆவண பக்கத்தின் இணைய இணைப்பை கிரெட்டா.

இவர்கள் மட்டுமின்றி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். உலகின் மிகப்பழமையான ஜனநாயகம் (அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை) ஒரு மாதத்துக்கு முன்பு பாதிக்கப்பட்டது போலவே, மிகவும் பிரபலமான ஜனநாயக நாடும் (இந்தியாவில் விவசாயிகள் மீதான துணை ராணுவப்படை, காவல்துறை நடவடிக்கை) தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் இன்டர்நெட் முடக்கம் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின்போது துணை ராணுவப்படையைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைக்கு எல்லோரும் சீற்றம் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய தலைநகரில் நடக்கும் போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் பிரபலங்கள் ஆதரவுக்குரல் முழங்கிய நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென இந்த விவகாரத்தில் தலையிட்டு எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஓர் அறிக்கையை பகிர்ந்திருக்கிறது.

அதன் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மூலம் பகிரப்பட்ட அந்த அறிக்கையில், இந்தியாவின் சில பகுதிகளில் மிகவும் சொற்பமான விவசாயிகள் மட்டுமே அரசின் சீர்திருத்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுவரை பதினொரு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரதமரின் சார்பில் அந்த சட்டங்களை தள்ளிவைக்கும் திட்டம் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், "இதுபோன்ற நுட்பமான விவகாரத்தில் பிரச்சினையின் ஆழத்தையும் உண்மையையும் புரிந்து கொண்ட பிறகு கருத்துகளை வெளியிடுமாறு வலியுறுத்துகிறோம்," என அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொங்கி எழுந்த பாலிவுட் உலகம்
இந்த நிலையில், முன்னாள் நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியுமான மனோஜ் திவாரி, பாப் இசை பாடகி ரியான்னாவின் ட்விட்டர் பதிவுக்கு பதில் தரும் வகையில் அவரது ட்விட்டர் முகவரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு, ஒரு காணொளியை பகிர்ந்திருக்கிறார். அதில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சூழலில் ஒரு காவலரை தடிகளைக் கொண்டு சிலர் தாக்குவது மற்றும் வேறு சில காவலர்கள் தாக்கப்படுவது போன்ற படங்களின் கோர்வையான படத்தொகுப்பு உள்ளது.

"நீங்கள் எங்கே இருந்தீர்கள் ரியான்னா... நிச்சயமாக உங்களுடன் இது பற்றி பேச வேண்டும்," என்று மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், "இந்தியா மற்றும் இந்திய கொள்கை விவகாரங்களில் முன்வைக்கப்படும் தவறான பிரசாரத்துக்கு இரையாக வேண்டாம்," என்று கேட்டுக் கொள்ளும் இடுகையை பதிவிட்டுள்ளார்.

நடிகர் அக்ஷய் குமார், "இந்தியாவின் மிக முக்கியமான அங்கம் விவசாயிகள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைதி வழியில் இணக்கமான தீர்வு காணும் முயற்சிக்கு நாம் ஆதரவளிப்போம். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிளவுபடுத்தும் எவர் மீதும் கவனம் செலுத்தக் கூடாது," என்று கூறியுள்ளார்.

தனது பதிவுடன் இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கை அடங்கிய அதன் இடுகையை குறிப்பிட்டு அக்ஷய் குமார் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் சுனில் ஷெட்டி, பாதி உண்மையை விட ஆபத்தானது எதுவுமில்லை என்பதால் நாம் எப்போதும் விஷயங்களைப் பற்றிய விரிவான பார்வையை கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாலிவுட் பின்னணி பாடகர் கைலாஷ் கெர், இந்தியா என்பது ஒன்றுதான். அதற்கு எதிரான கருத்துகளை நாம் சகித்துக் கொள்ள மாட்டோம் என அனைவரையும் உணர வைப்போம் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் கரன் ஜோஹர், "நாம் கடினமான காலகட்டத்தில் வாழ்கிறோம், ஒவ்வொரு திருப்பத்திலும் விவேகமும் பொறுமையும் தேவை. அனைவருக்குமான தீர்வை தேடுவதற்கு நம்மால் முடிந்த ஒவ்வொரு முயற்சியையம் இணைந்து செய்வோம் - நமது விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு. யாரும் நம்மைப் பிரிக்க விடமாட்டோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாலிவுட் பிரபலங்கள் அனைவருமே INDIATOGETHER என்ற பொதுவான ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களுடைய கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

