Tamil Leader News
முக்கியம்
பொருளாதாரம் ஸ்திரமடைந்த போதிலும் வர்த்தகர்கள் இன்னமும் காத்திருப்பது ஏன்?●டொலர் நெருக்கடிக்கான தீர்வு 'சர்வதேச கல்வி மையமாக' மாறுவதே!●2027இன் சிறந்த சுற்றுலாத் தளமாக இந்தியா: உண்மையான இந்தியாவைக் காணும் பெண்கள்!●ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் காலமானார்●பஹ்ரைனில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிவுறுத்தல்!●மத்திய வங்கி வட்டி வீதம் 9 சதவீதமாக உயர்வு!●$ 500 மில். இலக்கு பூஜ்ஜியத்துக்கு: நகர அபிவிருத்தி மோசடி அம்பலம்!●காணாமல் ஆக்கப்பட்டோரை அடையாளம் காண DNA வங்கி: BTF அவசர வேண்டுகோள்!●'யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு இன்னமும் நிரந்தர வதிவிடங்கள் இல்லை!'●காசல்ரீ நீர்த்தேக்கம் குப்பைகளால் நிரம்பியதால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகள் நெருக்கடியில்!●
செய்திகள்

டொலர் நெருக்கடிக்கான தீர்வு 'சர்வதேச கல்வி மையமாக' மாறுவதே!

Menaka

Menaka

நவம்பர் 20, 2026 • 9:59 AM

டொலர் நெருக்கடிக்கான தீர்வு 'சர்வதேச கல்வி மையமாக' மாறுவதே!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின், இலங்கையை ஒரு பிராந்தியக் கல்வி மையமாக (Regional Education Hub) மாற்றியமைக்க வேண்டும் எனச் சர்வதேச உயர்கல்வி ஆலோசகர் கொலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
  • இன்று மலேசியா சர்வதேசக் கல்வி ஊடாக வருடத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது.
  • உள்நாட்டு வரி வருமானங்களை எவ்வளவுதான் அதிகரித்தாலும், வெளிநாட்டுக் கடன் சுமை மற்றும் டொலர் பற்றாக்குறையிலிருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதற்கான சவால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
எழுத்து அளவு:

அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின், இலங்கையை ஒரு பிராந்தியக் கல்வி மையமாக (Regional Education Hub) மாற்றியமைக்க வேண்டும் எனச் சர்வதேச உயர்கல்வி ஆலோசகர் கொலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வரி வருமானங்களை எவ்வளவுதான் அதிகரித்தாலும், வெளிநாட்டுக் கடன் சுமை மற்றும் டொலர் பற்றாக்குறையிலிருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதற்கான சவால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

இந்தப் பொருளாதாரப் பொறியிலிருந்து மீள்வதற்கு இலங்கையிடம் உள்ள இறுதியானதும் நிலையானதுமான துருப்புச்சீட்டு, நாட்டை ஒரு சர்வதேசக் கல்வி கேந்திர நிலையமாகக் கட்டியெழுப்புவதே என 'ஜீவா எஜுகேஷன்' (Jeeva Education) நிறுவனத்தின் தலைவர் கொலித பெர்னாண்டோ சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா கைப்பற்றும் பிராந்திய வாய்ப்பு

தெற்காசியப் பிராந்திய மாணவர்களிடையே சர்வதேசப் பட்டப்படிப்புகளுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • வெளிநாட்டுக் கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் மாணவர் விசா விதிகளைக் கடுமையாக்கியுள்ளமையும், அந்நாடுகளில் நிலவும் வாழ்க்கைச் செலவு மற்றும் தொழில் நெருக்கடிகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

  • இந்தியாவின் முனைப்பு: இந்த இடைவெளியை உடனடியாக இனங்கண்ட இந்தியா, தனது பழைய சட்டங்களைத் தளர்த்தி டீக்கின் (Deakin) மற்றும் வொலொங்கொங் (Wollongong) போன்ற முன்னணி அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் கிளைகளைத் தனது நாட்டில் நிறுவுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

1980 இல் நாம் தவறவிட்ட மலேசிய முன்மாதிரி

புவியியல் அமைவிடம் மற்றும் சமூகச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், பிராந்தியக் கல்வி மையமாக மாறுவதற்கு இந்தியாவை விட இலங்கைக்கே அதிக சாதகமான வாய்ப்புகள் உள்ளதாக கொலித பெர்னாண்டோ தனது முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1980களில் மலேசியாவிற்கு முன்னரே இவ்வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்த போதிலும், அக்காலத்தில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் அது எம்மால் தவறவிடப்பட்டது. இன்று மலேசியா சர்வதேசக் கல்வி ஊடாக வருடத்திற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. அதனுடன் இணைந்ததாகத் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சேவைத் துறைகள் ஊடாக அந்நாட்டிற்குக் கிடைக்கும் மறைமுகப் பொருளாதாரப் பலன்களும் மிகப் பெரியதாகும்.

இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் மூன்று நடைமுறை யோசனைகள்

வெறும் அழைப்புகளை விடுப்பதைத் தாண்டி, தெளிவான வழிகாட்டலுடன் (Roadmap) நடைமுறைப்படுத்தக்கூடிய மூன்று யோசனைகளை அவர் முன்வைத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் இலவசக் கல்விக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்பதுடன், கிடைக்கும் அந்நியச் செலாவணி ஊடாக அதன் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என அவர் கருதுகிறார்:

  1. அரச பல்கலைக்கழக வசதிகளை விரிவுபடுத்துதல்: இலவசக் கல்வி உரிமைக்குத் தடையின்றி அரச பல்கலைக்கழகங்களின் இடவசதிகளை மேம்படுத்தி, நாட்டிலுள்ள தனியார் மற்றும் சர்வதேசப் பாடசாலை மாணவர்களுக்கு நியாயமான கட்டணத்தில் அங்கு கல்வி கற்க வாய்ப்பளித்தல். இதன் மூலம் வெளிநாட்டுக் கல்விக்காக வருடந்தோறும் வெளியேறும் மில்லியன் கணக்கான டொலர்களை நாட்டிற்குள் சேமிக்க முடியும்.

  2. முறையான ஒழுங்குபடுத்தலும் புதிய நிறுவனமும்: தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முறையான ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்தி, தற்போதுள்ள சர்வதேசப் பல்கலைக்கழகக் கிளை வலையமைப்பை வெளிநாட்டு மாணவர்களுக்காக விரிவுபடுத்துதல். இதற்காகக் கல்வி அமைச்சின் கீழ் தனியான ஒருங்கிணைப்பு நிறுவனமொன்றை நிறுவுமாறு அவர் யோசனை முன்வைக்கிறார்.

  3. பிராந்தியக் கல்வி முதலீடுகளை ஊக்குவித்தல்: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊடாகச் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த புதிய நிறுவனங்களை உருவாக்குதல். இது அரச பல்கலைக்கழக அனுமதியை இழக்கும் உள்நாட்டு மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவிட்டு, நாட்டிற்கு டொலர்களைக் கொண்டுவரும் பிரதான வழியாக அமையும்.

தற்போதைய அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் இது குறித்துத் துரித கவனம் செலுத்தினால், இன்னும் பல தசாப்தங்களுக்கு நாட்டைக் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான பலமான அத்திவாரத்தை இட முடியும் என கொலித பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...