புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் போராட்டத்தை தமிழக விவசாயிகள் நடத்தவுள்ளனர். பலத்த சிக்கல்களுக்கும், எதிர்ப்புகளுக்கு இடையில் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், வயதானவர்கள் எனப் பலரும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகள் ஆதரவு
குடியரசு தினத்தன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பயணம் மேற்கொண்டு தலைநகர் டெல்லிக்குள் நுழையவுள்ளனர். டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு நேரடியாக அங்கு சென்று அவர்களுடன் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பலர் ஈடுபடவுள்ளனர். அதோடு, தமிழகத்தில் பல மாவட்டங்களில் டிராக்டர் வண்டியில் சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பிற மாவட்டங்களில் போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் டெல்லியில் வடமாநில விவசாயிகளுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ''விவசாயிகளை நேரடியாக கார்பரேட் நிறுவனங்களின் கூலியாட்களாக மாற்றும் சட்டம்தான் இந்த புதிய வேளாண் சட்டம். விவசாயிகள் தற்சார்போடு வாழ்வதை இந்த புதிய சட்டம் முற்றிலுமாக தடுத்துவிடும். இந்த சட்டத்தை இந்திய அரசு பின்வாங்கவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், கட்டாயம் இந்த சட்டத்திற்கு ஆதரவு தரமாட்டார். ஆயிரக்கணக்கில் தமிழகத்திலும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்கள். மக்களுக்கு எதிரான இந்த சட்டத்திற்கு தமிழக அரசு சலனமின்றி ஆதரவு தந்துள்ளது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.


டெல்லியில் இதற்கு முன்னர் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம்

டெல்லியில் நடக்கும் டிராக்டர் பேரணி தமிழகத்தில் எல்லா மாவட்டங்களில் எதிரொலிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர் என்கிறார் பி.ஆர் பாண்டியன். ''ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் தன்னெழுச்சியாக டிராக்டர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை எதிர்த்து அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம். தற்போது தமிழகத்தில் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்திற்கு பல விதிமுறைகளை விதித்தார்கள். அத்தனையும் தாண்டி இந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 முதல் 2,000 விவசாயிகள் டிராக்டர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,'' என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அய்யாக்கண்ணு திருச்சியில் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள். ஆனால் அந்த போராட்டங்கள் ஊடகங்களில் வெளியாகாத வகையில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்கிறார் அய்யாக்கண்ணு.

டெல்லியில் நடப்பதுபோலவே இங்கும் நடைபெறும்

''எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அவரிடம் வேளாண் சட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என மனு கொடுக்கும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாவதில்லை. டெல்லியில் நடப்பது போலவே, டிராக்டர் பேரணியாக சென்று அரசிடம் எங்கள் எதிர்ப்பை வலியுறுத்தவிருக்கிறோம். பல இடங்களில் அனுமதி மறுத்திருக்கிறார்கள். சென்னையில் அனுமதி தரவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு போன்ற சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடக்கும். பிற மாவட்டங்களில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி போராட்டத்தில் இறங்குகிறார்கள்,''என்றார் அய்யாக்கண்ணு.

இந்திய விவசாயிகளின் போராட்டம் தலைநகர் டெல்லியில் தொடங்கி, தமிழகம் வரை எதிரொலிக்கப்போவதாகக் கூறுகிறார் அய்யாக்கண்ணு. ''விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த புதிய சட்டம் அழிப்பதோடு, மரபணு உணவை புகுத்தும் என்பதால் பொது மக்களும் இந்த போராட்டத்தில் இணைவார்கள்,'' என்கிறார் அவர்.

BBC

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி