தான் அதிகாரத்திற்கு வந்தால் உறவினர்கள் நண்பர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி கோத்தாபய தேர்தலுக்கு முன்பு கூறினாலும், இன்று அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் தான் வாக்குறுதிகளுக்கு புறம்பாக உறவினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறுகிறார்.

நேற்று (2) அவிஸாவலையில் நடைபெற்ற ” இந்த அரசாங்கத்திற்கு ஏன் முடியவில்லை?” என்ற தொனிப்பொருளில் நேற்று (29) அவிசாவலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே புபுது ஜயகொட மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கோத்தாபய ராஜபக்‌ஷ அதிகாரத்திற்கு வரும் போது தகுதியானவர்களுக்கு தகுதியான இடம் வழங்கப்படுமென வும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட மாட்டாதெனவும் கூறினார். ஆனால், இன்று என்ன நடந்திருக்கிறது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மகள் அவுஸ்திரேலியாவின் சிடனி நகரின் இலங்கை தூதுவராலயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்‌ஷவின் முன்னாள் காதலி அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் மகள் பிரான்ஸின் பாரிஸ் நகரின் இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துமிந்த திசாநாயகவின் சகோதரர் பிரான்ஸின் பாரிஸ் நகரின் இலங்கை தூதுவராலயத்தில் மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியின் சகோதரர் சிசெல்ஸின் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் ஊடகச் செயலாளரின் மகள் வியன்னா நகருக்கு மூன்றாவது செயலாளராக அனுப்பப்பட்டுள்ளார். அது மாத்திரமா?

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே அரசாங்கத்திற்கு விளக்குப் பிடிக்கும் திஸ்ஸ அத்தநாயக்கவின் மகளும் அவுஸ்திரேலிய இலங்கை தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளராக அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சகல நியமனங்களையும் வெட்கமின்றி அமைச்சரவை அனுமதித்துள்ளது.வெளிநாட்டு ராஜதந்திர சேவைகளை தமது அடிவருடிகளிடம் ஒப்படைக்க இந்த நாடு அவர்களது பாரம்பரிய சொத்தா?

69 லட்சம் பேர் வாக்களித்து அறம் நிறைந்த நாட்டை உருவாக்குவதற்காக கொண்டு வந்த தலைவர்களின் லட்சணம் இதுதான்”.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி