ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மூன்றாவது வரவு செலவுத் திட்ட உரையை, நாடாளுமன்றச் சபையிலேயே அமர்ந்து நான் செவிமடுத்தேன். நமது நாட்டின் வரலாற்றில் முன்னர் ஆட்சி செய்த தலைவர்கள் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்களை விட, இது பெரிதும் வேறுபட்டதாக அமைந்திருந்தது என்பதே எனது எண்ணமாகும்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிக் காலத்தில், நிதி அமைச்சர் ரொனி டி மெல் 1977 ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரை ஐந்தரை மணி நேரம் நீடித்தது. முன்னைய காலங்களில் வரவு செலவுத் திட்ட உரைக்கு இருந்த அந்தக் கம்பீரமான பெறுமதி, 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மாறியது. அதன் பின்னர் பெரும்பாலும் எம்மால் கேட்க முடிந்தது வரவு செலவுத் திட்ட உரையாக அல்ல, வெறும் செலவுத் திட்ட உரையாக மாத்திரமேயாகும்.
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டது ஜனாதிபதி திசாநாயக்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாக இருப்பினும், நடைமுறையில் பார்த்தால் அது அவரது இரண்டாவது வரவு செலவுத் திட்ட உரையாகும். கடந்த ஆண்டின் வரவு செலவுத் திட்ட உரையின்போது, நாட்டு மக்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவருக்கு அவகாசம் வழங்கினர். ஆனால், இம்முறை வரவு செலவுத் திட்ட உரை முடிவடைவதற்கு முன்னரே, அது மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
உறங்கிப்போன அரசாங்கத்தின் தொடர்பாடல் கட்டமைப்பு
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தகர்களுடன் சேர்ந்து பலகாரங்களை உண்டு, தேநீர் அருந்தி உரையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சியினர் பலர் ஊடகங்களுக்கு முன்னால் வந்து தமது எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். இன்று இருபதாம் திகதியாகும்போது, 2027 வரவு செலவுத் திட்டம் குறித்து மணிக்கு மணி, நாளுக்கு நாள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான கடும் கருத்தியல் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியின் விமர்சனங்களை எவ்வித முன்னாயத்தமும் இன்றி எதிர்கொண்டமை தெளிவாகத் தெரிகிறது.
அரசாங்கத்தின் தொடர்பாடல் கட்டமைப்பு முற்றிலுமாக உறங்கிப்போயுள்ளது. தாம் இரண்டு வருடங்களாக முன்னெடுத்த பணிகளைக் கூட மக்களிடம் சொல்ல முடியாத அளவிற்கு அமைச்சர்கள் செய்வதறியாது நிற்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 1965 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (JVP) தோன்றிய காலம் தொட்டே, அவர்கள் பகிரங்கப் பேச்சுக் கலைக்கும் அமைப்பு ரீதியான பலத்திற்கும் பெயர்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்; மக்கள் கருத்தியலை உருவாக்குவதில் வல்லவர்களாக இருந்தனர். ஆனால் இன்று அவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சியின் தாளத்திற்கு ஆடும் நடனக் குழுவாக மாறியுள்ளனர்.
எந்தவொரு வரவு செலவுத் திட்டமும் விமர்சனங்களுக்கு உள்ளாவது இலங்கைக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல. எனினும், திசாநாயக்க அரசாங்கம் இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், எதிர்வரும் ஆண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு மேம்படும் என்பதை விளக்குவதற்கு இனியாவது முன்வர வேண்டும். தற்போது எதிர்க்கட்சி மிக நுட்பமாகத் தமது அரசியல் கருத்தை மக்கள் கருத்தாக மாற்றி வருகிறது.
கள யதார்த்தமும் இரண்டு ட்ரில்லியன் கனவுகளும்
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடும் நெருக்கடியில் உள்ள தருணத்தில், பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், வேலைவாய்ப்புகள் உருவாவதற்குப் பதிலாகப் பறிபோகும் காலகட்டத்தில், மக்களின் விமர்சனங்கள் அதிகரிப்பது நியாயமானதே. ஒவ்வொரு பிரஜையும் எதிர்பார்ப்பது சம்பள உயர்வாகும்; அனைவரும் எதிர்பார்ப்பது வரிச் சுமை குறைவதேயாகும். நாட்டிலுள்ள அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை, இன்னும் ஒரு வருடத்தில் நாட்டை மீண்டும் திவாலாக்கும் தந்திரோபாயம் இருந்தால் மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். எனினும், அரசாங்கம் இந்த வரவு செலவுத் திட்டத்தை நாட்டு மக்களின் நலனுக்காகத் தயாரித்திருந்தால், தமது வரவு செலவுத் திட்டத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்வருவது வியப்பானதாக இருக்கக் கூடாது.
பணவீக்கம் 10 சதவீத மட்டத்தில் உள்ள நாட்டில், தனிப்பட்ட முறையில் உயிர்வாழ்வதற்காக மக்கள் நடத்தும் போராட்டத்துடன் சேர்ந்து அனைவரின் எதிர்பார்ப்புகளும் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு இரண்டு ட்ரில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதைச் சாதாரண மக்களுக்குப் புரிய வைப்பது இலகுவானதல்ல. நவீன மின்சார ரயில்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் பற்றிய கனவுகளை, இந்த நாட்டின் களத்தில் வாழ்க்கைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திடம் விற்க முடியாது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டமைக்காக இந்த வரவு செலவுத் திட்டத்தை விமர்சிக்க வேண்டியதில்லை. எனினும், இத்தகைய வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கிய உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதும், இதன் உண்மையான பயனாளிகள் யார் என்பதும் தெளிவாக இல்லாத காரணத்தினாலேயே இந்த விமர்சனம் மிக நியாயமானதாக அமைகிறது.
வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார்?
துமிந்த ஹுலங்கமுவ மற்றும் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் நாட்டின் கள யதார்த்தத்தை அறிந்தவர்கள் அல்ல. குறிப்பாக ஹுலங்கமுவ அவர்கள் முப்பது வருடங்களுக்கும் மேலாகச் செயற்பட்டது வர்த்தக வர்க்கத்தின் தேவைகளைப் பாதுகாப்பதற்காகவேயாகும். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது என்பது குறித்து வர்த்தக வர்க்கத்திற்கு ஆலோசனை வழங்குவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவர், இன்று அரச பொருளாதாரத்தின் பாதுகாவலராக மாறியிருப்பது விதியின் விளையாட்டாகும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை வழிநடத்தும் ஹான்ஸ் விஜயசூரிய, தன்னைச் சுற்றி உருவாக்கிக்கொண்ட வட்டத்திற்கு, மாலிம (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டது போன்று 'பக்கோ' இயந்திரம் மூலம் வாரி வழங்குவது போல் வளங்களைப் பகிர்ந்தளித்து வருகிறார். டிஜிட்டல்மயமாக்கல் என்ற போர்வையில் தனி நாடகத்தை நடத்தி நாட்டை மயக்க நிலையில் வைத்திருந்தாலும், இன்றும் அரச சேவையின் பல இடங்களில் கணினிகள் இருக்கட்டும், குறைந்தபட்ச இணைய வசதி கூட இல்லை.
ஒருபோதும் அரச நிர்வாகச் சேவையில் இருந்திராத சூரியப்பெரும அவர்களுக்கு, திறைசேரிச் செயலாளர் போன்ற பாரிய பொறுப்பை வழங்கி அபாரமான பெறுபேறுகளை எதிர்பார்ப்பது அறிவீனமான செயலாகும். கோடீஸ்வர வர்த்தகரும், மேல் மாகாண ஆளுநரும், ஜனாதிபதியின் வெளிநாட்டு முதலீட்டு விசேட பிரதிநிதியுமான ஹனீஃப் யூசுப், ஹுலங்கமுவ முதலீட்டுச் சபையின் தலைவராகப் பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட நிறைவடைவதற்குள் மௌனமாக ஒதுங்கிக்கொண்டார்.
கொழும்பின் உயர்மட்டச் சமூகமும் களத்தின் இதயத்துடிப்பும்
அதேபோல், கொழும்புச் சமூகத்தில் இருந்துகொண்டு மேற்கத்திய உலகின் டொலர்கள், பதவிகள் மற்றும் விருதுகளுக்காகப் போட்டியிடும், ஒருபோதும் அரச கட்டமைப்பின் பொறுப்பை ஏற்காத குழுவினர் இன்று நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றனர். தமது தனிப்பட்ட கருத்தை அரசாங்கத்தின் கொள்கையாக நாளுக்கு நாள், மணிக்கு மணி உச்சரிக்கும் கொழும்புச் சமூகத்தின் அறிவாளிகள் எனக் கூறிக் கொள்வோரும், சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பொருளாதார ஆலோசனை வழங்கும் நிபுணர்களும் இந்த நாட்டிற்கு இழைக்கும் தீங்கு சாதாரணமானதல்ல.
கலாநிதி காமினி கொரியா, கலாநிதி லால் ஜயவர்தன, கலாநிதி ஜயந்த பண்டார கேலேகம மற்றும் கலாநிதி சமன் கேலேகம போன்ற மகத்தான பொருளாதார நிபுணர்களை உருவாக்கிய நாட்டில், இன்று பொருளாதாரக் கதையாடலை ஆக்கிரமித்துள்ள இந்த வெற்று மனிதர்களைக் காணும்போது கடும் அச்சமும் மிகுந்த கவலையுமே மேலோங்குகிறது.
இனிவரும் கட்டுரைகள் மூலம் கொழும்பின் உயர்மட்டச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவோரின் கதைக்கு இணையாக, இந்த நாட்டின் உண்மையான மக்களின் இதயத்துடிப்பின் கதையை நான் உங்களிடம் கொண்டு வருவேன்.