இதில் உச்சமாக, நடிகை கங்கனா ரனாவத், பாப் இசை பாடகி ரியான்னாவுக்கு நேரடியாக அளித்த பதிலில், "அவர்களின் போராட்டம் பற்றி யாரும் பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் விவசாயிகள் கிடையாது. இந்தியாவை பிளவுபடுத்தும் தீவிரவாதிகள். அப்படி செய்தால் எளிதில் பிளவுபடக்கூடிய எங்களுடைய தேசத்தை உடைத்து, அமெரிக்கா செய்வது போல இந்தியாவை சீனா தனது காலனியாக்கிக் கொள்ளும். எனவே, சும்மா அமர்ந்திரு முட்டாளே. உங்களை போன்ற டம்மிகளுக்கு எங்களுடைய தேசத்தை நாங்கள் விற்க மாட்டோம்," என்று கூறியிருக்கிறார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற பாப் இசை பாடகியான ரிஹன்னாவை "டம்மி" என்றும், டெல்லியில் போராடும் விவசாயிகளை "தீவிரவாதிகள்" என்றும் குறிப்பிட்ட கங்கனா ரனாவத் பரவலாக ட்விட்டர் பயனர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். டிரம்பின் ட்விட்டர் கணக்கை முடக்கியது போல கங்கனாவின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யார் இந்த ரியான்னா?
சர்வதேச பாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவர் ரியான்னா. பொதுவாக இதுபோன்ற பிரபலங்கள் தங்களுடைய படங்கள், பாடல்கள், ஆல்பம் போன்றவற்றை பற்றிய இடுகைகளையே தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்வது வழக்கம். ஆனால், இதில் ரியான்னா சற்று வித்தியாசமானவர்.

1988ஆம் ஆண்டு பிப்ரவரி கரீபியன் தீவுகளில் உள்ள பார்படோஸில் உள்ள கிடங்கு மேற்பார்வையாளரான ரொனால்டு ஃபென்டி, மோனிகா ஃபென்டிக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் ரியான்னா. இவருடன் பிறந்தவர்கள் மேலும் இருவர். குடிப்பழக்கம், போதைப்பழக்கத்துக்கு அடிமையான தந்தையின் நிலையுடன் போராட்டமாக அமைந்த இவர்களின் குடும்ப வாழ்க்கையில், ரியான்னாவுக்கு 14 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவகாரத்து செய்து கொண்டனர். 16 வயதில் பார்படோஸில் இருந்து புறப்பட்டு கனெக்டிகட்டுக்கு வந்த அவர் முதல் முறையாக சோதனை முயற்சியாக ஆல்பம் இசை பாடல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

32 வயதாகும் இவர், இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மட்டுமின்றி மியான்மரில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலை குறித்த கருத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சர்வதேச அளவில் பிரபலம் என்பதால் இவரது இடுகை, கண்டங்களைக் கடந்தும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக பார்க்கப்படுகிறது.

அதிகரித்த ட்விட்டர் பின்தொடருவோரின் எண்ணிக்கை
இதேவேளை, இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்தை பதிவிடும் முன்பு இவரது ட்விட்டர் பின்தொடருவோரின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 10 கோடியே பத்து லட்சம் ஆகியிருக்கிறது. அதாவது 10 லட்சம் பேர் கூடுதலாக ரியான்னாவை பின்தொடர இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பான அவரது இடுகை காரணமாகியிருக்கிறது.

பாப் இசை உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் மடோனா, பாப் மார்லீ ஜேனட் ஜேக்சன் ஆகியோரை பார்த்து சிறு வயதில் வளர்ந்த ரியான்னா, 2005ஆம் ஆண்டில்தான் பாப் இசை உலகில் அடியெடுத்து வைத்தார். "ஆல்பம் மியூசிக் ஆஃப் தி சன்", "எ கேர்ள் லைக் மீ" போன்றவைதான் இவரது ஆரம்ப கால ஆல்பம்கள். கரீபிய இசையின் தாக்கம் நிறைந்த இவரது படைப்புகள் பாப் இசை உலகில் பிரபலம் அடையத் தொடங்கிய வேளையில், இவர் பாடிய குட் கேர்ள் பான் பேட் என்ற ஆல்பம்தான் இவருக்கு சர்வதேச புகழை தேடித்தந்தது. பாப் இசை உலகில் நுழைந்து 10 ஆண்டுகளே ஆகும் நிலையில், எட்டு கிராமி விருதுகள் ரிஹன்னாவுக்கு கிடைத்துள்ளன.

வேறு பாப் இசை பாடகருக்கும் இல்லாத வகையில், இவரது 54 மில்லியன் ஆல்பம்கள் விற்கப்பட்டுள்ளன. 210 மில்லியன் பாடல்கள் உலக அரங்கை எட்டியிருக்கின்றன. லண்டனின் புகழ் பெற்ற ஓடு அரங்கில் 10 இசை கச்சேரி நிகழ்த்திய பாப் இசை பாடகி என்ற பெருமையையும் ரிஹன்னா பெற்றிருக்கிறார்.

இந்தியா, மியான்மர் விவகாரங்களுக்கு முன்னதாக அமெரிக்காவில் குடியேறிகள் கொள்கையை டிரம்ப் அதிபராக இருந்தபோது அமுல்படுத்திய நடவடிக்கையை விமர்சித்தும் ரியான்னா கருத்து தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் அபு தாபியில் நடத்திய இசை நிகழ்ச்சியின்போது அங்குள்ள மசூதியில் அதன் விதிமுறைகளுக்கு உடன்படாத வகையில் நின்று புகைப்படத்துக்கு காட்சி கொடுத்ததாக இவர் சர்ச்சைக்குள்ளானார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்த மசூதியில் இருந்து வெளியேற ரியான்னாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், சமூக ஊடக தளங்களில் தவிர்க்க முடியாத நபராக, வெளிப்படையாக மனதில் பட்டதை பேசக்கூடியவராக ரியான்னா இருப்பதால் அவரது புகழ் பாப் இசை உலகில் மட்டுமின்றி சமூக ஊடக உலகிலும் அதிகமாக காணப்படுகிறது.

bbc

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி