உலகப் புகழ்பெற்ற 'Travel + Leisure' சஞ்சிகை, 2027 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கான சிறந்த நாடாக இந்தியாவைப் பெயரிட்டுள்ளது.
ஆன்மீகத் தன்மை, பல்வகைக் கலாச்சாரங்கள் மற்றும் அளவற்ற வண்ணங்களைக் கொண்ட இந்தியா எப்போதும் உலகின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்த்த தேசமாகும். சுற்றுலா வழிகாட்டிகளில் காணப்படும் அழகான சித்திரத்தை விட, உண்மையான இந்தியாவிற்குள் பயணிப்பது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாகும்.
குறிப்பாகப் பெண்கள் இந்தியாவிற்குள் தனியாகப் பயணிப்பது சவாலானது என்ற கருத்து உலகளவில் நிலவுகிறது. சுற்றுலாத் துறையில் அதிக அனுபவம் கொண்ட மூன்று பெண்கள், 'தி கார்டியன்' (The Guardian) பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கையில், வழக்கமான சுற்றுலாத் தளங்களைத் தாண்டிச் செல்லும்போதுதான் இந்தியாவின் உண்மையான இதயத்துடிப்பை உணர முடியும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கையின் ஓசை மட்டுமே கேட்கும் இமயமலைப் பயணம்
இமாச்சலப் பிரதேசத்தின் 'தீர்த்தன்' (Tirthan) பள்ளத்தாக்கு ஊடாக மேற்கொண்ட கால்நடைப் பயணத்தையே தமது வாழ்வின் மறக்க முடியாத பயணமாகச் சுற்றுலா எழுத்தாளர் ஷிவ்யா நாத் குறிப்பிடுகிறார்.
ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த மலையேற்றத் துறையில், அப்பகுதியில் பயிற்சி பெற்ற பெண் வழிகாட்டிகள் குழுவுடன் அவர் இப்பயணத்தை மேற்கொண்டார். வீட்டிற்கு வெளியே இரண்டு இரவுகளைத் தங்குவதற்குக் கூடக் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறுவதற்கு அப் பெண்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
அடர்ந்த காடுகள், பழமையான பாலங்கள் மற்றும் ஓடும் நதிகளுக்கிடையே சென்ற அப்பயணத்தில் பறவைகளின் ஓசை மட்டுமே கேட்டது. காட்டிலிருந்து பறித்த கீரை வகைகளைச் சமைத்து நதிக்கரையில் கூடாரம் அமைத்துத் தங்கிய அந்த இரவு, இயற்கையோடு இணைந்த அற்புதமான அனுபவமாக அமைந்ததாக ஷிவ்யா கூறுகிறார்.
கிராமியக் கலாசாரமும் காணாத சமூக நடைமுறைகளும்
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரான அஃப்ஷா சேத்திக்கு மிகவும் நெருக்கமான அனுபவம், வட கர்நாடகப் பகுதியிலுள்ள விவசாயக் குடும்பம் ஒன்றோடு ஒரு வாரம் தங்கியிருந்தபோது கிடைத்துள்ளது. பாடசாலைத் திட்டமொன்றின் கீழ் அங்கு சென்ற அவர், நெல் மற்றும் பாக்கு பயிரிடும் கிராம மக்களின் வாழ்வை அனுபவித்துள்ளார்.
-
இயற்கை அனுபவம்: அருவிகள் மற்றும் காடுகளுக்கிடையே நடந்து சென்று, கால்களில் ஒட்டும் அட்டைகளுக்கு உப்பு வைக்கும் அந்த நாட்கள் தனக்குப் புதியதொரு உலகைத் திறந்து காட்டியதாகக் குறிப்பிடுகிறார்.
-
கலாசார நடைமுறைகள்: அந்த வீட்டில் தங்கியிருந்தபோது, தனது தோழிக்கு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்த அக்கிராமக் குடும்பம், இருவரும் உறங்குவதற்காக வீட்டின் முற்றத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. கிராமியக் கலாச்சாரத்தில் இத்தகைய நடைமுறைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், வானில் நட்சத்திரங்களைப் பார்த்து இரவு முழுவதும் உரையாடிக் கழித்த அந்தக் காலம் மிக இனிமையான நினைவு என அஃப்ஷா நினைவுகூர்கிறார்.
சுற்றுலா நெரிசலும் 'இன்ஸ்டகிராம்' சவாலும்
இந்தியாவின் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சியடைவதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டுப் பயணிகளின் அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் இந்தியாவுக்குள் சுமார் 2.95 பில்லியன் உள்நாட்டுப் பயணங்கள் பதிவாகியுள்ளன; இது முந்தைய ஆண்டை விட 17.5 சதவீத வளர்ச்சியாகும்.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2026 சுற்றுலா அபிவிருத்திச் சுட்டெண்ணில் 31 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் 43 சதவீதமானோர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதால் ஏற்பட்டுள்ள பிரதான சிக்கல் குறித்துக் கோவாவில் வசிக்கும் நயனிகா காஃபினோ சுட்டிக்காட்டுகிறார். அழகிய இடமொன்றின் புகைப்படம் 'Instagram' போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியான உடனேயே, அவ்விடத்திற்குத் தாங்க முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோதுவதாக அவர் கூறுகிறார்.
இதனால் அழகிய சூழலியல் தொகுதிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயணிக்கும் இடங்களின் துல்லியமான இருப்பிடத்தை (Geotag) சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறும், அப்பகுதி மக்களுக்கு நேரடியாக வருமானம் கிடைக்கும் சமூகச் சுற்றுலாத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்குமாறும் சுற்றுலா எழுத்தாளர் ஷிவ்யா நாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பும் உபசரிப்பும்
தனியாகப் பயணிக்கும் பெண்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுத்தமான சுகாதார வசதிகள் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இம்மூவரும் ஏற்றுக்கொள்கின்றனர். பிரம்மாண்டமான நட்சத்திர விடுதிகளுக்குப் பதிலாக, குடும்பங்களால் நடத்தப்படும் சிறிய தங்கும் இடங்களை (Homestays) தெரிவு செய்வது தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது அவர்களது கருத்தாகும்.
எந்தவொரு விருந்தினரையும் ஒரு தேநீர்க் கோப்பையுடனோ அல்லது உணவோடு உபசரிக்கத் தயாராக இருக்கும் விருந்தோம்பல் நிறைந்த நாடு இந்தியா. உண்மையான பயணி ஒருவர் செய்ய வேண்டியது, தான் காணும் அழகை ரசிப்பதுடன், அந்தச் சூழலையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்வதேயாகும்.


